Oct 3, 2013

ஒரு காலம் இருந்தது.


ஒரு காலம் இருந்தது.


ஒரு காலம் இருந்தது மகனே!
ஒரு காலம் இருந்தது.

மனிதாபிமானத்தையும்
மனச்சாட்சியையும்
எம்மில் பெரும்பாண்மையினர்
நேசித்த ஒரு காலம் இருந்தது.

கடவுளுக்கு பணிந்த காலம்.
சத்தியத்தை மதித்த காலம்.
நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
பெண்களை போற்றிய காலம்.
நீதியை நிலைநாட்டிய காலம்.
நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.

நாடகக்கலை வளர்ந்த காலம்.
நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.
ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.

பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
கோயில்கள் சேவை செய்த காலம்.
மழை தவறாமல் பொழிந்த காலம்.
மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
தண்ணீர் விற்கப்படாத காலம்.
வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.

மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.

எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.

சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
வாகன நெரிசல் இல்லாத காலம்.
இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
ஊர்கூடி தேர் இழுத்த காலம்.

இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத
ஒரு காலமிருந்தது மகனே!
ஒரு காலமிருந்தது.

அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.

---xxx----

தீபிகா.
02.10.2013
05.00 Pm.

Sep 8, 2013

குடியிரவுகுடியிரவு


இரவைக் கிழித்துக் கொண்டொலிக்கும்
குடிகாரனின் தத்துவப் பாடலில்
கரைந்து கசிகிறது
ஒரு குடும்பத்தின் கண்ணீர்.

வெட்கமும்,அவமானமும் தின்ற
அவனது
வளர்ந்த பெண்பிள்ளைகளின் முகங்கள்
கண்ணீர் குடித்து வீங்கியிருக்கின்றன.

காலைச் சத்தியங்களை
உடைத்தெறிந்து கொண்டு
மீண்டும் மரமேறும்
குடிகாரனின் வேதாளம்
ஒரு மாலைத் தேனீரைப் போல
குடியைக் குடித்துக் கொண்டு ஆடுகிறது.

பெண்களின் தலை முடியிழுத்து
சண்டையிடப் போகும்
குடிகார வீரனுக்காக
காத்திருக்கிறது அவனது வீடு.

பிறப்புறுப்புக்களால் நிறையப் போகும்
அவனது வசைச் சொற்களை
ஒளிந்திருந்து கேட்கத் தயாராகிறது
ஊரின் செவிகள்.

வீதியோரமாய் வளர்ந்து நின்று
எல்லாவற்றையும் பார்த்து புன்னகைக்கிறார்.
குடிமக்களின் மேல் அக்கறையுள்ள
மாண்புமிகு தலைவர்.


---xxx---

தீபிகா

08.09.2013
07.38 Pm.

Aug 14, 2013

மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்


மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்


உங்களுக்குத் தெரியுமா?

நாங்களொரு பருக்கை சோற்றுக்காக
உமிக் கும்பிகளை
இரகசியமாய் இரவுகளில் கிளறியவர்கள்.

யானை மிதித்த கால்தடத்திற்குள்
வற்றாது மிச்சமிருந்த தண்ணீரில்
தாகம் தீர்த்துக் கொண்டு தப்பி வந்தவர்கள்.

கடவுள்கள் உறுப்பிழந்து
அனாதையாகி செத்துக் கிடந்ததை
நம்பமுடியாத கண்களுக்குள் ஏந்தியவர்கள்.

வீடுகளை பார்த்துக் கொண்டு
பதுங்குகுழிக்குள் படுத்துறங்கியவர்கள்.
மின்விளக்குகளை அணைத்துவிட்டு
மெழுகுதிரி வெளிச்சங்களில் படித்தவர்கள்.

விமானங்களை கண்டால்
விழுந்தடித்துக் கொண்டு பதுங்கியவர்கள்
பட்டாசுகள் வெடித்தாலும்
காதுகளைப் பொத்திக்கொண்டு படுத்தவர்கள்.

நிலவெறிக்கும் இரவுகளை
ரசிக்க முடியாமல் அடைந்திருந்தவர்கள்.
நாய்கள் குரைத்தால்
நடுநடுங்கி வியர்த்து கொட்டியவர்கள்.

நாங்கள்
உறுப்பிழந்த மனிதர்களையும்
உறவிழந்த மனிதர்களையும்
சாதாரணமாய்
மிகச் சாதாரணமாய்
சுமந்து கொண்டிருக்கிறவர்கள்.

விதைத்த பயிரை
அறுவடைக்கு முன்னே
தொலைத்து வந்திருக்கிறவர்கள்.
சிதைத்த கனவுகளை
இதயங்களுக்குள்
சேகரித்து கொண்டு வந்திருக்கிறவர்கள்.

எங்கள் கதை நீளமானது.
எங்கள் கதை துயரமானது.
எங்கள் கதை கண்ணீர் சிந்துவது.
எங்கள் கதை குருதி வழிவது.

நாங்கள் எப்போதும்
மரணங்களோடு வாழ்ந்தவர்கள்.
நாங்கள் இப்போதும்
அகதிகளாகி அலைகிறவர்கள்.

குறித்துக் கொள்ளுங்கள்

நாங்கள்
நம்பிக்கைகளை கைவிடாதவர்கள்.

---xxx----

தீபிகா
11-07-2013
2.15 Pm.

Jul 12, 2013

பிரச்சாரகிபிரச்சாரகி


தன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கும்
கவர்ச்சி வார்த்தைகளை
வெயிலின் சுமை தாங்கிய படி
கால்கடுக்க நின்று கொண்டு
அந்தப் பெண் எல்லோருக்கும்
இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறாள்.

உதாசீனப்படுத்திக் கொண்டும்
புறக்கணித்துக் கொண்டும்
சிலவேளைகளில்
வசவுகளை வழங்கிக் கொண்டும்
கடந்து போகிற எல்லா முகங்களிடமும்
மனனம் செய்து வைத்திருக்கிற
அந்த இரவல் சொற்களை
அவளுடைய குரல் எந்த உணர்ச்சிகளுமற்று
சலிக்காமல் இறைத்துக் கொண்டேயிருக்கிறது.

அவளுக்குச் சொந்தமில்லாத
அந்த வார்த்தைகளின் சத்தியத்தன்மை பற்றி
அவளுக்கு எதுவுமே தெரியாது.
அளவுக்கு மிஞ்சிய ஒப்பனைகளோடு
வீதியில் இறக்கிவிடப்பட்டிருக்கும்
பரப்புரை வாக்கியங்களுக்கான
அந்த ஆடம்பரப் பொருட்களை
அவளுடைய கைகள்
ஒருபோதும் தடவிப் பார்த்ததுகூட இல்லை.

அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.
நாக்கு வரள தான் உச்சரித்துக் கொண்டிருக்கும்
அந்த வார்த்தைகள் தான்
தன்னுடையதும்...
தன்னுடைய குழந்தையினதும்...
வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கின்றன
என்ற உண்மை மட்டும்.

---xxx----

தீபிகா
09-07-2013
10.04 Am

Jul 9, 2013

மண்ணவன்

மண்ணவன்

ஒரு யுத்தத் தோல்வியில் 
சரணடைந்து கொண்ட அவனை
சீருடையில் காணப்பயந்த அவர்கள்
நிர்வாணமாக்கி நிறுத்தினார்கள்.

அப்போதும்
விடுதலையின் தாகமெரிந்து கொண்டிருந்த
அவன் விழிக்கிடங்குகளை பார்க்க அஞ்சியவர்கள்
கண்களை துணி கொண்டு கட்டினார்கள்.

நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை அழுத்தி
சுடப்போவதாகக் கத்தியவர்களின் முன்னால்
அவன் கையெடுத்துக் கும்பிடாததால்
கைகளை பின்னால் பிணைத்துக் கட்டினார்கள்.

மரணத்துக்குப் பயந்த எந்த வார்த்தைகளையும்
அவன் உச்சரிக்க மறுத்ததால்
துப்பாக்கிப் பிடியால்
பற்களை நொருக்கிக் கொட்டினார்கள்.

இரத்தம் ஒழுகிற வாயோடு
அவன் அமைதியாக இருந்தான்.
எல்லாம் தெரிந்த ஞானியைப் போல.

ஆட்காட்டிக் குருவி
சாவுப்பாடலை அலறத் தொடங்கியிருந்த
ஒரு நள்ளிரவில்
பச்சைப் புற்களில் ரத்தம் பிசுபிசுத்த
சப்பாத்துப் பாதை வழியாக
அவர்கள் அவனை
பலிக்களத்துக்கு இழுத்துப் போனார்கள்.

நிலவு பார்த்துக் கொண்டேயிருக்க
அவனுடைய உயிர்ப் பூவை
பிடரியின் வழியாக அவர்கள் கொய்த போது
அவனது தாய் முத்தமிட்ட
நெற்றிப் பொட்டிலிருந்து
தாயின் குங்குமநிறக் குருதி வழிந்தோடியது.

அடுத்த பூவை இழுத்து வருவதற்கு
கோழைகள் திரும்பி நடந்தார்கள்.

விழுந்து கிடந்த வீரனின்
இறுகப் பொத்திய கைவிரல்களுக்கிடையால்
கொட்டுப்பட்டுக் கொண்டிருந்தது
அவனது தாய் மண்.

---xxx---


தீபிகா
22-06-2013
06.05 P.m

Jul 8, 2013

பிரிவுக்கு தெரிந்தது


பிரிவுக்கு தெரிந்தது

யாருமற்றஇரவில்
தனித்திருக்கும் நிலவின் கண்களை
ஒரு தூக்கம் துரத்தப்பட்ட விழிகளோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னூர் தெரிந்தது.
எருமைகள் படுத்திருக்கும் வயல்களில்
முதுகுகளில் விருந்துண்டு கொண்டிருந்த
வெள்ளைக் கொக்குகள் தெரிந்தன.
அறுகம்புல் படங்கு விரித்திருந்த
ஒற்றையடிப் பாதை தெரிந்தது.
அதில் தடயமிழுத்துப் போய்க் கொண்டிருந்த
நாக்கிளிப்புளு தெரிந்தது.
காகத்தின் எச்சத்தடம் காய்ந்திருந்த
வீட்டின் மரப்படலை தெரிந்தது.
அரிசிமா வறுத்த அடுப்படிச் சாம்பலுக்குள்
சுருண்டு கிடந்த பூனையின் வால் தெரிந்தது.
கிணற்றடிப் பாசிப்பூக்கள் தெரிந்தன.
மாமரத்தில் குடியிருந்த அணிலின் வீடு தெரிந்தது.
கொடியில் தனிமையாய் தொங்கிய
உடுப்புக் கொழுவிகள் தெரிந்தன.
அணிலரித்து மிச்சம் விட்ட
பழுத்த கொய்யாப்பழப் பாதி தெரிந்தது.
ஒன்றிரெண்டு செவ்வந்திப் பூக்கள் தெரிந்தன.
இருமிக் கொண்டு படுத்திருந்த
அப்பாவின் பித்தை வெடித்த கால்கள் தெரிந்தன.
நிலவு விழுந்து பளபளத்த
அம்மாவின் சுருங்கிய முகத்தில்
ஒரு தெய்வத்தின் சாயல் தெரிந்தது.
பிறகெதுவும் தெரியவில்லை.
என் கண்ணீரைத் தாண்டி.

---xxx---

தீபிகா
07-07-2013
10.06Am

Jul 6, 2013

தகவல்யுகத்து மரணங்கள்தகவல்யுகத்து மரணங்கள்


அவன்
நாளைய பத்திரிகைகளில்
தடித்த எழுத்துடன் தலைப்புச் செய்தியாவான்.
வாராந்த இதழ்களின் முகங்களில்
தன்முகம் காட்டியபடி எங்கும் தொங்குவான்.
செய்வதறியா பார்வையாளனாய்
முகப்புத்தகம்
ஆனமட்டும் தன்மேனியெங்கும்
அவன் பதிவுகளை நிறைத்துக் களைக்கும்.
அவனூரில் தடையுத்தரவு பிறப்பித்து
தன்னிருப்பை சரிபார்த்துக்கொண்டு ஆட்சியடங்கும்.
நீதியான விசாரணை வேண்டுமென்று
கட்சிகள் அறிக்கையிடும்.
வானொலிகள் அவனின் இழப்புச் செய்தியை
வேகமாக வாசித்துக் கொண்டு கடந்து செல்லும்.
ஏதோவொரு தொலைக் காட்சி
அவனின் சாவுடலை நேரலையில் ஒளிபரப்பும்.
நண்பர்கள் கண்ணீர் அஞ்சலியடித்து
மதிற்சுவர்களெங்கும் ஒட்டுவார்கள்.
அவன் முகம் பின்னணியில் மெதுவாயோடும்
நேரலை விவாதத் திரையில்
கருத்தாக்கள் வந்தமர்ந்து
ஒரு மணி நேரம் பேசிச் செல்வர்.
அடுத்தடுத்த வாரங்களில்
அவனுடைய அம்மாவின் கதறல் பேட்டி
அவளின் கண்ணீர் முகத்துடன் வெளிவரும்.
சில வேளைகளில்
அடுத்த மாத நீயா நானாவில்
அவன் பெயரடிபடும்
ஒரு பொது விவாதமும் நடந்து முடியும்.
அவனை நேசித்த உறவுகளின் இதயங்கள்
அவனைப் பற்றிய அழுத்தும் நினைவுகளை
கண்ணீர்வழி கீழிறக்கி வைத்து
மெல்ல மெல்ல விடுபட்டு வெளிவரும்.

அவ்வளவும் தான்.

அத்துடன்
அவனை எல்லோரும் மறந்து போய்
அடுத்துவரும்
இன்னொரு பரபரப்பான முகத்தை
சுமந்து செல்ல தயாராகிவிடுவார்கள்.

---xxx---


தீபிகா
04-07-2013
07.57 Pm.

Jul 4, 2013

நாங்கள் செய்வித்த (தற்)கொலைகள்நாங்கள் செய்வித்த (தற்)கொலைகள்


உயிர் தந்த பிரமனே!
நாங்களே எல்லாத் தற்கொலைகளுக்கும்
காரணமாக இருக்கின்றோம்.
குற்றவுணர்வுள்ள சாட்சிகளாகவுமிருக்கின்றோம்.

எங்கள் ஜாதிவெறியின் நெருப்புப் பார்வையை
எதிர்கொள்ள முடியாத திவ்யாவின் தந்தையை
நாங்கள்
அவமானம் தாங்காமல் சாகும்படி
வழிநடத்திக் கொன்றோம்.

கிராமங்களுக்கு
அக்கினிப் பூவை பரிசளித்து விட்டு
எங்கள் ஜாதிப்பூவை
கருகிய வீடுகளுக்கு மேலாக
மலரச் செய்து புன்னகைத்தோம்.

தந்தையை இழந்த காதலியை
வெருட்டி...மருட்டி...
வெளித் தெரியாத எல்லா சூழ்ச்சிப் பொறிகளாலும்
வசியப்படுத்திப் பிரித்தோம்.
எங்கள் வெறிப்பிடித்த இலட்சியங்களை
ஒரு பொம்மையாக மாறி
திவ்யா உச்சரிக்கும்படியாக செய்தோம்.

குருட்டு நியாயங்களுக்கு முன்னால்
எங்கள் எல்லா சோடித்த வார்த்தைகளையும்
வெற்றி பெறச் செய்து
காதலியை பிரித்துக் கொண்டு வந்தோம்.

சலவை செய்த மூளையோடு
ஜாதிப் போர்க்களத்தில்
நாங்கள் அவளை களமிறக்கினோம்.
அவளது வார்த்தைகளாலேயே
அவளது காதலனைத் தோற்கடித்தோம்.
இந்தோ
இளவரசனை சாகடித்தும் விட்டோம்.

இனி
தந்தையில்லாத திவ்யா
இளவரசனில்லாத திவ்யா
எப்படி வாழ்வாளோ தெரியாது.
அதுபற்றி எங்களுக்கு கவலையும் கி்டையாது.

நாங்கள்
ஜாதியை வெற்றி பெறச் செய்து விட்டோம்.
எங்களுக்கு அது போதும்.

தோற்றுப் போன காதல் பற்றி
செத்துப் போன உயிர்கள் பற்றி
எங்களுக்கு எந்த கவலைகளுமே இல்லை.

காதலுக்கு...
எங்களுக்கு இந்தியாவில்
தாஜ்மகால் இருக்கிறது.
சினிமா இருக்கிறது.

நாங்களதை அங்கு வாழவைத்துக் கொண்டிருப்போம்.

---xxx----

தீபிகா
04-07-2013
05.32 Pm.


தொடர்புடைய செய்தி இணைப்பு -  http://www.envazhi.com/dharmapuri-divyas-husband-ilavarasan-dead-body-found-at-track/Jul 2, 2013

சிறைவைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்


சிறைவைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்


எமது குழந்தைகள்
சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களறியா
அவர்களுக்கான சுதந்திரப் புல்வெளிகளில்
விளையாட ஆட்களற்று
வண்ணத்துப் பூச்சிகள் சோர்ந்து போயிருக்கின்றன.

ஒரு சிறிய தொட்டியறைக்குள்
சிறைவாழுமெம் குழந்தைகளுக்கு
நண்பர்களாக இருக்கிறார்கள்.
மிகச்சிறிய கண்ணாடித் தொட்டிக்குள்
அடைபட்டுக் கிடக்கும் வண்ணமீன்கள்.

விழித் திரைகள் ஒடுக்கப்பட்ட குழந்தைகள்
சிறையின் மின்சார வெளிச்சங்களில்
ஒளியற்று தனித்திருக்கிறார்கள்.

வெளியே
பாட்டுப்பாட குழந்தைகளில்லா நிலவு
அவர்களுக்காய் அலைந்து கொண்டிருக்கிறது.
மிக்கி மவுசையும், டோறாவையும் தவிர
வேறெதையும் அடையவிடாது தடுக்கிறது
அவர்களின் சிறையுலகு.

அவர்களொரு போதும்
ஒரு எறும்பின் வரிசையை
பின் தொடர்ந்து போனதேயில்லை
ஒரு மாமரக் குயிலுக்கு
பாட்டுச் சொல்லிக் கொடுத்ததுமில்லை.
வண்ணத்துப் பூச்சியொன்றின் மஞ்சளையேனும்
கைவிரல்களால் தீண்டிப் பார்த்ததும் கிடையாது.
ஒரு நாய்க்குட்டியின் வாலில்
ஈர்க்கால் அடித்து அழவைத்துப் பார்க்கவுமில்லை.

புத்தகப் பைகளை மட்டுமே சுமக்கும்
அவர்களின் முதுகுகள்
இதுவரையொரு போதும்
உப்புமூட்டை சுமந்து மகிழ்ந்ததேயில்லை.

கூட்டுக் கோழிகளாய் ஒடுக்கியிருக்கின்ற
மண்படாக் குழந்தைகளின் கால்கள்
மழையைப் பார்த்து அஞ்சுகின்றன.
ஒரு மாடு புல்லுண்பதைக் கூட
குழந்தைகள் டிஸ்கவரி அலைவரிசையில்
அதிசயமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு கடலின் ஓவியத்தை
அலைகளைப் பார்த்திரா குழந்தை விழிகள்
ரசிக்க முடியாமல் திருப்பி விடுகின்றன.

கொக்கக் கோலாவை உறிஞ்சியிழுக்கிற
அவர்களின் பிஞ்சு உதடுகள்
வழுக்கல் செவ்விளநீரை
அலட்சியத்தோடு நிராகரிக்கின்றன.
தேங்காய்ப்பூ குழல் புட்டை
தொட்டுப் பார்க்காமலேயே ஒதுக்குகின்ற
அவர்களின் அவசர வயிறுகள்
நூடில்சுக்குள் சிக்குண்டு கிடக்கின்றன.
பனங்கிழங்கின் சுவையறியா
குழந்தைகளின் பற்களுக்கிடையில்
கொழுவுண்டு கிடக்கிறது லாலிப் பொப்

ஒரு சுண்டெலியைப் பிடித்தபடி
அவர்கள் சவாரிப் போட்டி செய்கிறார்கள்.
சமர்க்களங்களில் போர் புரிகிறார்கள்.
சாப்பாட்டுக் கடை நடத்துகிறார்கள்.
இன்னுமின்னும்
எல்லா சிறை விளையாட்டுக்களுக்கும்
அவர்களுக்கு சிறியதொரு ஒளிரும் திரைமைதானம்
போதுமானதாகவே இருக்கிறது.

எந்திரன்களோடு விளையாடிக் கொண்டிருக்கும்
எமது குழந்தைகளுக்கு
எப்போதேனுமொரு பொழுதொன்றில்
அன்னியர்களாகி விடக்கூடும்
பெற்றோரும் கூட.


---xxx----

தீபிகா
01-07-2013
11.29 Pm


Jul 1, 2013

நான் இன்னும் சாகவில்லை


நான் இன்னும் சாகவில்லை


பூக்களுக்காய் காத்திருக்கிற 
மலர்வளையங்களே
அஞ்சலிக்காய் காத்திருக்கிற 
அழுகைச் சொற்களே
பழையபடம் தேடி பதிவி்ட காத்திருக்கிற 
பதிவர்களே
RIP எழுதக் காத்திருக்கிற 
கருத்தாக்களே
சிறப்பு நிகழ்ச்சி தயார்ப்படுத்தி வைத்திருக்கிற 
தொலைக்காட்சியே
பின்னணி இசைக்கக் காத்திருக்கிற 
இழுவை ஒலியே
அட்டைப்படத்துடன் புத்தகம் அச்சிட
குறிப்பெடுக்கிற ஆசிரியரே
இடத்தை மிச்சம் வைத்திருக்கிற 
தினசரிகளே
விழிகளுக்குள் தேங்கியிருக்கிற 
கண்ணீர்த் துளிகளே

தயவுசெய்து 
கொஞ்சம் பொறுமையாயிருங்கள்.
நான் இன்னும் சாகவில்லை.


---xxx---

தீபிகா
27-06-2013
8.24 Am.

Jun 23, 2013

சங்கீதா: என் பிரியத்துக்குரிய சினேகிதி


சங்கீதா: என் பிரியத்துக்குரிய சினேகிதி
சங்கீதா
என் பிரியத்துக்குரிய சினேகிதி.
அவளில்லாமல்
எனக்கிந்த வாழ்க்கை சாத்தியமேயில்லை.

என் ஆன்மாவின் காயங்களை
அவள் தன் பாடல்களால் வருடிவிடுகிறாள்.
ஞாபகங்களை கிளறியெடுத்து
கண்ணீரில் என்னை மிதக்கச் செய்துவிட்டு
கன்னங்களை இசையால் ஒற்றிக் கொள்கிறாள்.

எனக்குத் தெரியும்.
அவள் என் உயிரின் இரகசியம் என்பது.
அவளுக்கும் தெரியும்
நான் அவளின் ஆயுட்கால ரசிகன் என்பது.

நான் சோர்ந்து விழுகிற போது
மடியில் கிடத்தி புல்லாங்குழல் இசைக்கிறாள்.
நான் துவண்டு துடிக்கிற போது
தூவானத் துளிகளை முகத்தில் தெளிக்கிறாள்.
எந்தப் பிரிவையும் தாங்க முடியாது ஏங்குகிறபோது
தன் சுரங்களை என்னிடம் தந்து இசைக் சொல்லுகிறாள்.

ஒரு பாடலில் கரைந்தொழுகுமென் மனசை
நம்பிக்கை நதியாக்கி அவள் ஓடவிடுகிறாள்.
நான் தனித்திருக்கிற எல்லாப் பொழுதுகளிலும்
அவளென் கூடவே இருக்கிறாள்.

என்
உற்சாகங்களுக்கு சொந்தக்காரி அவள்.
என்
உறக்கங்களுக்கு காரணகர்த்தா அவள்

அவளில்லாத வாழ்க்கையென்பது
என் மூச்சு நின்ற பிறகு தான்.

அது சரி.
நானில்லாத வாழ்க்கையை
அவள் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாள்?


--- xxx ---
தீபிகா
22-06-2013
07.11 P.m


Jun 21, 2013

இன்னிசை அளபெடைகள்


இன்னிசை அளபெடைகள்001
துக்கத் தூசிகளை கழுவிக்கொண்டு
மனதுக்கு மலர்சூட்டுகின்றனர்.
சங்கீத தேவதைகள்.


002
காதுவழி நுழையும்
இசைக் குருவிகளின் பாடலில்
உற்சாகத்தில் நிரம்புகிறது உடற்கூடு.


003
இசையில் தொடங்கி
இசையில் முடிகிறது வாழ்க்கை.
"லப் டப்"


004
பால்மணியோடு தொடங்கி
ஊளைநாயோடு முடிகிறது.
ஒரு சங்கீதத் திருநாள்.


005

பசி கொதிக்கும் வயிற்றுக்குள்
சங்கீதம் இசைக்கின்றன
முறுக்கெடுக்கும் குடல்கள்.


006

கண்ணுக்குத் தெரியாது பறந்துவரும்
ஒலிச் சிறகுகளின் வருடலில்
ஆத்மாவின் காயங்கள் நலம்பெறுகின்றன.


007

இதுவரை கேட்டதில்லை.
கவிதைகளும் சங்கீதமும் இல்லாத
ஒரு காதல் கதையை.


008
வார்த்தைகள் தொலைந்த மௌனத்தை
இசைகளால் நிரப்பிக் கொள்கிறார்கள்.
காதலர்கள்.


009
எப்பொழுதும்
உலகஅதிசயங்கள் ஏழு தான்.
ச,ரி,க,ம,ப,த,நி.


010
இசையில்லாத ஒரு உலகத்தில்
காதுகளில்லாத மனிதர்கள்
உயிர் வாழக் கூடும்.


----xxx ----xxxxதீபிகா
21-06-2013
5.08 P.m


(June - 21 World Music Day)

Jun 20, 2013

ஒரு அகதியின் பாடல்

ஒரு அகதியின் பாடல்


ஒரு அகதியாய் இருத்தலிலெரியும்
என் ஆழ்மன நெருப்பை
உங்களுக்கு காட்ட முடியவில்லை என்னால்.

உடைந்து நொருங்கிப் போகிற
ஒரு பல்லி முட்டைக்காகவும்...
தவறி விழுகிற ஒரு அணிலின் கூட்டுக்காகவும்...
கதறியழுகிறதென் அகதிக் கண்கள்.

எந்தக் கோபுரங்களின் நிழல்களும்
எனக்கு வசதியாயேயில்லை.
எந்தப் பூங்காக்களின் அழகும்
என் மனதின் தாகத்தை தணிக்கவேயில்லை.

எனக்கொரு அழகிய காதலி இருந்தாள்.
நான் அவளைத் தொலைத்தேன்.
எனக்கொரு அன்பான அக்கா இருந்தாள்.
நான் அவளைப் பறிகொடுத்தேன்.
எனக்கொரு உயிரான அம்மா இருந்தாள்.
நான் அவளைப் பிரிந்து வந்தேன்.
எனக்கொரு பாடசாலை இருந்தது.
நான் அது தரைமட்டமாகக் கண்டேன்.
எனக்கொரு நிலம் இருந்தது.
நான் அதை இழந்து வந்தேன்.

எனக்கெதுவும் வேண்டாம்.
என் நிலத்தில்
என் சொந்தங்களோடு
எனக்கான வாழ்வு மட்டும் போதும்.

நான் அதைப் பெற்றே தீருவேன்.
இல்லையேல்
என் குழந்தைகள் அதைப் பெறுவார்கள்.
அதுமில்லையேல்
என் குழந்தைகளின் குழந்தைகள் பெறுவார்கள்.

நாங்கள் ஒருபோதும்
அகதிகளாகவேயிருக்க சம்மதிக்கவே மாட்டோம்.
எம் மண்ணின் மீது சத்தியமாக.

----- xxx ------


தீபிகா
20 - 06 - 2013
3.44 P.m


( யூன் 20 - சர்வதேச அகதிகள் தினம்)Jun 19, 2013

வெள்ளைப் பலி

வெள்ளைப் பலி


ஏணைக்குள் தூங்கிக் கிடந்த
தன் தம்பிக் குட்டியை
தூக்கம் கலையாமல் துணி விலக்கி
நெற்றியில் முத்தமிட்டுச் சென்றிருக்கலாம்.

சாப்பிட்ட கேக்துண்டின் பாதியை
பின்னேரம் வந்து சாப்பிடுவதாக
மிச்சம் வைத்துவிட்டு கிளம்பியிருக்கலாம்.

தான் வளர்க்கும் செல்லப் பூனைக்குட்டிக்கு
மறவாது பால் வைக்கும்படி
அம்மம்மாவிற்கு சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

இன்று மாலை
புது புத்தகப்பை வாங்கித் தருவதான உறுதியை
தன் அப்பாவிடம் பெற்றுச் சென்றிருக்கலாம்.

நேரம் போவதறியாமல்
சுட்டிரீவி பார்த்துக் கொண்டிருந்ததற்காய்
திட்டு வாங்கிக் கொண்டு புறப்பட்டிருக்கலாம்.

அவசரமாய் புறப்பட்டு விட்டு
திரும்பியோடி வந்து
அம்மாவின் கன்னங்களை
முத்தங்களால் நிறைத்துவிட்டுப் போயிருக்கலாம்.

வந்துகொண்டிருக்கிற பிறந்தநாளின் திகதியை
இன்றுமொரு முறை நாட்காட்டியில்
தொட்டுப் பார்த்து விட்டுக் கிளம்பியிருக்கலாம்.

வாசல் மறையும் தெரு வளைவில்
வழக்கம் போல திரும்பி மீண்டுமொரு தரம்
முத்தங்களை பறக்கவிட்டுவிட்டு மறைந்திருக்கலாம்.

இப்படி எவற்றையும்
இனி காலமெல்லாம்
நினைத்து நினைத்து அழுது கரைவதற்காய்
பள்ளிக்குப் போன அந்த வெள்ளைப் பிள்ளைகள்
எங்களுக்காய் விட்டுப் போயிருக்கலாம்.
தீபிகா
19-06-2013
3.46 P.m-----------------------------------------------------------------------------
19-10-2013
செய்தி - புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு லோடு ஆட்டோவில் மாணவ, மாணவிகள் 12 பேர் லிப்ட் கேட்டு சென்றுகொண்டிருந்தனர்.
வளநாடு என்று இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த பி.எல்.ஏ. நிறுவன தனியார் பேருந்து மோதியதில் லோடு ஆட்டோ அப்பளமாக நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 மாணவ மாணவிகள் பலியானார்கள். மேலும் 4 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
(நக்கீரன்) (படம் - பகத்சிங்)

Jun 4, 2013

மனதின் பிரியத்துக்குரிய தோழமை

மனதின் பிரியத்துக்குரிய தோழமை

இயற்கையிடமிருந்து விலகியிருக்கிற 
ஒரு மனிதனுடைய உடலும், உள்ளமும் ஒருபோதும்
ஆரோக்கியமானவையாக இருக்க முடியாது.
எந்த விளம்பரங்களுமற்று, இயற்கை மனிதனை எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையைப் போல் ஒரு சிறந்த ஆசான் மனிதர்களுக்கு சாத்தியமே இல்லை. மனசின் காயங்களுக்கு இயற்கை இடுகிற களிம்புகளைப் போல எந்த மருத்துவமும் களிம்பிட முடியாது. 


அன்பாய் தழுவுகிற பச்சை மரக் காற்றும், 
அமைதியாய் தவழ்கிற ஆற்று நீரின் பயணமும், 
நடக்கையில் கூட வருகிற நிலவின் சினேகமும், 
மாலை வானத்தின் மௌன வரவேற்பும், 
சத்தமின்றி பொழிகிற பனித்துளி அழகும், 
சத்தமோடு பொழிகிற மழையி்ன் சாரல்களும், 
மனித மனசை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. 

இயற்கை மனிதனிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. எதையும் எதிர்பார்க்காத தாயின் அன்பு இயற்கையிடமிருந்து தான் தாய்மைக்கு கி்டைத்திருக்க வேண்டும். இயற்கையை நேசிக்கிற குழந்தை எந்த சூழ்நிலைகளிலும் வாழ்க்கையின் பிடிப்பை இழந்து விடாது. இயற்கையை நேசியுங்கள். அங்கு இறைவனை காண்பீர்கள். இயற்கை என்பது இறைவனின் கரங்களால் உருவாக்கப்பட்ட படைப்பு.

---xxx----


தீபிகா.
07-05-2012
11.00 Am.

Jun 1, 2013

மிச்சமிருக்கும் பயணம்

மிச்சமிருக்கும் பயணம்


செத்துப் பிழைக்கும் 
ஒரு உச்சி வெயில் 
பேரூந்துப் பயணத்தின் முடிவில் ... ....

மூச்சுத் திணறலில் இருந்து விடுபட்டு வந்த
அனுபவம் மிச்சமிருக்கும். 
நெருக்கித் திருகிய உடம்புகளதும்,
விளக்கி உழக்கிய கால்களதும்
அடையாளங்களும் வலியும் மிச்சம் இருக்கும்.
சூரியக் கோபங்களில்
தங்களுக்குள் சிந்திக் கொண்ட
சனங்களின் அகோர வசைமொழிகள் 
மிச்சமிருக்கும் 
குளறிய குழந்தைகளது 
அழுகையொலிகள் மிச்சமிருக்கும்.
சில்லறைக்கு சினந்த 
நடத்துனரின் கோபம் மி்ச்சமிருக்கும்.
இடைவெளிகளுக்குள்ளால் 
மறைந்து மறைந்து சந்தித்த 
ஒரு சோடி எதிர்ப்பால் பார்வைகள் மிச்சமிருக்கும்.
யாரோ செல்பேசியில் சத்தமாய் கதைத்த
ஒரு குடும்பத்தின் 
நாட்குறிப்பொன்றும் மிச்சமாய் இருக்கும்.
கசங்கிப் போன சட்டையும்
வழிந்து ஒழுகும் வியர்வையும் மிச்சமிருக்கும்.
குமட்டிக் கொண்டு வருகிற
செத்த எலியின் நாத்தம் மிச்சமிருக்கும்.
துப்பாது வைத்திருந்த 
எச்சில்துளி மிச்சமிருக்கும்.


----xxx------

தீபிகா
22-05-13
05.28 P.m

May 30, 2013

எழுத்தாளர்களே! வேண்டாம்.எழுத்தாளர்களே! வேண்டாம்.

எழுத்தாளர்களே!

வேண்டாம்.
உங்களின் ஏதாவொரு வரியில்
கட்டுண்டு போனவர்கள் நாங்கள்.
உங்களை நம் கற்பனைகளின்
உயரத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
கீழே விழுத்தி விட சம்மதமில்லை.

வேண்டாம்.
உங்களைப் பற்றி
நாம் எதுவுமே அறிய வேண்டாம்.
உங்களின் எழுத்துக்களில் அழகு கண்டு
காதல் கொண்டவர்கள் நாங்கள்.
அந்த தீராக் காதலில்
நாங்கள் தோற்றுப் போக விருப்பமில்லை.

வேண்டாம்.
வாழ்வின் பாரத்தை
வார்த்தைகளின் ஈரத்தால் நிரப்பிக் கொள்ள
புத்தகங்களை நேசிப்பவர்கள் நாங்கள்.
சமூகம் கிழித்த வாழ்வின் காயங்களுக்கு
களிம்பு தடவுவதற்காக வாசிப்பவர்கள் நாங்கள்.
மீண்டும்
புண்களால் வலியுற சம்மதமில்லை எங்களுக்கு.

வேண்டாம்.
தெரிந்த அரசியல் வாதிகளாலும்...
தெரிந்த வியாபாரிகளாலுமே..
நாங்கள் வெம்பிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் விம்மியழ முடியவில்லை மனசுக்கு.

வேண்டாம்.
உங்கள் எழுத்து முகங்களில்
மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம்.
அந்த மரியாதைக் கண்ணாடிகளில்
உங்கள் சுயமுகங்களின்
விம்பங்கள் விழுந்து கீறல் விழவேண்டாம்.

வேண்டாம்.
எழுத்துக்கும் உங்களுக்கும் இடையில்
எந்த இடைவெளிகளுமில்லா மனிதர்களாய்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என
நாம் ஏதோ நம்பிக்கொண்டிருக்கின்றோம்.
அந்த நம்பிக்கையை சாகடித்து விடாதீர்கள்.

வேண்டாம்.
ஆத்ம திருப்திக்காக புத்தகங்களை
கையிலெடுத்தவர்கள் நாங்கள்.
ஈரமுள்ள மனிதர்களை
எழுத்துக்களுக்குள் தேடி வந்தவர்கள் நாங்கள்.
எங்களை ஏமாற்றி விடாதீர்கள்.

வேண்டாம்.
உங்களின் முகங்களை
நாங்கள் ஒருபோதும் பார்க்கவே வேண்டாம்.
உங்களின் வாழ்க்கை பற்றி
நாங்கள் ஒருபோதும் அறியவே வேண்டாம்.
உங்களின் வியாபாரங்கள் பற்றி
நாங்கள் ஒருபோதும் தெரியவே வேண்டாம்.
உங்களின் செய்கைகைள் பற்றி
நாங்கள் ஒருபோதும் கேட்கவே வேண்டாம்.

 
----xxx-----


தீபிகா
29-05-2013
05.17 P.m

May 29, 2013

துணைக்கு யாருமற்றவனின் இரவுப் பொழுதுதுணைக்கு யாருமற்றவனின் இரவுப் பொழுது


மெனனப் பின்னிரவில்
அனுமதியின்றி யன்னல் புகுந்து விழும்
அறைச்சுவரின் நிலவொளியில்
விட்டுவிட்டு நடனமாடுகின்றன
கறுப்புத் தென்னங் கீற்றுக்கள்.


தூரத்துத் தெருவொன்றிலிருந்து
பயங்கரமாய் வந்து சேர்கிறது
நாய்களின் நள்ளிரவு ஆலாபனை.

முழுதாய் திருகி முடிக்காத
தண்ணீர்க் குழாயின் கண்ணீர்த் துளியை
சத்தமாய் ஏந்திக் கொள்கிறது வெறும்வாளி.

கண்ணாமூச்சி விளையாட்டில்
இன்னுமென்னிடம் பிடிபடாதிருக்கின்ற
கரப்பான் பூச்சியொன்று
கைகளை சுரண்டிவிட்டு ஓடுகிறது.

கூட்டை விட்டு வெளிக் கிளம்பி
என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாய்
கிட்டக் கிட்டக் கேட்கிறது
விநாடிக் கம்பியின் கர்ச்சிப்பு.

வெட்கம் மறந்து கதறுகிற
இரவுப் பெண்பூனை
பாலுக்கு வீரிட்டழுகிற ஒரு பஞ்சுக் குழந்தையை
என் கைகளில் தந்து விட்டு ஒளிகிறது.

மூலைச் சுவரோடிருக்கிற தென்னைமரம்
தன் வியர்வை அரிச்சலை
கூரை விளிம்பில் சுருதி பிசகாமல்
தேய்த்துக் கொண்டே இருக்கிறது.

சுவர் மேடையில் நடந்த
பல்லிகளுக்கான நள்ளிரவுக் குத்துச் சண்டையில்
எல்லைக் கோட்டைத் தாண்டி
என்னருகே “தொப்” என்ற சத்தத்துடன்
விழுந்த கிடக்கிறது ஒரு வீரப்பல்லி.

சுருதி விலகாத தாளக்கட்டுப்பாடு
பாடிக் கொண்டே போகிறது
நெடுந்தூரப் புகைவண்டி.

வானக் கிளையிலிருந்து
நட்சத்திரப் பூவொன்று
வேரை நோக்கி சிரித்துக்கொண்டு விழுகிறது.

பாம்பு ஊர்வதான பிரமையில்
போர்வையை வெடுக்கென உதறிவிட்டு
படபடக்கிறது கால்.

வலப்பக்கம் வைத்துவிட்டுப் படுத்த செல்பேசியை
இடப்பக்க படுக்கையெங்கும் தடவுகின்றன
தூக்கக் கைகள்.

அமைதியாய் ஊற்றுகிற ஒருமிடறு தண்ணீர்
தொண்டைக் குழியை
பேரிரைச்சலோடு கடப்பதாய்
செவிகள் அலறுகின்றன.

கொஞ்சம் பெய்யலாம் போல இருக்கிற
என் நீர்மழையையும்
விடாது அடக்கி வைத்திருக்கிறது
இரவுப் பயம்.


---xxx ---

தீபிகா.
25-05-2013
12.28 P.mMay 28, 2013

எப்படி இருக்கிறீர்கள்?

எப்படி இருக்கிறீர்கள்?


புகழ் எனப்படுவது கூட ஒரு வகை போதை தான். நான் கொண்டாடப்பட வேண்டும் என்றும்,நான் மதிக்கப்பட வேண்டும் என்றும் எண்ணும் மன இயல்பு ஒரு வித முற்றிய நோய்க் கூறே. மரியாதை என்பதும் அன்பைப் போலவே கேட்டு பெற முடியாத உணர்வு. நம் ஒழுக்கமும், ஒழுங்குமே அதை பெற்றுத் தரும். நாம் புத்திசாலிகளாகவும், பலசாலிகளாகவும் இருக்கின்றோமா? என்று சுய பரிசீலனை செய்வதற்கு முன்னர் நல்ல பண்பாளர்களாக இருக்கின்றோமா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லோரும் எம்மைப் போன்று இருக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது சுத்த மடைமைத் தனம்.
பதில் சொல்லுதல் என்பது கூட ஒரு வகை கலையே. ஒரு குழந்தைக்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்பதும், ஒரு வெறிகாரனின் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதும் ஒரு பக்குவப்பட்ட மனிதனுக்கு தெரிந்திருக்க வேண்டும். நாம் வாழும் சமூகம் என்பது படித்த மானிடர்களால் தான் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது குருட்டுத்தனம் மிக்க தவறான சிந்தனாவாதம். வாசிப்புக் கலை ஒரு மனிதனின் அறிவை உயர்த்தும் என்பது எவ்வளவு உண்மையோ அதை விட ஆயிரம் உண்மையானது நேசிப்புக் கலை தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் என்பது.

தம்மை அறிவாளிகள் என்று சொல்லி கொள்கிறவர்கள் முதலில் பழக்கப்பட்டிருக்க வேண்டியது ஒரு படிக்காத பாமரனை எப்படி கையாளுவது என்பதையே. ஒரு அணு விஞ்ஞானிக்கு கூட படிக்காதவனிடமிருந்து கேட்டுக் கற்றுக் கொள்ள எத்தனையோ அனுபவக் குறிப்புக்கள் இருக்கக் கூடும். சமூகத்தின் பொறுப்பு மிக்க பதவிகளில் தாம் இருப்பதாக உணர்கிற புத்திசாலி மனிதர்களுக்குரிய முதற் தகுதியே ஒரு சமூகத்தில் அங்கம் வகிக்கிற எல்லா வகையான மனிதக் கூறுகளையும் வெற்றிகரமாக கையாளத் தெரிந்திருத்தலே.

தான் வாழும் சமூகத்தை பக்குவமாக வளர்த்தடுத்துச் செல்லத்
தெரியாத எந்தப் பெரிய மேதையும் அவருடைய
ஆற்றல்களாலும், விருதுகளாலும், பதவிகளாலும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. எத்தனை உலகத் தரமான இலக்கியங்களை அவர் கரைத்துக் குடித்திருந்தாலும் தன் சமூகத்தின் மொழியைப் புரிந்து கொள்ள முடியாதவரால்அந்தச் சமூகத்திற்கு எந்தவித பலனும் கிடைக்கப் 
போவதேயில்லை.

ஒரு உண்மையான அறிவாளி என்பவனுக்கும், தன்னை தன் சமூகத்தின் பிரதிநிதி என்பவனுக்கும், உண்மையான பெருமை என்பது "தான் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்றிச் செல்லுதல்" என்பதுவே. அந்த நற்செயலை புரிகிற பெரு மகனை அவன் வாழும் சமூகம் முதல் அகிலமுமே போற்றிப் புகழும்.

அதற்கு அடிப்படைத் தேவை அறிவு அல்ல.
பேரன்பும், நற்பண்பும், சகிப்புத் தன்மையுமே.
---xxx ----


தீபிகா
27-05-2013
10.28 P.m


May 27, 2013

கண்களின் பயணம்

கண்களின் பயணம்ஓடும் முகில்களில் 
உருவங்களை எதிர்பார்க்கும் கண்கள்.
சத்தமின்றி பறந்து போன 
ஜெற் விமானத்தின் புகை நீளத்தை 
தொடர்ந்து செல்லும் கண்கள்.
கடந்து போகிற ரயிலின் பெட்டிகளை
அவசரமாய் கணக்கெடுக்கும் கண்கள்.
நிலவின் கறையில் 
உருவத்தை தேடும் கண்கள்.
வரிசையாய் போகும் 
எறும்புகளின் முடிவிடங்களை
தேடித் தொடர்ந்து செல்லும் கண்கள்.
கவர்ச்சிகளில் 
அவசரமாய் தங்கிப்போகும் கண்கள்.
பேரூந்துகளில்
பிடித்துப் போன ஒருமுகத்தை
பிரியும் வரைக்கும்
விட்டுவிட்டு தொடரும் கண்கள்.

கண்கள் பயணித்துக் கொண்டேயிருக்கின்றன.
என்றும் மாறாத தம் விருப்பப் பாதையில்.
---xxx----


தீபிகா
19-05-2013
06.04 P.m


May 26, 2013

சௌந்தர்யக் குரல் அழகா!

சௌந்தர்யக் குரல் அழகா! 
(இரங்கற்பா)
சௌந்தர்யக் குரல் அழகா!
எங்கள்
சந்தனத் தமிழ்க் குரலா!
சாத்திக் கொண்டாயோ உன் விழிக்கதவை.

கம்பீரக் குரல் வேந்தா!
எங்கள்
கன்னித் தமிழை கணீர்க் குரலில்
கூவித் திரிந்த குயில் மொழியா!
கூடுவிட்டுப் போனதுவோ உன் ஆன்மா!

பட்டை தீட்டிய பெரு நெற்றியும்
பதித்து வைத்த சந்தனப் பொட்டழகும்
சிவந்து மிளிரும் செங் குங்குமமும்
தரித்து நீ மேடை வந்தால்
தமிழே அழகு பெறும்.
சிலையாய் இருக்கின்ற
கலைத்தாயே எழுந்து வந்து
கவிபாடும் தோற்றம் பெறும்.

உன்நாவில் தமிழ் ஒலித்தால்
உச்சரிப்பு அழகொளிரும்.
உணர்வுடன் நீ பாடுகையில்
உள்ளங்கள் உருகி நிற்கும்.

முருகா... என்று நீ
அழைத்துப் பாடுகையில்
அருகே கடவுள் வந்தது போலிருக்கும்.
ஆயிரம் தடவை கேட்கலாம் எனத்தோன்றும்.

எழிலிசை வேந்தா!
எட்டாத குரல் மொழியா!
நீ மெட்டெடுத்து பாடுகையில்
மேதினியே அமைதி பெறும்

காந்தர்வக் குரல் குயிலா! 
கர்வமில்லா சிரிப்பழகா! 
நாப்பது ஆண்டுகளாய்
நம் தமிழை இசைத்த - தமிழ்
நாக்குடைய பெருமனிதா!

ராதா என்னை விட்டு ஓடாதேடி...
நாதா! நீ பாடிய முதல் பாடல் அது.
சாதான் உன்னுடலை பிரித்தது. - எம்மோடு
நீதான் குரலால் நீக்கமற நிறைந்திருப்பாய் போ.

கற்பனை என்றாலும்..கற்சிலை என்றாலும்...
கற்கண்டு குழைத்த தமிழ்க் குரலில் 
நீ பாடினால் கண்ணில் நீரொழுகும்.
உள்ளம் உருகுதய்யா நீ உச்சரித்தால்
இன்றும் உயிர் உருகி கரைந்தோடும்.

பொன்னகை அணிந்து மேடைகளில் ஜொலித்தவரே!
உங்கள்
புன்னகை அதைக் காட்டிலும்
ஆயிரம் அழகு பெறும் தெரியுமா?

வாலியை அழைத்து வந்து தந்து
வண்ணத் தமிழுக்கு வளம் சேர்த்தவர் நீங்கள்.
வசந்த மாளிகையில் யாருக்காக? பாடிய
வண்ணக் குரலுக்கு சொந்தக்காரா!

நீ அழுது பாடினால்...
நாங்களும் அழுதோம்.
நீ சிரித்துப் பாடினால்
நாங்களும் சிரித்தோம்.
உன்குரல் சொன்ன தத்துவங்களை
எங்கள் வாழ்வின் வேதங்களாய் சுமந்தோம்.

எந்தப் பெருமைகளும் இல்லாது
நீ தொலைக்காட்சிகளில் வந்திருப்பாய்.
வலிக்காமல் வார்த்தை சொல்வாய்.
குழந்தை கலைஞரோடு குழந்தையாகி நீ மகிழ்வாய்.
தட்டிக் கொடுத்துநீ தவறாமல் பாராட்டுவாய்.

கண்ணதாசன் எழுதிய
கடவுள் சாகவேண்டும்
என்ற வரியை
பாடமறுத்த கொள்கைக் காரா!
உன் தீர்க்கமான பிடிவாதத்தால்
வாடவேண்டும் என்று மாற்றித் தந்தாராமே
அந்த வரலாற்றுக் கவிஞன்.

நீ இருப்பாய். நிலைத்திருப்பாய்.
எங்கும்
நீக்கமற நிறைந்திருப்பாய்.

உன் குரல் உலகெங்கும்
தினம் உச்சரித்தபடி தானிருக்கும்.
உன் பாடல் இல்லாத நாளொன்று
உலகத் தமிழினத்தின் வரலாற்றில் விடியாது.

போய்வா குயிலே போய்வா.
நீ கும்பிட்ட இளங்குமரன் கூப்பிட்டுப் போகிறாய்.
போய்வா. இசையே போய்வா.

உன் பாடல்களில்
சங்கீதம் உன்னைச் சுமந்து செல்லும்.
உன் உச்சரிப்பில்
தமிழ் உன்னை நினைந்து கொள்ளும். 
----xxx-----

தீபிகா
25-05-2013
06.35 P.mMay 25, 2013

அழகு

அழகுபோலியான புன்னகைகளை காட்டிலும்
நிர்வாணமான கோபங்கள் அழகு. 

போலியான புகழ்ச்சிகளை காட்டிலும்
நிர்வாணமான விமர்சனங்கள் அழகு.

போலியான நட்புக்களைக் காட்டிலும்
நிர்வாணமான ஏகாந்தம் அழகு.

போலியான கோசங்களைக் காட்டிலும்
நிர்வாணமான அமைதி அழகு.

போலியான அன்பைக் காட்டிலும்
நிர்வாணமான தனிமை அழகு.

போலியான கற்பனைகளைக் காட்டிலும்
நிர்வாணமான உண்மைகள் அழகு.

போலியான சத்தியங்களைக் காட்டிலும்
நிர்வாணமான நிராகரிப்புக்கள் அழகு.

போலிகள்
தற்காலிக அழகுடைய நிரந்தர வலிகள்.

நிர்வாணங்கள்
தற்காலிக வலியுடைய நிரந்தர சுகங்கள்.

....xxx....


தீபிகா
19-05-2013
06.47P.P.mMay 21, 2013

என் பாலகத் தோழியும் மயிலிறகுகளும்


என் பாலகத் தோழியும் மயிலிறகுகளும்ஒரு காலத்தில்
எங்கள் நட்பின் பரிசுப்பொருளாய் இருந்தது
இந்த மயிலிறகுகள் தானே தோழி.

நீ என்னிடம் வாங்கிய கர்ப்பிணி மயிலிறகு
குட்டி போட்ட சந்தோசத்தை
பள்ளிக்கூடம் ஆரம்பித்த பிரார்த்தனைக் காலையில்
இரகசியமாய் காதுக்குள் ஓடிவந்து சொன்ன நிமிடங்களை
ஞாபகமிருக்கிறதா தோழி உனக்கு?

என் சைவப் புத்தகத்தில் முருகன் வைத்திருந்த
அதே மயில் படத்தின் பக்கத்துக்குள்
பென்சில்பூ தீட்டி தீட்டி போட்டு வளர்த்த
என் மயிற்குஞ்சுகளை
உனக்கின்னும் ஞாபகமிருக்கிறதா தோழி ?

சூரிய ஒளிபட்டு என் குஞ்சு மயிலிறகுகள்
கறுத்துப் போய்விடுமென்று
உன்னை என்னருகே அழைத்து
எம் முகங்கள் உரசிக்கொள்ள
மெதுவாய் திறந்து காட்டிய
என் மயிற்குஞ்சுகளை
இப்போதுமுனக்கு ஞாபகமிருக்கிறதா தோழி.

என் பென்சில் சீக்கிரம் முடிகிற இரகசியத்தை
அப்பா கண்டுபிடித்து அடித்தபோது
விழுந்த தழும்பை
உன்னிடம் வந்து விம்மியபடி காட்டிய போது
மெதுவாய் என் உள்ளங்கை தடவி கண்கலங்கினாயே நீ.
ஞாபகமிருக்கிறதா தோழி.

குட்டிபோட்ட பின் திருப்பித் தருவதாய்
நீ என்னிடம்
கடைசியாய் கடன்வாங்கிய
பொன்னிறம் மின்னும் நீள மயிலிறகை
நீயும் தொலைத்து விட்டாயா தோழி?

இப்போது எனக்காய்.... ....

மயிலிறகுகளும் இல்லை.
நீயும் இல்லை.
பள்ளிக்கூடமும் இல்லை.

நான் மட்டும் தனியே இருந்து
அழுது கொண்டிருக்கிறேன் தோழி.


---xxx----

தீபிகா
19-05-2013
6.31 P.m

May 18, 2013

முள்ளிவாய்க்கால்(ப்) பள்ளிக்கூடம்


முள்ளிவாய்க்கால்(ப்) பள்ளிக்கூடம்
காற்றே!
எம் துயரின் பாடலை உரத்துப் பாடு.
வானமே!
எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள்.
கடலே!
எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல்.
நெருப்பே!
எம் நெஞ்சத்து தீயையும் சேர்த்து எரி.
நிலமே!
எம் சோகங்களின் பாரங்களையும் தாங்கிக் கொள்.


காலமே!
நீ கைவிட்ட சனங்களது காயங்கள்
இன்னும் ஆறாமல் கிடக்கிறது பார்.
விதியே!
நீ விரித்த வலையில் விழுத்திய புறாக்கள்
இப்போதும் துடித்துக் கிடக்கிறது காண்.

வானத்தின் சாட்சியாய், வரலாற்றின் சாட்சியாய்,
வாரிக் கொடுத்த வள்ளல்கள் சாட்சியாய்,
வாரிவிட்ட கள்ளர்கள் சாட்சியாய்,
நம்பிக் கழுத்தறுத்த கயவர்கள் சாட்சியாய்,
நடித்துக் கெடுத்த நடிகர்கள் சாட்சியாய்,
குள்ளநரிக் கூட்டத்து குடிமகன்கள் சாட்சியாய்,
கண்ணை மூடிப் பால் குடித்த
கள்ளப் பூனைகளின் சாட்சியாய்
நம்மை நாமிழந்து, நம் சொந்தங்களை இழந்து
வாழ்ந்த மண்ணிழந்து, வரலாறு இழந்து
காலப் புத்தகத்தின் கணக்கினிலே இன்று
நான்கு ஆண்டு ஆயிற்று.

நேற்றுப் போல் இருக்கிறது
நெஞ்சில் நெருப்பெரிகிறது.
தேற்றுவார் இன்றி மனம்
தேம்பித் தேம்பி அழகின்றது.
நாற்றுப் போல் இருந்த நம்மிளங் குழந்தைகளை
கூற்றுவர் கொண்டுபோன குரூரக் காட்சி விரிகிறது.

சேற்றினிலே குற்றுயிராய் கிடந்த முகங்கள்
சேனைகளின் குண்டினிலே சிதைந்த அங்கங்கள்
வீற்றிருந்த கடவுள்களின் விழுந்தழிந்த சொரூபங்கள்
விதைந்து மண்ணில் புதைந்த விடுதலையின் கரங்கள்
சிதைந்து கிடந்த கிராமத்து இடங்கள்
எல்லாம் சுமந்து கிடக்கிறது எம் எண்ணங்கள்.

மறக்க முடியுமா? மறக்க முடியுமா?
மனதெங்கும் வழியும் காயத்தின் குருதியை
காலநதி வந்து கழுவ முடியுமா?
சுமந்த சிலுவைகள், சுரந்த கண்ணீர்கள்,
இறந்த உறவுகள், இழந்த சிறகுகள்,
குழந்தை குட்டிகள், குமர் குஞ்சுகள்,
குன்று மணிகளாய் சிதறிக் கிடந்ததை
கண்டு வந்த கண்கள் மறக்குமா?
காயத் தழும்புகள் ஆறிப் போகுமா?

புத்தனின் பிள்ளைகள் புரிந்த போர்நடனத்தில்
செம்மண் புளுதியில் செத்தநம் உறவுகள்
மீள முடியுமா? உயிர் நீள முடியுமா?
யுத்தம் முடிந்தது. சித்தம் மகிழந்தது.
புத்தம் உமக்கு மறுவாழ்வு தந்தது.
புத்தம்புது வாழ்வு இனி மலர்ந்தது
என்று சொல்லிடும் ஏமாற்று நரிகளே!
”ஓமோம் சாமி”போடும் ஓநாய்க் கூட்டமே!
நாமெம் நிலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை
நந்திக்கடல் மடி நீந்திய நாட்களை
இரக்கம் இன்றிநீர் கொன்ற உயிர்களை
இழக்கச் செய்த உடல் உறுப்பினை
இனிமேல் கொண்டு வந்திட முடியுமா?
இழந்தநம் வாழ்வை தந்திட முடியுமா?

யுத்தம் நடத்திய செத்த வீட்டினில்
செத்துக் கொண்டு நாம் இருக்கையில்
சத்தம் இன்றி பார்த்துக் கொண்டிருந்தவர்
சதங்களை கொஞ்சம் கிள்ளி எறிகிறார்.
சரியாய் போயிடும் இனிமேல் என்கிறார்.
பாவம் செய்த கைகளை மெல்லப்
பணத்தினில் கழுவி கறையை நீக்கிறார்.
அள்ளிக் கொடுத்த வன்னித் தமிழனுக்கு
கிள்ளிக் கொடுத்து கிடுகும் கொடுக்கிறார்.

யுத்தம் குடித்து சிந்திய ரத்தம்
வெள்ளை மண்மீது ஊறிக் கிடந்ததை...
பிள்ளைத் தாச்சியின் வயிறு கிழிந்து
பிறக்காக் குழந்தையின் கால் வெளிவந்ததை...
முலைப்பால் கேட்டு அழுத குழந்தைக்கு
மழைப்பால் பிடித்து அருந்தக் கொடுத்ததை...
கலைத்தாய் வாழ்ந்த கல்விக் கூடமும்
சிலையாய் இருந்த கடவுள் இல்லமும்
சிதறி நொருங்கி சிதைந்து கிடந்ததை...
தண்ணீர் கேட்டு தவித்த நாவுகள்
தாகத்தோடு குளநீர் குடித்ததை...
கண்ணீர் வழிந்த கன்னத் தசைகளில்
கையால் தொட்டு உப்புச் சுவைத்ததை...
மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?
இறக்கும் வரைக்கும் இறக்கி வைக்க
முடியாச் சோகம் இருக்கும் வரைக்கும்
உறக்கம் கூட சரியாய் வருமா?
உயிரே உன்வலி எழுத முடியுமா?

வானம் பார்த்து வாடிக் கிடந்தவர்
காயத்தோடு கைகூப்பித் தொழுததை...
காப்பாற்றென்று கதறி அழுததை...
கஞ்சிக்கரிசி கிடைக்கா வறுமையில்
கண்டதையெல்லாம் திண்டுயிர் வாழந்ததை....
காசிருந்தும் பொருளேதும் இல்லா
காலச் சோகத்தில் அலைந்து திரிந்ததை...
உமிக் கும்பிக்குள் உலைக்கு நெல் புடைத்ததை...
ஊசி மருந்தின்றி உயிர்கள் மறைந்ததை...
காயப்பட்டவர் கிடந்து முனகிய கொட்டிலின் கட்டிலில்
கொத்துக்குண்டு விழுந்து வெடித்ததை...
நேசித்த உறவல்லாம் ஒவ்வொன்றாய் சாக
யாசித்து யாசித்து வான்பார்த்து அழுததை...
பேசித்தீர்க்க முடியாச் சுமைகளில்
பேதையாய் எங்கும் அலைந்து திரிந்ததை...
சண்டை வந்து சமருக்கு இழுத்த
அண்டை வீட்டு அருமந்த பிள்ளை
அடுத்த நாளே அமைதியாய்ப் படுத்து
அடுப்படிக் கரையால் விழிமூடி வந்ததை....
அண்டை நாட்டு உறவுகள் கூட
ஆயிரந் தடைவைகள் கத்திக் குளறியும்
வந்தெமைக் காத்திடா வரலாற்றுத் துயரை....
கைகள் உயர்த்தி கண்ணீர் சுமந்து
விதியின் சதியில் சரண் அடைந்தவர்கள்
இதுநாள் வரைக்கும் இருக்கிறார் என்றோ
தெரியா வலியில் தேம்பும் கதைகளை...
யுத்தம் முடித்தபின் புத்தனை இருத்தி
சட்டம் தன்னை தாங்கள் எடுத்து
நித்தம் அடிமையாய் எமை நடத்தும்
நீதியற்ற படைகள் பிடித்த
பாதிப்பேர் கூட மீளா உண்மையை...
நான்காண்டினில் நாம் மறப்போமா?
நாளையும் கூட நினைவிழப்போமா?

முள்ளிவாய்க்கால் என்பது
ஈழத்தமிழரைப் பொறுத்த வரைக்கும் 
வெறும் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது.
அது பள்ளிக்கூடம்
வரலாற்றுப் பள்ளிக்கூடம்.

வண்ணத் தமிழ்க் கவிஞா வைரமுத்துவே!
நீ எழுதிய
கள்ளிக் காட்டு இதிகாசம் தாண்டி
ஆயிரம் கள்ளிக் காட்டு இதிகாசங்கள்
முள்ளிவாய்க்கால் மண்ணில்
இப்போதும் முனகிக் கொண்டே இருக்கும்.
ஒருமுறை சென்று பார்த்து வா.
எங்கள் கனத்த துயரத்தின் வரலாறு
அந்தச் சிவப்பு மண்ணில்
சிலவேளை உனக்காகவும் காத்திருக்கக் கூடும்.

---xxx----xxx------ 

தீபிகா.
18-05-2013
11.36 A.m
Theepajeevan@gmail.com