Jun 23, 2013

சங்கீதா: என் பிரியத்துக்குரிய சினேகிதி


சங்கீதா: என் பிரியத்துக்குரிய சினேகிதி
சங்கீதா
என் பிரியத்துக்குரிய சினேகிதி.
அவளில்லாமல்
எனக்கிந்த வாழ்க்கை சாத்தியமேயில்லை.

என் ஆன்மாவின் காயங்களை
அவள் தன் பாடல்களால் வருடிவிடுகிறாள்.
ஞாபகங்களை கிளறியெடுத்து
கண்ணீரில் என்னை மிதக்கச் செய்துவிட்டு
கன்னங்களை இசையால் ஒற்றிக் கொள்கிறாள்.

எனக்குத் தெரியும்.
அவள் என் உயிரின் இரகசியம் என்பது.
அவளுக்கும் தெரியும்
நான் அவளின் ஆயுட்கால ரசிகன் என்பது.

நான் சோர்ந்து விழுகிற போது
மடியில் கிடத்தி புல்லாங்குழல் இசைக்கிறாள்.
நான் துவண்டு துடிக்கிற போது
தூவானத் துளிகளை முகத்தில் தெளிக்கிறாள்.
எந்தப் பிரிவையும் தாங்க முடியாது ஏங்குகிறபோது
தன் சுரங்களை என்னிடம் தந்து இசைக் சொல்லுகிறாள்.

ஒரு பாடலில் கரைந்தொழுகுமென் மனசை
நம்பிக்கை நதியாக்கி அவள் ஓடவிடுகிறாள்.
நான் தனித்திருக்கிற எல்லாப் பொழுதுகளிலும்
அவளென் கூடவே இருக்கிறாள்.

என்
உற்சாகங்களுக்கு சொந்தக்காரி அவள்.
என்
உறக்கங்களுக்கு காரணகர்த்தா அவள்

அவளில்லாத வாழ்க்கையென்பது
என் மூச்சு நின்ற பிறகு தான்.

அது சரி.
நானில்லாத வாழ்க்கையை
அவள் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாள்?


--- xxx ---
தீபிகா
22-06-2013
07.11 P.m


Jun 21, 2013

இன்னிசை அளபெடைகள்


இன்னிசை அளபெடைகள்001
துக்கத் தூசிகளை கழுவிக்கொண்டு
மனதுக்கு மலர்சூட்டுகின்றனர்.
சங்கீத தேவதைகள்.


002
காதுவழி நுழையும்
இசைக் குருவிகளின் பாடலில்
உற்சாகத்தில் நிரம்புகிறது உடற்கூடு.


003
இசையில் தொடங்கி
இசையில் முடிகிறது வாழ்க்கை.
"லப் டப்"


004
பால்மணியோடு தொடங்கி
ஊளைநாயோடு முடிகிறது.
ஒரு சங்கீதத் திருநாள்.


005

பசி கொதிக்கும் வயிற்றுக்குள்
சங்கீதம் இசைக்கின்றன
முறுக்கெடுக்கும் குடல்கள்.


006

கண்ணுக்குத் தெரியாது பறந்துவரும்
ஒலிச் சிறகுகளின் வருடலில்
ஆத்மாவின் காயங்கள் நலம்பெறுகின்றன.


007

இதுவரை கேட்டதில்லை.
கவிதைகளும் சங்கீதமும் இல்லாத
ஒரு காதல் கதையை.


008
வார்த்தைகள் தொலைந்த மௌனத்தை
இசைகளால் நிரப்பிக் கொள்கிறார்கள்.
காதலர்கள்.


009
எப்பொழுதும்
உலகஅதிசயங்கள் ஏழு தான்.
ச,ரி,க,ம,ப,த,நி.


010
இசையில்லாத ஒரு உலகத்தில்
காதுகளில்லாத மனிதர்கள்
உயிர் வாழக் கூடும்.


----xxx ----xxxxதீபிகா
21-06-2013
5.08 P.m


(June - 21 World Music Day)

Jun 20, 2013

ஒரு அகதியின் பாடல்

ஒரு அகதியின் பாடல்


ஒரு அகதியாய் இருத்தலிலெரியும்
என் ஆழ்மன நெருப்பை
உங்களுக்கு காட்ட முடியவில்லை என்னால்.

உடைந்து நொருங்கிப் போகிற
ஒரு பல்லி முட்டைக்காகவும்...
தவறி விழுகிற ஒரு அணிலின் கூட்டுக்காகவும்...
கதறியழுகிறதென் அகதிக் கண்கள்.

எந்தக் கோபுரங்களின் நிழல்களும்
எனக்கு வசதியாயேயில்லை.
எந்தப் பூங்காக்களின் அழகும்
என் மனதின் தாகத்தை தணிக்கவேயில்லை.

எனக்கொரு அழகிய காதலி இருந்தாள்.
நான் அவளைத் தொலைத்தேன்.
எனக்கொரு அன்பான அக்கா இருந்தாள்.
நான் அவளைப் பறிகொடுத்தேன்.
எனக்கொரு உயிரான அம்மா இருந்தாள்.
நான் அவளைப் பிரிந்து வந்தேன்.
எனக்கொரு பாடசாலை இருந்தது.
நான் அது தரைமட்டமாகக் கண்டேன்.
எனக்கொரு நிலம் இருந்தது.
நான் அதை இழந்து வந்தேன்.

எனக்கெதுவும் வேண்டாம்.
என் நிலத்தில்
என் சொந்தங்களோடு
எனக்கான வாழ்வு மட்டும் போதும்.

நான் அதைப் பெற்றே தீருவேன்.
இல்லையேல்
என் குழந்தைகள் அதைப் பெறுவார்கள்.
அதுமில்லையேல்
என் குழந்தைகளின் குழந்தைகள் பெறுவார்கள்.

நாங்கள் ஒருபோதும்
அகதிகளாகவேயிருக்க சம்மதிக்கவே மாட்டோம்.
எம் மண்ணின் மீது சத்தியமாக.

----- xxx ------


தீபிகா
20 - 06 - 2013
3.44 P.m


( யூன் 20 - சர்வதேச அகதிகள் தினம்)Jun 19, 2013

வெள்ளைப் பலி

வெள்ளைப் பலி


ஏணைக்குள் தூங்கிக் கிடந்த
தன் தம்பிக் குட்டியை
தூக்கம் கலையாமல் துணி விலக்கி
நெற்றியில் முத்தமிட்டுச் சென்றிருக்கலாம்.

சாப்பிட்ட கேக்துண்டின் பாதியை
பின்னேரம் வந்து சாப்பிடுவதாக
மிச்சம் வைத்துவிட்டு கிளம்பியிருக்கலாம்.

தான் வளர்க்கும் செல்லப் பூனைக்குட்டிக்கு
மறவாது பால் வைக்கும்படி
அம்மம்மாவிற்கு சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

இன்று மாலை
புது புத்தகப்பை வாங்கித் தருவதான உறுதியை
தன் அப்பாவிடம் பெற்றுச் சென்றிருக்கலாம்.

நேரம் போவதறியாமல்
சுட்டிரீவி பார்த்துக் கொண்டிருந்ததற்காய்
திட்டு வாங்கிக் கொண்டு புறப்பட்டிருக்கலாம்.

அவசரமாய் புறப்பட்டு விட்டு
திரும்பியோடி வந்து
அம்மாவின் கன்னங்களை
முத்தங்களால் நிறைத்துவிட்டுப் போயிருக்கலாம்.

வந்துகொண்டிருக்கிற பிறந்தநாளின் திகதியை
இன்றுமொரு முறை நாட்காட்டியில்
தொட்டுப் பார்த்து விட்டுக் கிளம்பியிருக்கலாம்.

வாசல் மறையும் தெரு வளைவில்
வழக்கம் போல திரும்பி மீண்டுமொரு தரம்
முத்தங்களை பறக்கவிட்டுவிட்டு மறைந்திருக்கலாம்.

இப்படி எவற்றையும்
இனி காலமெல்லாம்
நினைத்து நினைத்து அழுது கரைவதற்காய்
பள்ளிக்குப் போன அந்த வெள்ளைப் பிள்ளைகள்
எங்களுக்காய் விட்டுப் போயிருக்கலாம்.
தீபிகா
19-06-2013
3.46 P.m-----------------------------------------------------------------------------
19-10-2013
செய்தி - புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு லோடு ஆட்டோவில் மாணவ, மாணவிகள் 12 பேர் லிப்ட் கேட்டு சென்றுகொண்டிருந்தனர்.
வளநாடு என்று இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த பி.எல்.ஏ. நிறுவன தனியார் பேருந்து மோதியதில் லோடு ஆட்டோ அப்பளமாக நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 மாணவ மாணவிகள் பலியானார்கள். மேலும் 4 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
(நக்கீரன்) (படம் - பகத்சிங்)

Jun 4, 2013

மனதின் பிரியத்துக்குரிய தோழமை

மனதின் பிரியத்துக்குரிய தோழமை

இயற்கையிடமிருந்து விலகியிருக்கிற 
ஒரு மனிதனுடைய உடலும், உள்ளமும் ஒருபோதும்
ஆரோக்கியமானவையாக இருக்க முடியாது.
எந்த விளம்பரங்களுமற்று, இயற்கை மனிதனை எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையைப் போல் ஒரு சிறந்த ஆசான் மனிதர்களுக்கு சாத்தியமே இல்லை. மனசின் காயங்களுக்கு இயற்கை இடுகிற களிம்புகளைப் போல எந்த மருத்துவமும் களிம்பிட முடியாது. 


அன்பாய் தழுவுகிற பச்சை மரக் காற்றும், 
அமைதியாய் தவழ்கிற ஆற்று நீரின் பயணமும், 
நடக்கையில் கூட வருகிற நிலவின் சினேகமும், 
மாலை வானத்தின் மௌன வரவேற்பும், 
சத்தமின்றி பொழிகிற பனித்துளி அழகும், 
சத்தமோடு பொழிகிற மழையி்ன் சாரல்களும், 
மனித மனசை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. 

இயற்கை மனிதனிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. எதையும் எதிர்பார்க்காத தாயின் அன்பு இயற்கையிடமிருந்து தான் தாய்மைக்கு கி்டைத்திருக்க வேண்டும். இயற்கையை நேசிக்கிற குழந்தை எந்த சூழ்நிலைகளிலும் வாழ்க்கையின் பிடிப்பை இழந்து விடாது. இயற்கையை நேசியுங்கள். அங்கு இறைவனை காண்பீர்கள். இயற்கை என்பது இறைவனின் கரங்களால் உருவாக்கப்பட்ட படைப்பு.

---xxx----


தீபிகா.
07-05-2012
11.00 Am.

Jun 1, 2013

மிச்சமிருக்கும் பயணம்

மிச்சமிருக்கும் பயணம்


செத்துப் பிழைக்கும் 
ஒரு உச்சி வெயில் 
பேரூந்துப் பயணத்தின் முடிவில் ... ....

மூச்சுத் திணறலில் இருந்து விடுபட்டு வந்த
அனுபவம் மிச்சமிருக்கும். 
நெருக்கித் திருகிய உடம்புகளதும்,
விளக்கி உழக்கிய கால்களதும்
அடையாளங்களும் வலியும் மிச்சம் இருக்கும்.
சூரியக் கோபங்களில்
தங்களுக்குள் சிந்திக் கொண்ட
சனங்களின் அகோர வசைமொழிகள் 
மிச்சமிருக்கும் 
குளறிய குழந்தைகளது 
அழுகையொலிகள் மிச்சமிருக்கும்.
சில்லறைக்கு சினந்த 
நடத்துனரின் கோபம் மி்ச்சமிருக்கும்.
இடைவெளிகளுக்குள்ளால் 
மறைந்து மறைந்து சந்தித்த 
ஒரு சோடி எதிர்ப்பால் பார்வைகள் மிச்சமிருக்கும்.
யாரோ செல்பேசியில் சத்தமாய் கதைத்த
ஒரு குடும்பத்தின் 
நாட்குறிப்பொன்றும் மிச்சமாய் இருக்கும்.
கசங்கிப் போன சட்டையும்
வழிந்து ஒழுகும் வியர்வையும் மிச்சமிருக்கும்.
குமட்டிக் கொண்டு வருகிற
செத்த எலியின் நாத்தம் மிச்சமிருக்கும்.
துப்பாது வைத்திருந்த 
எச்சில்துளி மிச்சமிருக்கும்.


----xxx------

தீபிகா
22-05-13
05.28 P.m