More than a Blog Aggregator

Nov 15, 2025

ஆசுவாசம்

 ஆசுவாசம்


காலொடிந்த பொம்மைக்கு

மருந்து கட்டுகிற குழந்தை முன்

உயிரற்ற சிறுவர்களைக் கிடத்துகிறது

தொலைக்காட்சி.


திரையை மூடச் சொல்லி அழும்

குழந்தையின் உலகை

விழுங்குகிறது சாம்பல்.


இரத்தமும், கண்ணீரும் வழியாத

ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை

வாங்கவே முடியாதா அப்பா?

என்கிற குழந்தைக்கு

பதிலேயில்லை யாரிடமும். 


பசி நிரப்பும் அணில்களிடம்

முறைப்பாடு செய்கிறது குழந்தை.


உதிர்ந்த இலைகளின் வண்ணங்களை

ஒவ்வொன்றாய் பொறுக்குகிற

குட்டிக் கைகளுக்குள் விரிகிறது

கொஞ்சம் ஆசுவாசம்.


---- xxx --‐-


தீபிகா

02.11.2025

05.30 am


Tks - photo


#ஆசுவாசம்

#தீபிகா 

#theepika 

#கவிதை 

#ஈழம்

சொறிதேய்ப்பு

 சொறிதேய்ப்பு


ஒரு குக்குரன்

நியாயம் பிளந்ததும்,

ஓடி வருகின்றன ஒன்பதும்.


தங்களை அசைத்துக் காட்ட,

ஒரு மணிக்காற்றுக் கிடைத்த

சின்ன மகிழ்ச்சி நாவில்.


வெறுவெற்றிலை குதப்பும்

பொழுது களிப்பிகளுக்கு,

ஒரு நோவுமில்லா

சொறிதேய்ப்புக் களியிது.


கொஞ்சப் பூரணமுமற்ற

விரல் வீங்கிய வாந்திகளுக்கு

குடை பிடிக்கின்றன காளான்கள்.


பணத்திற்குத் தடுமாறும்

பெருந்தலைகள் நான்கு

அமுசடக்கிக் குனிகின்றன.


கேட்பாரற்ற வெளியில்

அழுகிறது ஓநாய்.


அதன்,

கண்களில் மிச்சமிருக்கிறது

களவாடிய ஆடுகள் மீதெழும்

மீச்சிறு குற்றவுணர்வு.


----- xxx -----


தீபிகா

02.11.2025

08.43 am.


Tks - photo


#சொறிதேய்ப்பு

#தீபிகா 

#theepika 

#கவிதை 

#ஈழம்

வலி

 ஒரு மகன்

என்னைப் போல.

ஒரு தாய்

என் அம்மாவைப் போல.

ஒரு தந்தை

என் அப்பாவைப் போல.

ஒரு வீடு

என் வீட்டைப் போல.

ஒரு பெரும் வலி

நிச்சயம் 

அது என்னுடையதேயல்ல.

நானதை,

உணர்ந்து பார்க்க முனைகிறேன்.

அது

தூரத்து நட்சத்திரமாகத் துடிக்கிறது.


- தீபிகா-

15.11.2025

10.50 am.

மகன்

 மகன்

எப்போதும்,

காலுக்குள் நடந்தவன்

கையைவிட்டுப் போனான்

ஒரு நாள்.


வீடு முழுவதும்

சாம்பல் பூத்த இரவில்

அவனின் தாய்மடி

துக்கத்தை அள்ளிப் பருகியது.


மகனில்லாத வீட்டின் சாப்பாட்டில்,

உப்புக் கரித்தது.

சிரிப்பை மறந்த பூக்கள்

முற்றத்தின் சரணங்களாகின.


அமைதியின் இருளில்,

மகனின் முகம் எதிரொலித்தது.

எல்லா வரிகளிலும்,

நம் பால்வெள்ளியைத் தேடினோம்.


ஒரு நாள்,

படலை திறந்து கொண்டு வந்தது,

எங்களின் சூரியன்.


காட்டின் வைரம் குடித்து

கறுத்திருந்தது அந்த முகம்.

சேவலடித்து விருந்து வைத்தோம்.

ஊட்டிவிட்டு அழுதன தாய்விரல்கள்.


எல்லாவற்றிற்கும்,

சிரித்துச் சமாளித்தவன்

ஒரு குதிரை போலவே

புறப்பட்டுப் போனான்.


தவறவிட்டதாக வீடு நினைத்த

அவனது சாரத்தை,

தலையணையாக்கினாள் தாய்.


வெடிகளேறிய வானத்தை,

நெடுந்தொலைவிலிருந்து 

எல்லோருமாகப் பிரார்த்தித்தோம்.


- தீபிகா-

15.11.2025

09.40 pm.


Tks - painting


#தீபிகா 

#மகன்

#ஈழம் 

#தமிழ் 

#கவிதை

#மாவீரர்

போராட்டம்

 போராட்டம்

என் தாய்நிலத்தில்,

மரங்கள் இலையுதிர்ந்ததில்லை.

மனிதர்கள் உதிர்ந்தார்கள்.

செடிகளோ,

பூக்களை வைத்திருக்கவில்லை.

கல்லறைகள் வாங்கி வைத்திருந்தன.

நாங்கள் 

நிலாவைப் பார்க்கவில்லை.

விமானங்களை 

பார்த்துக் கொண்டிருந்தோம்.

பள்ளிக்கூடங்களில் 

படிக்க வாய்க்கவில்லை.

பதுங்குகுழிகளுக்குள் படித்தோம்.


தேவாலயங்களில் பிணங்களாகின

எங்குள் குழந்தைகள்.

வைத்தியசாலைக்குள்,

சிகிச்சை கிடைக்கவில்லை.

துப்பாக்கிச் சன்னங்களே கிடைத்தன.

முட்கம்பிகள்

எங்களை இறுக்கிச் சுற்றின.

துப்பாக்கிகளால் 

நாங்கள் மேய்க்கப்பட்டோம்.

எறிகணைகள் 

எம் கனவுகளை துரத்திக் கொண்டிருந்தன.


தரைமட்டமான வீட்டில் 

பல்லிமுட்டைகளைப் போல சிதறினோம்.

கறுப்புத் தலையாட்டிகள்,

பட்டப்பகலில் எங்களை விழுங்கின.

கடவுள் சிலைகள் முண்டங்களாகின.

யேசுவின் சிலுவையோ

உடைந்து தொங்கியது.

தென்னந்தோப்புக்கள்,

தலைகளற்ற கரிக்கட்டைகளாக நின்றன.

பனைகளோ, காவலரண்களில் 

துண்டு துண்டாகக் கிடந்தன.


எல்லா இரவுகளிலும்,

துப்பாக்கிகள் ஆட்சி செய்தன.

பொய்களை ஒலிபரப்பின செய்திகள். 

வீதிகளெங்கும் செத்த காகங்கள். 

குடிசைகளெங்கும் இலையான்கள்.

உடைந்த மதகுகளுக்குள் 

குடியிருந்தன சனங்கள். 

மைதானங்களில்,

பயம் அப்பிக் கிடந்தது.

பந்துகள் விளையாடிய இளைஞர்கள்

கால்கள் துண்டாடப்பட்டு இருந்தார்கள்.


கிணறுகள்,

கொல்லப்பட்ட சடலங்களால் மூடப்பட்டன.

தபாற்பெட்டிகளில்,

துப்பாக்கிச் சன்னங்கள் பூத்திருந்தன.

மிச்சமிருந்தவர்களைக் கணக்கிட்டோம்.

தொலைந்தவர்களின் கதை,

தொலைந்ததாகவே போனது.


கூரையும், சுவர்களுமற்ற வீட்டில்

நம் புதிய குழந்தைகள் பிறந்தன.

ஒரு குருதிச் சித்திரம் போல,

கிராமத்தின் முகம் இருந்தது.

பிள்ளைபிடிகாரர்களுக்குப் 

பயந்து கிடந்தது பகல்.

இரவோ,

நாய்களிடம் மூச்சைக் கொடுத்துவிட்டு

துடித்துக் கொண்டிருந்தது.


பச்சை பயத்தின் குறியீடாக இருந்தது.

குரல் அடைக்கப்பட்டவர்கள்

பசியின் வரிசையில் நின்றார்கள்.

புரியாத மொழிகளால்,

கன்னங்களில் அறையப்பட்டோம்.

வயல்களெங்கும்

சப்பாத்துக்கள் உழுது திரிந்தன.

சூரியன்,

ஒரு சவம் போல வந்து போனது.

கேட்பாரற்ற பிறவிகளாயிருந்தோம்.

தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வு

தன்னைத்தானே,

மெதுமெதுவாகத் தூக்கிச் சுமந்தது.


இது,


மிக, 

மிக, 

மிக மிக அருகில்

நடந்த வரலாறு தான்.


நாங்கள் தான்,


வெகு,

வெகு,

வெகு வேகமாய்,

மறந்து போகிறோம்.


- தீபிகா-

24.10.2025

01.19 am.


Tks - photo - Aline Martello


#போராட்டம்

#ஈழம் 

#தீபிகா 

#கவிதை 

#மறதி

#குருதிச்சித்திரம்

" வைரவர் மடை"

 " வைரவர் மடை"


இந்திராகாந்தி இறந்ததற்குப் பிறகு வந்த

ஒரு பாரமான மாலைப்பொழுதில்

வைரவருக்கு 

வடைமாலை சாத்திக் கொண்டு தான்

நம் 

ஒரேயொரு அண்ணனை 

கடல் கடப்பதற்காய் கைவிட்டோம்.


புளியமிலைகளை பிடுங்கி மெல்கிற

கீரைப்பிடிச் சிறுமியின் வயதெனக்கு.

சேமக்கலம் தட்டுகிற

நீலக்காற்சட்டை வெறும்மேலன் தம்பி.


அப்பா கொழுத்திக் காட்டிய

கற்பூர ஆரத்தியின் 

வளைந்தாடிய சுடர் நடுவே,

அம்மா 

விம்மியழுததை நான் கண்டேன்.


செவ்வரத்தம்பூவும் மாலையுமாய்

எங்களின் சூலவைரவர் 

மௌனமாயிருந்தார்.


வீபூதிச் சிரட்டைக்குள் கைவிட்டு

அண்ணனின் 

நெத்தியப்பினார் அப்பா.


ஒருமுறை

எல்லோரும் அண்ணனைக் கட்டிப்பிடித்தார்கள்.


என்னை 

கடைசியாய் கொஞ்சியவனின்

மெலிந்தரும்பிய மீசையும், பருக்களும்

ஞாபகத்தில் உறைந்த மிச்சங்களாகி விட்டன.


கடைசி வரைக்கும்,

அண்ணாவின் ஒரு குரல் கூட

திரும்பி வரவேயில்லை.


வேம்பு போய்விட்டது.

கறையான் புற்று போய்விட்டது.. 

வைரவர்சூலம் போய்விட்டது.

இறுகியிறுகி அப்பா போய்விட்டார்.

தம்பி தம்பியென அனுங்கிக் கொண்டே

அம்மாவும் போய்விட்டாள்.


நான்

மிச்சமிருக்கிறேன்

என் வைரவருக்காக.


- தீபிகா-

23.10.2025

10.53 am.


Tks - photo

# நன்றி - வளர் சஞ்சிகை (13)


#தீபிகா 

#கவிதை 

#theepika 

#வளர்_13 

#ஈழம் #போர் #வைரவர் #மடை

ஆடுபிழை

 ஆடுபிழை


எதற்கிந்த மாலைகள்?

நானொரு, 

அப்பாவி வெள்ளாடு.

கடப்புக்குள் நின்று 

வாலாட்டிக் குதியங்குத்துகிற,

சோலியில்லாத சோனையாடு.


நீங்கள் பிழையாய் எண்ணுகிறீர்கள்.

திரும்பவும் சொல்கிறேன்.

எனது கழுத்து மணி 

வெறும் சத்தத்துக்கு தான்.


சும்மா கிடந்த என் நெற்றிக்கு

சூடம் காட்டுகிறீர்கள்.


சந்தியில் நின்றவற்றையெல்லாம்

பிடித்துப் பிடித்துச் சபையேற்றி விட்டு,

கடைசியில்,

ஆடுகள் ஓநாய்களானதென்று

அழுது புலம்புவதே உங்கள் வரலாறு.


நானொரு போதும்,

ஒரு துரும்பும் 

கிள்ளிப் போட்டதேயில்லை.

என்னை,

பப்பாசியிலிருந்து இறக்கி விடுங்கள்.


உங்களின் 

கண்ணுக்கெட்டாத வறுமையும்,

எனக்கு விளங்குகிறது.

அதற்காக,

என்னை வேள்வியில் தள்ளாதீர்கள்.


நான்,

" மே! மே! " என்று கத்துகிற

மெல்லிய வாடல் ஆடு.

வேறெதுவும்,

என் திருவாயால் சுட முடியாது.


------ xxx --------


- தீபிகா-

11.11.2025

12.22 pm.


Tks - photo - M.Rajeev gandhi


#ஆடுபிழை

#தீபிகா 

#கவிதை 

#theepika 

#ஈழம்

எம் பிள்ளைகளின் காற்று

 எம் பிள்ளைகளின் காற்று


நினைவிலூறுகிறது நெருப்பின் தணல்.


காடுகள் பாடும் கீதங்களில்,

பிரிவுத்தூளி அசைகிறது.


புல் மூடிய ஒற்றையடிப் பாதையில்

எவர் குரலையும் காணோம்.


மெளனத்தின் தவத்தில் இருக்கிறது

மரக்கட்டைப்பாலம்.


எந்தச் சிரிப்புக்களையும் கேட்கோம்!


சோகம் காய்ந்த இலைகளை

பரப்பி வைத்திருக்கிறது

தேக்கங்காடு.


யானை கடக்கும் 

நெடுவெயில் பாதையில்,

ஆடுகிற மாலைமயில் எங்கே?


குரங்குகள் தாவும் வீரை மரங்களில் 

கைபடாத பழங்கள் சிவந்திருக்கின்றன.


கூவிக்கூவித் தேடுகிறது குயில்.


ஒரு தலைகளுமற்று வாடியிருக்கிறது குளக்கரைப் பகல்.


கூடுதலாய் மொட்டுக் கட்டுகின்றன 

நித்திய கல்யாணிகள்.


கையசைத்துக் கொண்டு போன

நம் பிள்ளைகளின் காற்று

மெதுவாய் 

என் நெற்றி முட்டுகிறது.


- தீபிகா-

13.11.2025

07.33 pm.


நன்றி -  படம்


#தீபிகா

#ஈழம் 

#theepika 

#மாவீரர்

#எம்_பிள்ளைகளின்_காற்று

#வன்னி

#தமிழ்

இசைமுகம்

 இசைமுகம்


வறுமையின் இசைக்கு

ஒரு 

சோகத்தின் முகம் உண்டு.

மிதந்து மிதந்து

அது

எல்லோரது இதயங்களையும்

தொட்டுப் பார்க்கிறது.

சிலர்,

நின்று திரும்பிப் பார்க்கின்றனர்.

மிகச் சிலரை,

இசை இழுத்துக் கொண்டு வருகிறது.

பலர், 

அதை தாங்க முடியாமல்

விரைந்து கடக்கிறார்கள்.

யாசிக்கிற இசையின் கரங்கள்

காற்றின் முகத்தில்

அவமானத்தின் காயத்தை பரப்புகிறது.

எப்போதாவது சிலர்,

குறைந்த சில்லறைகளால்,

அந்த இசையை அங்கீகரிக்கிறார்கள்.

பசியுடன் அலையும் 

வறுமையின் சுருதியில்

எந்தச் சலனமுமையில்லை.

அது,

ஒரு உயர்ந்த கலையின் உச்சியில்,

அசைவற்ற தியானத்திலிருக்கிறது.


- தீபிகா-

15.11.2025

03.12 am.


Tks - artwork


#தீபிகா 

#இசைமுகம்

#theepika 

#ஈழம் 

#பசி #தியானம்

Sep 10, 2023

யுனிக்கோர்ண்

சிறுகதை       

                                              

இன்றோடு மதுராவுக்குப் எட்டு வயதாகிறது. யுனிக்கோண்,யுனிக்கோண் என்று எப்போதும் கையைத் தட்டிச் சிரிக்கிறவள் அவள். இந்த முறை அவளுக்கு, ஒரு யுனிக்கோண் கேக் தான் எப்பிடியாவது வெட்ட வேண்டுமென்று, அவளின் தாய் சொல்லி விட்டதால், ஓடர் கொடுத்த கேக்கை எடுக்க நிற்கிறேன். எப்போது ரீவியில் யுனிக்கோணைக் கண்டாலும், சத்தத்தைக் கேட்டு ஓடி வருவாள். யுனிக்கோண், யுனிக்கோண் என்று கைதட்டிச் சிரித்துக் கொண்டு, எங்களையும் யுனிக்கோண் என்று சொல்லச் சொல்வாள். கலர் அடிக்கிறதென்றாலும், யுனிக்கோண் தான். நானும், எத்தினையோ தரம், வேறு மரங்கள், பூக்கள், றெயின்போ, பப்பாச்சோ என்று படங்களை மாற்றி மாற்றிக் கொடுத்துப் பார்த்தும், அவளின் யுனிக்கோண் ஆசை இன்னும் தீர்ந்த பாடாயில்லை.

உண்மையில், எங்களுக்கும் அவளொரு சிறகு விரிக்கிற றோஸ் நிற யுனிக்கோண் தான். அழகான பல் வரிசை. தாயைப் போலவே அகன்ற விரிந்த கண்கள். அழகான சுருள் தலை மயிர். நீண்ட கைவிரல்கள், தடித்த புருவம் என்று நமக்குக் கிடைத்த அழகான தேவதை மது. கலியாணம் செய்து, ஐந்து வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்து, பிறகு சீரடி சாய்பாபாவுக்கு, மனைவியும், நானுமாய் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து பிறந்த பெண்குழந்தை தான் மதுரா. மூன்று வயது வரைக்கும், எங்கள் மூவரிடமும் பொங்கி வழிந்த உற்சாகமும், ஆனந்தமும் அதன் பிறகு, மெல்ல மெல்ல வற்றத் தொடங்கியது. நாங்கள் அவளின் முதல் வார்த்தைக்காகத் தவமிருந்தோம். மனைவிஅம்மாதான் சொல்லுமென்றாள். நான் இல்லை, ”அப்பாதான் சொல்லுவாள் என்றேன்.

ஆனால், அவள் இன்று வரைக்கும் ஒரு வார்த்தை கூட சொல்லாமலே இருக்கிறாள் என்பது தான், எங்கள் கண்ணீரின் மொழி. நாங்களும், இறைஞ்சாத தெய்வங்கள் இல்லை. மனைவி தூங்காத இரவுகளும், அழுது தீர்த்த கண்ணீர்களும் ஏராளம் ஏராளம். நான், அவளுக்கு முன் ஒருபோதும், என்னை உடைந்து போய்க் காட்டிக் கொள்வதில்லை. எப்போதும், தைரியம் சொல்லிக் கொண்டே இருப்பேன். மனைவி முன்போலவே இல்லை. தலைமயிரெல்லாம் கொட்டி, கண்ணெல்லாம் கருவளையம் போட்டு, ஆள் வலு கேவலமாகிப் போய் விட்டாள். என்னத்தை, எப்படிச் சமாதானம் சொன்னாலும், எந்த வைபவங்களுக்கும், நல்ல நகையுடைகளை உடுத்த அவளுக்கு மனம் வருவதில்லை. ஆனால், மதுவை மட்டும், ஒரு குறையும் தெரியாதவளாக, குளிப்பாட்டி, உடுத்தி, எங்கும் கூட்டிச் செல்வாள். அவளைச் சந்தோசப்படுத்துவதே தனது முழுநேர வேலை என்பது போல இருந்து விட்டாள்.

நானும், எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்து விட்டேன். அவள், வேலைக்குப் போவதே இல்லை. எப்போ பார்த்தாலும், மது..மதுஎன்று மதுவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாள். எங்களுக்குப் பிறகும், அவளுக்கு வாழ்விருக்கிறது. வாழ்வாள். இந்த நாடு அவளை வாழ வைக்கும். ஏதோ ஒரு நாளில் திடீரென்று பேசுவாள். ஐசாக் நியூட்டன் கூட, இப்பிடியொரு குழந்தையாக இருந்து வந்தவன் தான் என்று என்னால் முடிந்த மட்டும் வகுப்பெடுப்பேன். எல்லாவற்றிற்கும்ம்கொட்டுவாளே தவிர, வேலைக்குப் போக மறுத்தே விட்டாள்.

எல்லோரும், மூன்று வயதில் கதைப்பாள்.நான்கு வயதில் கதைப்பாள். ஐந்து வயதில் கூடக் கதைத்தவர்கள் உண்டு, என்று அனுபவங்களைப் பகிர்ந்தார்கள் தான். இங்குள்ள வைத்தியர்களும் கூட, எங்களைத் தேற்றவோ, என்னவோ, நம்பிக்கையை விடாதீர்கள். பயிற்சி கொடுங்கள். முயற்சி எடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நாங்களும், செய்யாத முயற்சிகள் இல்லை. ஆள் மாறி, ஆளென்று அவளோடு பேசிக் கொண்டே இருந்தோம். விசேட பேச்சுப் பயிற்சிகளுக்கென்று, மணித்தியாலத்துக்கு நூற்றியிருபது யூரோக்கள் கொடுத்துக் கூட, அவளுக்காக காசைக் கரைத்தோம். மற்றப் பிள்ளைகளிலிருந்து ஒதுங்கி விடக் கூடாதென்பதற்காக, வலிந்து எங்கும் கூட்டிச் சென்றோம். நாங்களும் சேர்ந்து விளையாடினோம். ஐபாட், ரீவிகளை குறைத்துக் கொண்டு சொற்களை சொல்லிக் கொடுத்தோம். பெரியப்பாமாமாசித்தி….என்று உறவுக்காரர்களைச் சொல்லிக் கொடுத்தோம்.

ஆனால், அவளால் இன்று வரைக்கும் கோர்வையாய் ஒரு வசனம் பேச முடியவில்லை. தாயில் உலகத்திலில் இல்லாத பாசம் அவளுக்கு. அடிக்கடி தாயின் கன்னங்களைக் கொஞ்சா விட்டால், அவளுக்குப் பத்தியப் படவே படாது. உண்மையில் தாயிற்கு, அந்தக் கொஞ்சல்கள் அவசியமாயிருந்தது. மதுவே தான் தன் உலகம் என்று இருப்பவள், இன்னொரு பிள்ளைக்கும் பிடிவாதமாக மறுத்து விட்டாள். எங்கே, தான் மதுவை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவேனோ என்ற பயம் அவளுக்கு. நான், கொஞ்சம் கூட கோபப்பட்டு உரத்துக் கதைக்கக் கூடாது மதுவுக்கு. உடனும், ”அப்பாகப்பீ…” என்பாள். நான் ஓம், என்று சொல்லும் வரை விட மாட்டாள். திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருப்பாள். பதில் சொல்லா விட்டால் அழத் தொடங்கி விடுவாள்.

மொழி வெளி வராத அவளால், தன் உணர்ச்சிகள் எதையும் வெளிப்படுத்தவே தெரியவில்லை. பாவம் மது. எப்போதும் தன் கைகளைத் தான் கடித்து வைப்பாள். அது தான், அவள் உணர்வை வெளிப்படுத்துகிற விதம். கடித்துக் கடித்து, கைப்பகுதி வெள்ளைப் புண் தழும்பாகிக் கிடக்கிறது. அல்லது, தன் இரண்டு கைகளையும் குனிந்து உதறுவாள். யாராவது, தூக்கி அணைத்தால், அவளோடு பேசினால் மிகுந்த சந்தோசப்படுவாள்.

ஆனால், எங்களைப் போல எல்லோராலும் எங்கள் மதுவைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. சிலர் எங்களை நோகடிக்கிற அளவுக்கு, விளங்கியோ, விளங்காமலோ ஏதாவது கேட்டு விடுவார்கள். ”இன்னும் கதைக்கேல்லையோஎன்பது தான் பெரும்பாலும் எதிர்கொள்கிற கேள்வி. ஒவ்வொரு முறை, இப்படி ஒவ்வொருவர் கேட்டு விடுகிற போதும், மது தூங்கிய பிறகு, மனைவி இரவிரவாக அழுது தீர்ப்பாள். நான் விடியும் வரை ஆறுதல் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.

எல்லாப் பிறந்த தினங்களிலும், மகிழ்ச்சியாய் போய், கடைசியில் நாங்கள் கவலையுடன் தான் வீடு திரும்புவோம். ஒரு படத்துக்கும், மதுவால் சரியாக நிற்க முடிவதில்லை. படம் எடுக்கிறவர் முதல், எல்லோரும், எங்கள் மதுவை சத்தமிட்டுக் கூப்பிடுவார்கள். உறுக்குவது போல இருக்கும். பட்டென்று மனைவயின் முகம் வாடிப் போய் விடும். நான் தான், மதுவை தூக்கிக் கொண்டு சமாளிப்பேன்.

பெரியவர்களுக்கே மதுவைப் புரியாத போது, சின்னப் பிள்ளைகள் எப்பிடி? எத்தனை ஆயிரம் விளையாட்டுச் சாமான்கள் வீட்டில் கிடந்தாலும், எல்லாப் பிள்ளைகளையும் போல, மற்றவர்களுடைய வீட்டு விளையாட்டுப் பொருட்களுக்கு மது ஆசைப்படுவாள். அந்தப் பிள்ளைகளோ கொடுக்க மறுப்பார்கள். நிலத்தில் விழுந்து, காலடித்து மது அழுவாள். சில நேரங்களில், சில விளையாட்டுப் பொருட்களை வீட்டுக்குக் கொண்டு வர அடம் பிடிப்பாள். அந்த நேரங்களில், வேறு வழியில்லாமல், குழறக் குழறத் தான் மதுவை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்ப்போம். நமக்குத் தான், எல்லா வீட்டு நிகழ்வுகளிலும் தர்மசங்கடமாக இருந்தது. அதற்காக, நாங்கள் ஒதுங்கிப் போவது, மதுவின் முன்னேற்றத்திற்கும், வாழ்விற்கும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எங்களை எச்சரித்திருந்தார்கள்.

இப்படித் தான் ஒருமுறை, என் நண்பனின் வீட்டுக்குப் போயிருந்த போது, விளையாட்டுச் சாமான் கொடுக்காத கோபத்தில், அவர்களின் இரண்டு வயது மகனின் கையை மது கடித்து விட்டாள். இரத்தக் காயமாகி விட்டது. நாங்கள் கேட்காத மன்னிப்பு இல்லை. அவர்கள் அதைப் புரிந்து கொண்டு விட்டார்கள். ஆனால், நாங்கள் தான் குற்றவுணர்வில் துடித்துப் போனோம். அது தான், மதுவிற்கு, முதலும் கடைசியுமாக மனைவி அடித்த அடி. நான் எதிர்பார்க்கவேயில்லை. வீட்டுக்கு வந்ததும், கைளால் பளார், பளார் என்று மதுவின் முதுகில் மூன்று அடிகள். நான்கரை வயதில் மதுவிற்கு விழுந்த அடி. அவளும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் அடிக்கடி கொஞ்சிக் கொண்டிருக்கும் அம்மாவிடம் இருந்து. ஏங்கிப் போய் விட்டாள் மது. இரவு முழுக்க, நடுங்கி நடுங்கி திடீர் திடீரென்று எழுந்து வீரிட்டுக் கதறினாள். காய்ச்சல் வேறு காயத் தொடங்கியிருந்தது.

மனைவிக்கு துயரம் தாங்க முடியவில்லை. தானா தன் மதுவை அடித்தேன் என்று கேட்டுக் கேட்டுத் தலையிலடித்தாள். இழுத்து, இழுத்து மதுவைக் கொஞ்சித் தீர்த்தாள். அது, மனைவியின் இயலாத கோபம், கடவுள்கள் மேல் இருந்த ஏமாற்றம், விதியின் மீதிருந்த தீராத வெறுப்பு. தேக்கி வைத்திருக்கிற எல்லா துயரங்களின் பாரத்தையும், அவள் மூன்று அடிகளில் மதுவின் முதுகில் இறக்கி வைத்து விட்டு, திடீரென்று நிறுத்திக் கொண்டு விட்டாள். அன்றிரவு முழுக்க சாமம் சாமமாக, தலையிலும், நெஞ்சிலும் அடித்து அடித்து அழுதாள். என்னோடும் எரிந்து விழுந்தாள்.

நான் மதுவை விட, மனைவியைப் பொறுமையாகக் கையாள வேண்டிருந்தது. எல்லாவற்றையும், ஒரு பெரிய இடிதாங்கியைப் போல தாங்கினேன். குளியலறைக் கதவைப் பூட்டிக் கொண்டு, வாய்க்குள் துவாயை வைத்தபடி, கண்ணாடியைப் பார்த்து வெடித்து அழுதேன். என்ன பாவம் செய்தேன் நான்? எனக் கேட்டுக் கேட்டுக், கைகளால் என் நெஞ்சைக் குத்தினேன்.

அது போலத் தான் அம்மாவோடு ஒருமுறை நடந்த வாய்ச் சண்டையும். அப்பம்மாவென்றால் மதுவுக்கு காணும். மடியில் இருந்து கொண்டு, மணிக் கணக்கில் ரீவி பார்த்து, அப்பிடியே தூங்கியும் போய் விடுவாள். அம்மாவுக்கும், மதுவின் பாசையெல்லாம் அத்துப்படி. ஒரு தடவையிலே புரிந்து விடுவார். வேணுமெண்டு அம்மா சொல்லவில்லைத் தான். ஆனால், ஓரே நேரத்தில் எனக்கும், மனைவிக்கும் அந்தச் சொல், படுபயங்கரமாய் சுட்டு விட்டது. நெருப்பில் விழுந்த புழுப் போலத் துடித்துப் போனோம். அது ஒரு வியாழக்கிழமை. சீரடி சாய்பாபா கோயிலில் தான் நடந்து முடிந்தது. எக்கச்சக்கமான சனங்கள். நேரமும் போய்க் கொண்டிருந்தது. மது வேறு வெக்கைக்கோ, உடுப்புக்கோ சினந்து அழத் தொடங்கியிருந்தாள். கோயிலின் அமைதியைக் குலைப்பதாக, சனங்கள் வெறுப்பு உமிழுகிற பார்வையை எறிந்தார்கள்.

அம்மா, மிக இயல்பாகத் தான் இந்த ஏலாத பிள்ளைக்கு ஒருக்கா,முதல்லை அர்ச்சனை செய்ய விடுங்கோ!” என்று ஐயரின் காதுபடச் சொன்னார். ஐயர், மீண்டுமொரு முறை அதை உரத்து, ”ஏலாத பிள்ளை யார்? வாங்கோ முன்னுக்குஎன்றார். சனம் முழுவதும் மதுவையும், மனைவியையும் பார்த்தார்கள். மனைவி, என் மீது எரிக்கிற பார்வையை வீசினாள். நான், சனங்களென்றும் பாராமல், அம்மாவின் மீது புறுபுறுத்தேன்.

அம்மா, விடிஞ்சதும் தெரியாது இருண்டதும் தெரியாதது போல, அப்பாவியாய் என்னைப் பார்த்தார். காரில் திரும்பி வரும் வரை எதுவும் கதைக்கவேயில்லை.

வீட்டுக்குள் நுழைந்ததும் கத்தினேன். வாய்க்கு வந்தபடி அம்மாவைப் பேசினேன். அம்மா! அழத் தொடங்கினார். மது பயந்து போய், அப்மம்மாவைக் கட்டிக் கொணடாள். தன் சின்ன விரல்களால், அப்பம்மாவின் கண்ணீரைத் துடைத்தாள். ” அப்பா! கப்பீகப்பீ…” என்று என்னைப் பார்த்துக் கத்தினாள்.

அந்த வியாழக்கிழமைக்குப் பிறகு, அம்மா எங்களோடு சாய்பாபா கோயிலுக்கு வருவதைத் திட்டமிட்டு, அங்கு நோகுது, இங்கு நோகுது என்று சொல்லித் தவிர்க்கத் தொடங்கினாள். இத்தனைக்கும், கோபதாபங்களை தூக்கிப் பிடிக்கிற ஆளில்லை அம்மா. அடுத்த நிமிடமே மறந்து போய் விடுவாள். அம்மாவும், மதுவுக்காக விரதங்கள் இருப்பதும், கோயில்களுக்கு அர்ச்சனை செய்வதும் எனக்கும் நன்றாகத் தெரியும். தன் மகனின் பிள்ளை கதைக்குதில்லை என்பதில், அம்மாவுக்கும் தான் பெருத்த வருத்தமிருக்கிறது.

ஆனால், இப்படி நானும் மனைவியும் காயப்பட்டு விடுவோமென்று, அம்மா நினைத்தே பார்த்திருக்கவில்லை. சரியாக உடைந்து போனார். மருமகளிடம் போய் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஆனாலும் காயம் காயம் தான்.

நாங்களும் கோபப்பட்டிருக்கக் கூடாது தான். மது, ஏதோவொரு வகையில் ஏலாத பிள்ளை தான். அதை ஏற்றுக் கொண்டு தானே நாங்கள் ஆக வேண்டும். ஊர் இப்படியும் கதைக்கும். சனங்கள் அப்படியும் காயப்படுத்துவார்கள் என்று நாங்கள் தான் பக்குவப்பட்டிருக்க வேண்டும். காயங்களுக்கு மேல் காயம் கண்டு, இன்றைக்கு அப்படியொரு நிலைக்கு நாங்கள் இருவரும் வந்து விட்டோம் தான். ஆனால், அன்றைக்கு அப்படி நாங்கள் இருக்கவில்லை. எங்களால் அப்படி இருக்கவும் முடியவில்லை. என்ன செய்வது? தவமாய் தவமிருந்து பெற்ற எங்கள் மதுவை, யார் குறையாகப் பார்த்தாலும், தாங்கிக் கொள்ள முடியாமல் கிடந்தது. என்னை விட, என் மனைவி உடைந்து நொருங்கிக் கொண்டிருந்தாள். விதியை ஏற்றுக் கொள்ளப் படாத பாடு பட்டோம்.

இப்படித் தான், நாங்கள் இருவரும் எங்கள் துயரங்களில் இருந்து அடிக்கடி வெளியேற வேண்டி இருந்தது. இதே போலவும், இதையும் விடவும் சிரமப்படுகிற பிள்ளைகளின் பெற்றோரோடு கதைத்து ஆறுதலடைந்தோம். என்னால் முடிந்த எல்லா மகிழ்ச்சிகளையும், மதுவுக்கும், மனைவிக்கும் நான் என்னை ஒறுத்து வழங்கிக் கொண்டே தான் இருக்கிறேன்.

இப்போ, மது எட்டு வயதுப் பெண் பிள்ளை. நாங்களும், கொஞ்சம் மரத்துப் போய் விட்டோம் தான். மது, அவளின் விசேட பள்ளிக்குப் போய் வருகிறாள். தனக்குத் தேவைப்படும் போது மட்டும், தேவையானதை ஒற்றை வார்த்தையில் சொல்லி முடிக்கிறாள். மற்றப் பிள்ளைகளைப் போல தன் வேலைகளைத், தானே தனித்தும் செய்கிறாள். இந்தப் பேச்சு ஒன்று தான், அவளிடமிருந்து எங்கோ மறைந்து போயிருக்கிறது. கூட்டல், கழித்தல், பெருக்கல் என்று வயதுக்கு மீறி மது விரைவாகவும், சரியாகவும் செய்கிறாள். ஏதேதோ பார்த்து எழுதுகிறாள். அச்சு அசலான கையெழுத்து மதுவினுடையது. இருந்தாலும், கையைக் கடிப்பதையும், உதறுவதையும் அவள் விடவேயில்லை. அது தான், மதுவினுடைய மொழி என்று நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.

இப்போ, அழகாக படங்களுக்கு முகம் கொடுப்பாள். புன்னகைப்பாள். எல்லாப் பிள்ளைகளோடும் சேர்ந்து விளையாடுவாள். மற்றப் பிள்ளைகளுக்கும், மதுவைப் புரிந்து கொள்கிற பக்குவம் வந்து, தங்களோடு சேர்த்துக் கொண்டு விளையாடுவார்கள். எப்போது பார்த்தாலும், மது..மதுஎன்று கூப்பிட்டபடி மதுவையே அவர்கள் சுற்றி வருவதைப் பார்க்க, மனைவி பூரித்துப் போவாள்.

மது, ஒரு போதும், தனித்துப் போக மாட்டாள் என்ற நம்பிக்கை மனைவியிடம் நிறையவே வந்து விட்டது. என்றைக்கோ, ஒரு நாள் அவள் பேசி விடுவாள் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களிடமிருந்து நீங்கவேயில்லை. இப்போதும், நாங்கள் சீரடி சாய்பாபவிற்கு விரதமிருந்து கொண்டேயிருக்கிறோம்.


இன்று நாங்கள் மதுவுக்கு ஒரு இரகசியப் பரிசு கொடுக்கப் போகிறோம். மனைவியும், நானுமாகத் தேடிக் கண்டு பிடித்தஒரு பேசும் யுனிக்கோண்பொம்மை அது. அதில், நாங்கள் மது விரும்புகிற வார்த்தைகளைப் பேசி சேமித்து வைத்திருக்கிறோம். ”கலோ மது, லவ் யூ மது, குட்மோர்ணிங் மதுஎன்று தொடங்கி ஒரு இருபது உரையாடல்களை ஒலிப்பதிவு செய்து சேமித்து வைத்திருக்கிறோம். இன்று மாலை, இந்தப் பேசும் யுனிக்கோண், எங்கள் மதுவோடு பேசத் தொடங்கும்.  இனியில்லையென்ற சந்தோசத்தில் மது துள்ளிக் குதிப்பாள். இதைவிட, மது பாடினால், அதுவும் பாடுகிற வசதி கூட இருக்கிறது. இன்று மாலை முதல், எங்கள் மது, அவளுடைய யுனிக்கோணோடு பேசிக் கொண்டிருப்பாள். இனி, யுனிக்கோணைக் கட்டிக் கொண்டு தூங்குவாள். யுனிக்கோணுக்குத் தலை இழுப்பாள். யுனிக்கோணுக்கு சாப்பாடு கூட தீத்துவாள் என்று நினைக்கிறோம். சில வேளைகளில், இந்தப் பேசும் யுனிக்கோணால், மது கதைக்கத் தொடங்கவும் கூடும் என்கிற மெல்லிய ஏக்கமும், இல்லாமல் இல்லைத் தான். அவளின் சந்தோசம் தான் எங்கள் இருவரதும் சந்தோசமே. அவள், அவளின் யுனிக்கோணோடு சந்தோசமாயிருக்கட்டும்.

 

நாங்கள் இருவரும், எங்கள் றோஸ் நிற யுனிக்கோண், எங்களோடு கதைக்கிற பொன்னான நாளுக்காக, எட்டு வருடங்கள் தாண்டியும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

 

 

----- 000 ----0000 ---


- தீபிகா-

 

(காற்றுவெளி ஆடி 2023 இதழில் வெளிவந்தது)

நம்மவர் சிறுகதைச் சிறப்பிதழ்