More than a Blog Aggregator

Nov 24, 2011

சிவப்பு அணக்கொண்டா

எங்கே?
கொண்டுபோய் ஒளித்துவைக்க?

பலவேளைகளில்
சங்கீதம் பாடிக்கொண்டு
சிலவேளைகளில்
மிளகாய்த்தூளினை விசிறிவிடுகிற
இதனை எப்படி திருத்துவேன்?

என் கட்டளைகளெதற்கும் கட்டுப்படாமல்
உருண்டு திமிறி
வழுக்கிக்கொண்டு வெளியேறி
அதன் விசம்தடவிய
வார்த்தைகளின் வாலினை
காதுவழி வலிந்து செலுத்தி
முயற்குட்டி மனசுகளை
முழுதாய் விழுங்கி பின்னுமிழ்ந்து போட்டு
திரும்பிப்போய் பதுங்குகையில்
என் வாசங்களனைத்தும் நாற
நி்ர்வாணமாகி நிற்கிறேன்.

 பூவினிதழ்களுக்கும்...
புறங்கைகளுக்கும்...
முத்தமிடும்
அதே குகையின் வாசல்வழியாகத் தான்
அது
மனசுகளுக்கு குறிவைக்கின்றது.

காலத்தின் வாயின்வழி தெறித்துவிழும்
தீயின் சொற்களை ஞாபகக்காற்று தழுவிட
தீய்ந்து எரிகிற வலியில்
ஊதிப்பெருக்கிறது சினம்.

கோபங்கள் சன்னதம் கொள்கிற
அருவருக்கத்தக்க கணங்களில்
என்னத்தனை எலும்புகளையும்
தோற்கடித்துக்கொண்டு வென்றுவிடுகிறது
எலும்பில்லா சிவந்த சதைத்துண்டொன்று.

அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளை
சில மன்னிப்புக்களும்...
பல மௌனங்களும்...
அவ்வப்போது ஊதியணைத்து விடுகின்றன.

இருந்தாலும்... ...

என் வார்த்தைகளை பறித்தெடுத்து
ஆழமாய் அத்திவாரமிடப்பட்ட
முப்பத்திரெண்டு காவலரண்களையும்
உடைத்துக்கொண்டு
இதழ்வாசல் வழி அவற்றை வெளியெறியும்
இந்த சிவப்பு அணகொண்டாவை
எந்த பெட்டிக்குள் எத்தனை பூட்டுக்கொண்டு
பூட்டி வைப்பேன்?




தீபிகா
27-06-2010

நன்றி - முகமறியா புகைப்பட கலைஞருக்கு.

Nov 7, 2011

“ஸ்கைப்”பில் தெரிகிற அப்பா"



“ஸ்கைப்”பில் தெரிகிற அப்பா"









உன் பயணங்களின் ரகசியங்களெதுவும்
புரியவில்லையப்பா எனக்கு.

நேற்றென் கூட இருந்து
என் விரல்பிடித்து நடத்திப் போனாய்.
உன் மார்புச்சூட்டில் முகம் புதைத்து
நானுறங்கிக் கிடந்தேன்.

இன்று

நீயில்லாத வெறுமைகளோடு
நானும் அம்மாவும்
முகம் பார்த்தபடி மௌனமாக இருக்கிறோம்.

இத்தனை நாள்
பிரார்த்தனைகளிலும்... ...
விரதங்களிலும்... ...
இளைத்துப் போய்க்கிடந்த அம்மா
கப்பலிலோ அல்லது களவாயோ
நீ பத்திரமாய் போய்ச்சேர்ந்து விட்டாய்
என்கிற மகிழ்ச்சியில்
சற்று பூரித்திருக்கிறாள் இப்போ.

அப்பா!
புரியவில்லையப்பா எனக்கொன்றும்.
புரியும் வயதும் இல்லையப்பா.

நான் எதிர்பார்த்திராத கணமொன்றில்
நேற்று நீ
திடீரென கணிணியில் தெரிந்தாய்.
கை காட்டினாய். சிரித்தாய்.
கதை கேட்டாய். கண் கலங்கினாய்.
பின்னர்
ஒரு கடவுளைப் போல
”bye” சொல்லிக்கொண்டு திடீரென்று
மறைந்து போனாய்.

என்னால்
கதைக்கவே முடியவில்லையப்பா.
மிக்கி மவுஸையும், டோரா பூச்சியையும்
பார்த்துச் சிரிக்கிற அதே திரைக்குள்
உன்னை பார்க்கிறபோது அழுகை வருகிறதப்பா.

எப்ப வருவீங்களப்பா?
என்ற என் மௌனமுடைத்த
ஒற்றைக் கேள்விக்கு
”நீங்க தான் செல்லம் இங்கை வரவேணுமென்றீர்கள்”

எப்போது? எப்படி?
என்று சொல்லவே இல்லையப்பா.

இப்போதெல்லாம்...
அம்மாவும் நானுமாய்
அடிக்கடி உங்களோடு கதைக்கிறோம்.
கண் கலங்குகின்றோம்.
பறக்கும் முத்தங்கள் பரிமாறுகிறோம்.
பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்கிறீர்கள்.
பாடிக் காட்டுகிறேன்.
புதுச்சட்டை போட்டுவந்து காட்டுகிறேன்.
நான் வாய்க்குள் வைத்து
எச்சிற்படுத்திய ஈரஇனிப்பை
உங்களுக்கு ஊட்டுவதற்காய்
கணிணித் திரையில் முட்டுகிறேன்.
நீங்களோ
விழுங்கிக் கொள்ளமுடியாமல்
விரக்தி கலந்து சிரிக்கிறீர்கள்.
என்ன வேணும் பிள்ளைக்கு?”
என்று நீங்கள் கேட்கிறபோது
மௌனம் போர்த்து விம்முகிறேன் நான்.

உங்களுக்கு புரியுமப்பா
என் மௌனத்தின் சத்தம்.

எந்தன் குட்டி மனசுக்குள்ளும்...
எந்த குறைகளுமில்லாமல்
எனை வளர்க்கிற அம்மாவின் மனசுக்குள்ளும்...
எப்போதும்
ஒன்றாகவே துடித்துக்கொண்டிருக்கிறது
ஒரு கண்ணீர்க் கேள்வி.

எப்போது
உங்களோடு எமை சேர்க்கப்போகிறது?
எமது விதியும்-காலமும்.


*** முற்றும் ***



தீபிகா.
14.08.2010.


09.20 pm

Oct 1, 2011

ஊர் பார்த்துவந்த வார்த்தைகள்


ஊர் பார்த்துவந்த வார்த்தைகள்



சேர்த்து சேர்த்து வைத்த
மகரந்தத் துளிகளை
அள்ளிக்கொண்டு போகின்றன
தெற்கிலிருந்து வரும் கரடிகள்.

புற்றுகளிலிருந்து வெளிச்செல்ல
அனுமதிக்கப்பட்ட எறும்புகள்
சிதைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
விழுந்த வதைகளை
பொறுக்கிச் சென்று
புதிய கூடு கட்டியிருக்கின்றன.

தம் ராணியை
தொலைத்த தேனீக்கள்
விழிகளில் பயம் வழிய
வேதனைகளை சுமந்தபடி
கொஞ்சம் கொஞ்சமாய்
வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

நந்தவனங்கள் காடாகியிருக்கும்
நரக நகரங்களில்
பச்சைப் பாம்புகள்
அங்குமிங்கும் முறுக்குடன் நெளிகின்றன.

பற்றைகள் வளர்ந்திருக்கும்
உயிர்விதை நிலங்களை
கிளறி எறிந்துவிட்டிருக்கிறார்கள்
வக்கிரம் தீர்க்கும்
ரத்தவாச மனிதர்கள்.

ஊன்றுகோல்களை அருகில் வைத்துக்கொண்டு
இருந்தபடியே வரவேற்கும்
இளைஞர்களும்
தாடிகளுக்குள் முகம் புதைத்திருக்கும்
தந்தைமார்களும்
இன்னும் எழுதப்படாத
நிறைய உண்மைக்கதைகளை
வலியோடு சொல்கிறார்கள்.

நொருங்கிப் போயிருக்கும்
கல்வீட்டு முற்றங்களிலமர்ந்து
மண்வீடு கட்டி
விளையாடிக்கொண்டிருக்கும்
போர்க்கால குழந்தைகளிடம்
அவர்களின் அப்பா பற்றி
விசாரிக்காமலேயே வந்து விட்டது
பதில்களை தாங்கமுடியா மனசு.

வேலிகளில்லா வீடுகளுக்கு
காவலிருக்கும் ஓணான்கள் பற்றி
எவரும்
பெருமிதப்படவேயில்லை.

உருமறைப்பு உடைகளும்
அவற்றோடு ஒட்டியிருக்கும்
குருவிச்சை இலைகளும்
எவ்வளவுதான்
வாய் அகல புன்னகைத்தாலும்
பூதங்களாகவே தெரிவதாக
கண்களில் திகில் பரவ
சொல்கிறார்கள்
குழந்தைகளும்.
அவர்களின் தாய்மார்களும்.

தமக்கு
விதிக்கப்பட்டு விட்ட
சபிக்கப்பட்ட நாட்களுக்கு நடுவே
தம் குழந்தைகளை
கூட்டிச் செல்வது பற்றியே
எல்லோரும்
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.


தீபிகா.


07-09-2011
9.48am.