More than a Blog Aggregator

Nov 29, 2011

மழை நனைத்த மனசு


பொழிந்து  தள்ளுகிறமழையில்
வழிந்து விழுகின்றன
ஞாபகத்துளிகள்.

தூறல் துளிகளை
முகம் நிமிர்த்தி ஏந்தும் சுகம்.
துரத்திவரும் தூவானங்களிலிருந்து
விலகிநிற்கும் சந்தோசம்.
கூரையின் வழி ஓடி வருகிற
உடையாத வெள்ளித்துளிக் கம்பிகளை
கை நீட்டி குறுக்கறுக்கிற மகிழ்ச்சி.
முதல் விழுகிற மழைத்துளிகளில்
வறுபடுகிற மண்ணின் வாசம்.
தரையில் விழுந்து அடிபட்டுக்கொண்டு
உடைகிற நீர்க்குமிழிகளின் கோலங்கள்.

தூரத்தே துரத்திக்கொண்டு வருகிற
மழையின் சத்தம்.
ஓடுகிற மழையின் ஒருகோடி அழகு.
ஒழுகிற இடங்களை ஏந்திககொள்ளும் சட்டிகளில்
மழை பாடும் சங்கீதம்.
எம் கனவுக் கப்பல்களை காவிச்செல்லும்
அலையில்லா வெள்ளம்.
நெய்விளக்குகளுக்கு குடைபிடிக்க வைத்தபடி
எம்மோடு சேர்ந்தழும் கார்த்திகை மழை.

எல்லாம்
இப்போதும் ஈரமாகவே இருக்கிறது.
மழை நனைத்த என் மனசில்.


------xxx -------------

தீபிகா.
25.11.2011
8.13 Pm.
(அடைமழை பொழியும் முன்னிரவு)

Nov 27, 2011


"கனவுகள் நிறைந்த நிலங்கள்



கல்லறையுண்ணிகள் புரட்டிப் போட்டிருக்கின்ற
வீரர்களது வித்துடல் நிலங்களில்
ஆடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அந் நிலங்களை
நாம் கட்டித்தழுவ முடியாதபடி
கழுகுகள் கண் பதித்திருக்கின்றன.

விதைநிலங்களிலிருந்து வெடித்தெழும் கனவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாகி
அங்கே வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

கனவுகள் படர்ந்திருக்கிற
வீரர்களின் பெயர்சுமந்த நடுகல்களுக்குள்ளால்
புகுந்து வருகிற காற்று
எங்களெல்லோரது சுவாசங்களுக்குள்ளும்
உள் நுழைகிறது.

அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அந்த அழிக்கப்பட்ட வெளிநிலத்தின் மீது
எவரும் கட்டிப்போட முடியா நிலவு
தீபஒளி பொழிகிறது.

மறைக்கப்பட நினைக்கிற
வீரர்களின் துயிலிடங்களில்
காற்றின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
உறங்கிக்கிடந்த உயிர்விதைகளின் கனவுகள் 
ஊர்களெங்கும் இரகசியமாய் நிறைந்திருக்கிறது.

ஆழிகளை தாண்டிக்கொண்டு 
இன்னுமின்னும் ஆழமாய் வேரூன்றுகின்றன.
அழிக்கப்பட நினைக்கும்
அவர்களின் வரலாறுகள்.

ஒரு கடல்சூழ் நிலத்தில்
கருத்தரித்த கனவுக்குழந்தையின்
பிரசவப் போராட்ட வலியின் ஓலம்
எல்லா மேசைகளிலும் எதிரொலிக்கிறது.

சத்தியச் சாவடைந்தவர்களின்
வரலாற்று நிலங்களெங்கும்
அள்ளிச் செல்லப்பட முடியா
நமது கனவுகள் நிறைந்திருக்கின்றன.

------xxx-----------


தீபிகா.
25.11.2011. 
6.58 Pm.

Nov 26, 2011


"உறங்குமிடங்களிலிருந்து அகதிகளாக்கப்பட்ட உயிர்முகங்கள்"



 ஒளிர்கிற சுடர்களுக்கு மேலாகவும்
பூக்களின் இடைவெளிகளாலும்
எங்களை நோக்கி
அவர்கள் மிதந்து வருகிறார்கள்.
 

உறங்குமிடங்களிலிருந்தும்
அகதிகளாக்கப்பட்டிருக்கின்ற
எம் இருப்பிடங்களுக்காக அணிவகுத்த
உயிர்முகங்கள்
தமது கனவுகளை காவியபடி
எம் சுவாசங்களுக்குள்
திரும்பவும் நிரம்பிக் கொள்கிறார்கள்.

எம் விழிகளில் தகிக்கும்
பிரிவுத் துளிகளால்
அவர்களை ஆறுதல் படுத்த முடியவில்லை.
அந்த இளமைமிகு முகங்கள்
எமக்கான தமது கனவுகள் பற்றியே
மீளவும் மீளவும் கதைக்கிறார்கள்.

அதற்காய்
தாம் கொடுத்த விலைகளையும்
சுமந்த வலிகளையும்
மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறார்கள்.

ஏக்கம் வழியும் விழிகளோடு
எமைப் பார்த்து புன்னகைக்கும்
அவர்களை
சொரிகின்ற பூக்களாலும்
ஒளிர்விக்கின்ற வெளிச்சங்களாலும்
வணங்க முடிகிறதே தவிர
திருப்திப்படுத்தவே முடியவில்லை.

தம் ஈரக் கனவுகளை
மீண்டும் எம்மிடம் ஒப்படைத்துவிட்டு
காத்திருப்பதாய் சொல்லிக்கொண்டு
ஊதுபத்தி புகைகளில் கரைந்தபடி
மேகங்கள் வரைக்கும் சென்று மறைகின்றன.
ஈகமாகிய அவர்களின் ஆன்மாக்கள்.
------ ------ -------


தீபிகா.
24.11.2011.
12.50 P.m