More than a Blog Aggregator

Jun 23, 2013

சங்கீதா: என் பிரியத்துக்குரிய சினேகிதி


சங்கீதா: என் பிரியத்துக்குரிய சினேகிதி




சங்கீதா
என் பிரியத்துக்குரிய சினேகிதி.
அவளில்லாமல்
எனக்கிந்த வாழ்க்கை சாத்தியமேயில்லை.

என் ஆன்மாவின் காயங்களை
அவள் தன் பாடல்களால் வருடிவிடுகிறாள்.
ஞாபகங்களை கிளறியெடுத்து
கண்ணீரில் என்னை மிதக்கச் செய்துவிட்டு
கன்னங்களை இசையால் ஒற்றிக் கொள்கிறாள்.

எனக்குத் தெரியும்.
அவள் என் உயிரின் இரகசியம் என்பது.
அவளுக்கும் தெரியும்
நான் அவளின் ஆயுட்கால ரசிகன் என்பது.

நான் சோர்ந்து விழுகிற போது
மடியில் கிடத்தி புல்லாங்குழல் இசைக்கிறாள்.
நான் துவண்டு துடிக்கிற போது
தூவானத் துளிகளை முகத்தில் தெளிக்கிறாள்.
எந்தப் பிரிவையும் தாங்க முடியாது ஏங்குகிறபோது
தன் சுரங்களை என்னிடம் தந்து இசைக் சொல்லுகிறாள்.

ஒரு பாடலில் கரைந்தொழுகுமென் மனசை
நம்பிக்கை நதியாக்கி அவள் ஓடவிடுகிறாள்.
நான் தனித்திருக்கிற எல்லாப் பொழுதுகளிலும்
அவளென் கூடவே இருக்கிறாள்.

என்
உற்சாகங்களுக்கு சொந்தக்காரி அவள்.
என்
உறக்கங்களுக்கு காரணகர்த்தா அவள்

அவளில்லாத வாழ்க்கையென்பது
என் மூச்சு நின்ற பிறகு தான்.

அது சரி.
நானில்லாத வாழ்க்கையை
அவள் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாள்?


--- xxx ---
தீபிகா
22-06-2013
07.11 P.m


Jun 21, 2013

இன்னிசை அளபெடைகள்


இன்னிசை அளபெடைகள்



001
துக்கத் தூசிகளை கழுவிக்கொண்டு
மனதுக்கு மலர்சூட்டுகின்றனர்.
சங்கீத தேவதைகள்.


002
காதுவழி நுழையும்
இசைக் குருவிகளின் பாடலில்
உற்சாகத்தில் நிரம்புகிறது உடற்கூடு.


003
இசையில் தொடங்கி
இசையில் முடிகிறது வாழ்க்கை.
"லப் டப்"


004
பால்மணியோடு தொடங்கி
ஊளைநாயோடு முடிகிறது.
ஒரு சங்கீதத் திருநாள்.


005

பசி கொதிக்கும் வயிற்றுக்குள்
சங்கீதம் இசைக்கின்றன
முறுக்கெடுக்கும் குடல்கள்.


006

கண்ணுக்குத் தெரியாது பறந்துவரும்
ஒலிச் சிறகுகளின் வருடலில்
ஆத்மாவின் காயங்கள் நலம்பெறுகின்றன.


007

இதுவரை கேட்டதில்லை.
கவிதைகளும் சங்கீதமும் இல்லாத
ஒரு காதல் கதையை.


008
வார்த்தைகள் தொலைந்த மௌனத்தை
இசைகளால் நிரப்பிக் கொள்கிறார்கள்.
காதலர்கள்.


009
எப்பொழுதும்
உலகஅதிசயங்கள் ஏழு தான்.
ச,ரி,க,ம,ப,த,நி.


010
இசையில்லாத ஒரு உலகத்தில்
காதுகளில்லாத மனிதர்கள்
உயிர் வாழக் கூடும்.


----xxx ----xxxx



தீபிகா
21-06-2013
5.08 P.m


(June - 21 World Music Day)

Jun 20, 2013

ஒரு அகதியின் பாடல்

ஒரு அகதியின் பாடல்


ஒரு அகதியாய் இருத்தலிலெரியும்
என் ஆழ்மன நெருப்பை
உங்களுக்கு காட்ட முடியவில்லை என்னால்.

உடைந்து நொருங்கிப் போகிற
ஒரு பல்லி முட்டைக்காகவும்...
தவறி விழுகிற ஒரு அணிலின் கூட்டுக்காகவும்...
கதறியழுகிறதென் அகதிக் கண்கள்.

எந்தக் கோபுரங்களின் நிழல்களும்
எனக்கு வசதியாயேயில்லை.
எந்தப் பூங்காக்களின் அழகும்
என் மனதின் தாகத்தை தணிக்கவேயில்லை.

எனக்கொரு அழகிய காதலி இருந்தாள்.
நான் அவளைத் தொலைத்தேன்.
எனக்கொரு அன்பான அக்கா இருந்தாள்.
நான் அவளைப் பறிகொடுத்தேன்.
எனக்கொரு உயிரான அம்மா இருந்தாள்.
நான் அவளைப் பிரிந்து வந்தேன்.
எனக்கொரு பாடசாலை இருந்தது.
நான் அது தரைமட்டமாகக் கண்டேன்.
எனக்கொரு நிலம் இருந்தது.
நான் அதை இழந்து வந்தேன்.

எனக்கெதுவும் வேண்டாம்.
என் நிலத்தில்
என் சொந்தங்களோடு
எனக்கான வாழ்வு மட்டும் போதும்.

நான் அதைப் பெற்றே தீருவேன்.
இல்லையேல்
என் குழந்தைகள் அதைப் பெறுவார்கள்.
அதுமில்லையேல்
என் குழந்தைகளின் குழந்தைகள் பெறுவார்கள்.

நாங்கள் ஒருபோதும்
அகதிகளாகவேயிருக்க சம்மதிக்கவே மாட்டோம்.
எம் மண்ணின் மீது சத்தியமாக.

----- xxx ------


தீபிகா
20 - 06 - 2013
3.44 P.m


( யூன் 20 - சர்வதேச அகதிகள் தினம்)