More than a Blog Aggregator

Jul 4, 2013

நாங்கள் செய்வித்த (தற்)கொலைகள்



நாங்கள் செய்வித்த (தற்)கொலைகள்


உயிர் தந்த பிரமனே!
நாங்களே எல்லாத் தற்கொலைகளுக்கும்
காரணமாக இருக்கின்றோம்.
குற்றவுணர்வுள்ள சாட்சிகளாகவுமிருக்கின்றோம்.

எங்கள் ஜாதிவெறியின் நெருப்புப் பார்வையை
எதிர்கொள்ள முடியாத திவ்யாவின் தந்தையை
நாங்கள்
அவமானம் தாங்காமல் சாகும்படி
வழிநடத்திக் கொன்றோம்.

கிராமங்களுக்கு
அக்கினிப் பூவை பரிசளித்து விட்டு
எங்கள் ஜாதிப்பூவை
கருகிய வீடுகளுக்கு மேலாக
மலரச் செய்து புன்னகைத்தோம்.

தந்தையை இழந்த காதலியை
வெருட்டி...மருட்டி...
வெளித் தெரியாத எல்லா சூழ்ச்சிப் பொறிகளாலும்
வசியப்படுத்திப் பிரித்தோம்.
எங்கள் வெறிப்பிடித்த இலட்சியங்களை
ஒரு பொம்மையாக மாறி
திவ்யா உச்சரிக்கும்படியாக செய்தோம்.

குருட்டு நியாயங்களுக்கு முன்னால்
எங்கள் எல்லா சோடித்த வார்த்தைகளையும்
வெற்றி பெறச் செய்து
காதலியை பிரித்துக் கொண்டு வந்தோம்.

சலவை செய்த மூளையோடு
ஜாதிப் போர்க்களத்தில்
நாங்கள் அவளை களமிறக்கினோம்.
அவளது வார்த்தைகளாலேயே
அவளது காதலனைத் தோற்கடித்தோம்.
இந்தோ
இளவரசனை சாகடித்தும் விட்டோம்.

இனி
தந்தையில்லாத திவ்யா
இளவரசனில்லாத திவ்யா
எப்படி வாழ்வாளோ தெரியாது.
அதுபற்றி எங்களுக்கு கவலையும் கி்டையாது.

நாங்கள்
ஜாதியை வெற்றி பெறச் செய்து விட்டோம்.
எங்களுக்கு அது போதும்.

தோற்றுப் போன காதல் பற்றி
செத்துப் போன உயிர்கள் பற்றி
எங்களுக்கு எந்த கவலைகளுமே இல்லை.

காதலுக்கு...
எங்களுக்கு இந்தியாவில்
தாஜ்மகால் இருக்கிறது.
சினிமா இருக்கிறது.

நாங்களதை அங்கு வாழவைத்துக் கொண்டிருப்போம்.

---xxx----

தீபிகா
04-07-2013
05.32 Pm.


தொடர்புடைய செய்தி இணைப்பு -  http://www.envazhi.com/dharmapuri-divyas-husband-ilavarasan-dead-body-found-at-track/



Jul 2, 2013

சிறைவைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்


சிறைவைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்


எமது குழந்தைகள்
சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களறியா
அவர்களுக்கான சுதந்திரப் புல்வெளிகளில்
விளையாட ஆட்களற்று
வண்ணத்துப் பூச்சிகள் சோர்ந்து போயிருக்கின்றன.

ஒரு சிறிய தொட்டியறைக்குள்
சிறைவாழுமெம் குழந்தைகளுக்கு
நண்பர்களாக இருக்கிறார்கள்.
மிகச்சிறிய கண்ணாடித் தொட்டிக்குள்
அடைபட்டுக் கிடக்கும் வண்ணமீன்கள்.

விழித் திரைகள் ஒடுக்கப்பட்ட குழந்தைகள்
சிறையின் மின்சார வெளிச்சங்களில்
ஒளியற்று தனித்திருக்கிறார்கள்.

வெளியே
பாட்டுப்பாட குழந்தைகளில்லா நிலவு
அவர்களுக்காய் அலைந்து கொண்டிருக்கிறது.
மிக்கி மவுசையும், டோறாவையும் தவிர
வேறெதையும் அடையவிடாது தடுக்கிறது
அவர்களின் சிறையுலகு.

அவர்களொரு போதும்
ஒரு எறும்பின் வரிசையை
பின் தொடர்ந்து போனதேயில்லை
ஒரு மாமரக் குயிலுக்கு
பாட்டுச் சொல்லிக் கொடுத்ததுமில்லை.
வண்ணத்துப் பூச்சியொன்றின் மஞ்சளையேனும்
கைவிரல்களால் தீண்டிப் பார்த்ததும் கிடையாது.
ஒரு நாய்க்குட்டியின் வாலில்
ஈர்க்கால் அடித்து அழவைத்துப் பார்க்கவுமில்லை.

புத்தகப் பைகளை மட்டுமே சுமக்கும்
அவர்களின் முதுகுகள்
இதுவரையொரு போதும்
உப்புமூட்டை சுமந்து மகிழ்ந்ததேயில்லை.

கூட்டுக் கோழிகளாய் ஒடுக்கியிருக்கின்ற
மண்படாக் குழந்தைகளின் கால்கள்
மழையைப் பார்த்து அஞ்சுகின்றன.
ஒரு மாடு புல்லுண்பதைக் கூட
குழந்தைகள் டிஸ்கவரி அலைவரிசையில்
அதிசயமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு கடலின் ஓவியத்தை
அலைகளைப் பார்த்திரா குழந்தை விழிகள்
ரசிக்க முடியாமல் திருப்பி விடுகின்றன.

கொக்கக் கோலாவை உறிஞ்சியிழுக்கிற
அவர்களின் பிஞ்சு உதடுகள்
வழுக்கல் செவ்விளநீரை
அலட்சியத்தோடு நிராகரிக்கின்றன.
தேங்காய்ப்பூ குழல் புட்டை
தொட்டுப் பார்க்காமலேயே ஒதுக்குகின்ற
அவர்களின் அவசர வயிறுகள்
நூடில்சுக்குள் சிக்குண்டு கிடக்கின்றன.
பனங்கிழங்கின் சுவையறியா
குழந்தைகளின் பற்களுக்கிடையில்
கொழுவுண்டு கிடக்கிறது லாலிப் பொப்

ஒரு சுண்டெலியைப் பிடித்தபடி
அவர்கள் சவாரிப் போட்டி செய்கிறார்கள்.
சமர்க்களங்களில் போர் புரிகிறார்கள்.
சாப்பாட்டுக் கடை நடத்துகிறார்கள்.
இன்னுமின்னும்
எல்லா சிறை விளையாட்டுக்களுக்கும்
அவர்களுக்கு சிறியதொரு ஒளிரும் திரைமைதானம்
போதுமானதாகவே இருக்கிறது.

எந்திரன்களோடு விளையாடிக் கொண்டிருக்கும்
எமது குழந்தைகளுக்கு
எப்போதேனுமொரு பொழுதொன்றில்
அன்னியர்களாகி விடக்கூடும்
பெற்றோரும் கூட.


---xxx----

தீபிகா
01-07-2013
11.29 Pm






Jul 1, 2013

நான் இன்னும் சாகவில்லை


நான் இன்னும் சாகவில்லை


பூக்களுக்காய் காத்திருக்கிற 
மலர்வளையங்களே
அஞ்சலிக்காய் காத்திருக்கிற 
அழுகைச் சொற்களே
பழையபடம் தேடி பதிவி்ட காத்திருக்கிற 
பதிவர்களே
RIP எழுதக் காத்திருக்கிற 
கருத்தாக்களே
சிறப்பு நிகழ்ச்சி தயார்ப்படுத்தி வைத்திருக்கிற 
தொலைக்காட்சியே
பின்னணி இசைக்கக் காத்திருக்கிற 
இழுவை ஒலியே
அட்டைப்படத்துடன் புத்தகம் அச்சிட
குறிப்பெடுக்கிற ஆசிரியரே
இடத்தை மிச்சம் வைத்திருக்கிற 
தினசரிகளே
விழிகளுக்குள் தேங்கியிருக்கிற 
கண்ணீர்த் துளிகளே

தயவுசெய்து 
கொஞ்சம் பொறுமையாயிருங்கள்.
நான் இன்னும் சாகவில்லை.


---xxx---

தீபிகா
27-06-2013
8.24 Am.