More than a Blog Aggregator

Jul 9, 2013

மண்ணவன்

மண்ணவன்

ஒரு யுத்தத் தோல்வியில் 
சரணடைந்து கொண்ட அவனை
சீருடையில் காணப்பயந்த அவர்கள்
நிர்வாணமாக்கி நிறுத்தினார்கள்.

அப்போதும்
விடுதலையின் தாகமெரிந்து கொண்டிருந்த
அவன் விழிக்கிடங்குகளை பார்க்க அஞ்சியவர்கள்
கண்களை துணி கொண்டு கட்டினார்கள்.

நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை அழுத்தி
சுடப்போவதாகக் கத்தியவர்களின் முன்னால்
அவன் கையெடுத்துக் கும்பிடாததால்
கைகளை பின்னால் பிணைத்துக் கட்டினார்கள்.

மரணத்துக்குப் பயந்த எந்த வார்த்தைகளையும்
அவன் உச்சரிக்க மறுத்ததால்
துப்பாக்கிப் பிடியால்
பற்களை நொருக்கிக் கொட்டினார்கள்.

இரத்தம் ஒழுகிற வாயோடு
அவன் அமைதியாக இருந்தான்.
எல்லாம் தெரிந்த ஞானியைப் போல.

ஆட்காட்டிக் குருவி
சாவுப்பாடலை அலறத் தொடங்கியிருந்த
ஒரு நள்ளிரவில்
பச்சைப் புற்களில் ரத்தம் பிசுபிசுத்த
சப்பாத்துப் பாதை வழியாக
அவர்கள் அவனை
பலிக்களத்துக்கு இழுத்துப் போனார்கள்.

நிலவு பார்த்துக் கொண்டேயிருக்க
அவனுடைய உயிர்ப் பூவை
பிடரியின் வழியாக அவர்கள் கொய்த போது
அவனது தாய் முத்தமிட்ட
நெற்றிப் பொட்டிலிருந்து
தாயின் குங்குமநிறக் குருதி வழிந்தோடியது.

அடுத்த பூவை இழுத்து வருவதற்கு
கோழைகள் திரும்பி நடந்தார்கள்.

விழுந்து கிடந்த வீரனின்
இறுகப் பொத்திய கைவிரல்களுக்கிடையால்
கொட்டுப்பட்டுக் கொண்டிருந்தது
அவனது தாய் மண்.

---xxx---


தீபிகா
22-06-2013
06.05 P.m

Jul 8, 2013

பிரிவுக்கு தெரிந்தது


பிரிவுக்கு தெரிந்தது

யாருமற்றஇரவில்
தனித்திருக்கும் நிலவின் கண்களை
ஒரு தூக்கம் துரத்தப்பட்ட விழிகளோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னூர் தெரிந்தது.
எருமைகள் படுத்திருக்கும் வயல்களில்
முதுகுகளில் விருந்துண்டு கொண்டிருந்த
வெள்ளைக் கொக்குகள் தெரிந்தன.
அறுகம்புல் படங்கு விரித்திருந்த
ஒற்றையடிப் பாதை தெரிந்தது.
அதில் தடயமிழுத்துப் போய்க் கொண்டிருந்த
நாக்கிளிப்புளு தெரிந்தது.
காகத்தின் எச்சத்தடம் காய்ந்திருந்த
வீட்டின் மரப்படலை தெரிந்தது.
அரிசிமா வறுத்த அடுப்படிச் சாம்பலுக்குள்
சுருண்டு கிடந்த பூனையின் வால் தெரிந்தது.
கிணற்றடிப் பாசிப்பூக்கள் தெரிந்தன.
மாமரத்தில் குடியிருந்த அணிலின் வீடு தெரிந்தது.
கொடியில் தனிமையாய் தொங்கிய
உடுப்புக் கொழுவிகள் தெரிந்தன.
அணிலரித்து மிச்சம் விட்ட
பழுத்த கொய்யாப்பழப் பாதி தெரிந்தது.
ஒன்றிரெண்டு செவ்வந்திப் பூக்கள் தெரிந்தன.
இருமிக் கொண்டு படுத்திருந்த
அப்பாவின் பித்தை வெடித்த கால்கள் தெரிந்தன.
நிலவு விழுந்து பளபளத்த
அம்மாவின் சுருங்கிய முகத்தில்
ஒரு தெய்வத்தின் சாயல் தெரிந்தது.
பிறகெதுவும் தெரியவில்லை.
என் கண்ணீரைத் தாண்டி.

---xxx---

தீபிகா
07-07-2013
10.06Am

Jul 6, 2013

தகவல்யுகத்து மரணங்கள்



தகவல்யுகத்து மரணங்கள்


அவன்
நாளைய பத்திரிகைகளில்
தடித்த எழுத்துடன் தலைப்புச் செய்தியாவான்.
வாராந்த இதழ்களின் முகங்களில்
தன்முகம் காட்டியபடி எங்கும் தொங்குவான்.
செய்வதறியா பார்வையாளனாய்
முகப்புத்தகம்
ஆனமட்டும் தன்மேனியெங்கும்
அவன் பதிவுகளை நிறைத்துக் களைக்கும்.
அவனூரில் தடையுத்தரவு பிறப்பித்து
தன்னிருப்பை சரிபார்த்துக்கொண்டு ஆட்சியடங்கும்.
நீதியான விசாரணை வேண்டுமென்று
கட்சிகள் அறிக்கையிடும்.
வானொலிகள் அவனின் இழப்புச் செய்தியை
வேகமாக வாசித்துக் கொண்டு கடந்து செல்லும்.
ஏதோவொரு தொலைக் காட்சி
அவனின் சாவுடலை நேரலையில் ஒளிபரப்பும்.
நண்பர்கள் கண்ணீர் அஞ்சலியடித்து
மதிற்சுவர்களெங்கும் ஒட்டுவார்கள்.
அவன் முகம் பின்னணியில் மெதுவாயோடும்
நேரலை விவாதத் திரையில்
கருத்தாக்கள் வந்தமர்ந்து
ஒரு மணி நேரம் பேசிச் செல்வர்.
அடுத்தடுத்த வாரங்களில்
அவனுடைய அம்மாவின் கதறல் பேட்டி
அவளின் கண்ணீர் முகத்துடன் வெளிவரும்.
சில வேளைகளில்
அடுத்த மாத நீயா நானாவில்
அவன் பெயரடிபடும்
ஒரு பொது விவாதமும் நடந்து முடியும்.
அவனை நேசித்த உறவுகளின் இதயங்கள்
அவனைப் பற்றிய அழுத்தும் நினைவுகளை
கண்ணீர்வழி கீழிறக்கி வைத்து
மெல்ல மெல்ல விடுபட்டு வெளிவரும்.

அவ்வளவும் தான்.

அத்துடன்
அவனை எல்லோரும் மறந்து போய்
அடுத்துவரும்
இன்னொரு பரபரப்பான முகத்தை
சுமந்து செல்ல தயாராகிவிடுவார்கள்.

---xxx---


தீபிகா
04-07-2013
07.57 Pm.