More than a Blog Aggregator

Sep 8, 2013

குடியிரவு



குடியிரவு


இரவைக் கிழித்துக் கொண்டொலிக்கும்
குடிகாரனின் தத்துவப் பாடலில்
கரைந்து கசிகிறது
ஒரு குடும்பத்தின் கண்ணீர்.

வெட்கமும்,அவமானமும் தின்ற
அவனது
வளர்ந்த பெண்பிள்ளைகளின் முகங்கள்
கண்ணீர் குடித்து வீங்கியிருக்கின்றன.

காலைச் சத்தியங்களை
உடைத்தெறிந்து கொண்டு
மீண்டும் மரமேறும்
குடிகாரனின் வேதாளம்
ஒரு மாலைத் தேனீரைப் போல
குடியைக் குடித்துக் கொண்டு ஆடுகிறது.

பெண்களின் தலை முடியிழுத்து
சண்டையிடப் போகும்
குடிகார வீரனுக்காக
காத்திருக்கிறது அவனது வீடு.

பிறப்புறுப்புக்களால் நிறையப் போகும்
அவனது வசைச் சொற்களை
ஒளிந்திருந்து கேட்கத் தயாராகிறது
ஊரின் செவிகள்.

வீதியோரமாய் வளர்ந்து நின்று
எல்லாவற்றையும் பார்த்து புன்னகைக்கிறார்.
குடிமக்களின் மேல் அக்கறையுள்ள
மாண்புமிகு தலைவர்.


---xxx---

தீபிகா

08.09.2013
07.38 Pm.

Aug 14, 2013

மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்


மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்


உங்களுக்குத் தெரியுமா?

நாங்களொரு பருக்கை சோற்றுக்காக
உமிக் கும்பிகளை
இரகசியமாய் இரவுகளில் கிளறியவர்கள்.

யானை மிதித்த கால்தடத்திற்குள்
வற்றாது மிச்சமிருந்த தண்ணீரில்
தாகம் தீர்த்துக் கொண்டு தப்பி வந்தவர்கள்.

கடவுள்கள் உறுப்பிழந்து
அனாதையாகி செத்துக் கிடந்ததை
நம்பமுடியாத கண்களுக்குள் ஏந்தியவர்கள்.

வீடுகளை பார்த்துக் கொண்டு
பதுங்குகுழிக்குள் படுத்துறங்கியவர்கள்.
மின்விளக்குகளை அணைத்துவிட்டு
மெழுகுதிரி வெளிச்சங்களில் படித்தவர்கள்.

விமானங்களை கண்டால்
விழுந்தடித்துக் கொண்டு பதுங்கியவர்கள்
பட்டாசுகள் வெடித்தாலும்
காதுகளைப் பொத்திக்கொண்டு படுத்தவர்கள்.

நிலவெறிக்கும் இரவுகளை
ரசிக்க முடியாமல் அடைந்திருந்தவர்கள்.
நாய்கள் குரைத்தால்
நடுநடுங்கி வியர்த்து கொட்டியவர்கள்.

நாங்கள்
உறுப்பிழந்த மனிதர்களையும்
உறவிழந்த மனிதர்களையும்
சாதாரணமாய்
மிகச் சாதாரணமாய்
சுமந்து கொண்டிருக்கிறவர்கள்.

விதைத்த பயிரை
அறுவடைக்கு முன்னே
தொலைத்து வந்திருக்கிறவர்கள்.
சிதைத்த கனவுகளை
இதயங்களுக்குள்
சேகரித்து கொண்டு வந்திருக்கிறவர்கள்.

எங்கள் கதை நீளமானது.
எங்கள் கதை துயரமானது.
எங்கள் கதை கண்ணீர் சிந்துவது.
எங்கள் கதை குருதி வழிவது.

நாங்கள் எப்போதும்
மரணங்களோடு வாழ்ந்தவர்கள்.
நாங்கள் இப்போதும்
அகதிகளாகி அலைகிறவர்கள்.

குறித்துக் கொள்ளுங்கள்

நாங்கள்
நம்பிக்கைகளை கைவிடாதவர்கள்.

---xxx----

தீபிகா
11-07-2013
2.15 Pm.

Jul 12, 2013

பிரச்சாரகி



பிரச்சாரகி


தன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கும்
கவர்ச்சி வார்த்தைகளை
வெயிலின் சுமை தாங்கிய படி
கால்கடுக்க நின்று கொண்டு
அந்தப் பெண் எல்லோருக்கும்
இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறாள்.

உதாசீனப்படுத்திக் கொண்டும்
புறக்கணித்துக் கொண்டும்
சிலவேளைகளில்
வசவுகளை வழங்கிக் கொண்டும்
கடந்து போகிற எல்லா முகங்களிடமும்
மனனம் செய்து வைத்திருக்கிற
அந்த இரவல் சொற்களை
அவளுடைய குரல் எந்த உணர்ச்சிகளுமற்று
சலிக்காமல் இறைத்துக் கொண்டேயிருக்கிறது.

அவளுக்குச் சொந்தமில்லாத
அந்த வார்த்தைகளின் சத்தியத்தன்மை பற்றி
அவளுக்கு எதுவுமே தெரியாது.
அளவுக்கு மிஞ்சிய ஒப்பனைகளோடு
வீதியில் இறக்கிவிடப்பட்டிருக்கும்
பரப்புரை வாக்கியங்களுக்கான
அந்த ஆடம்பரப் பொருட்களை
அவளுடைய கைகள்
ஒருபோதும் தடவிப் பார்த்ததுகூட இல்லை.

அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.
நாக்கு வரள தான் உச்சரித்துக் கொண்டிருக்கும்
அந்த வார்த்தைகள் தான்
தன்னுடையதும்...
தன்னுடைய குழந்தையினதும்...
வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கின்றன
என்ற உண்மை மட்டும்.

---xxx----

தீபிகா
09-07-2013
10.04 Am