More than a Blog Aggregator

Mar 8, 2014

பிரிய முடியாப் பிரிய மண்


பிரிய முடியாப் பிரிய மண்



நதிக்கரைப் பாதைகளை துறந்துவிட்டு
கட்டடக் காடுகளுக்குள்
நான் எதைத் தேடிப் போகிறேன்?

எந்த நறுமண வாசங்களாலும்
கொண்டு வந்து தரமுடியா
எனது மண் வாசத்தை
நானெப்படி விட்டுச் செல்ல முடியும்?

ஒரு வேப்பமரத்தைக் காண முடியா
வலியின் பெருநெருப்பில்
மூச்சுமுட்டிச் சாகிற விதிக்காகத் தானா
விமானமேறப் போகிறது எனதுயிர்?

இயற்கை வரைந்த மென்பச்சை ஓவியங்களை
இங்கே வாட விட்டுவிட்டு
செயற்கைப் புல்வெளிகளில் அமர்ந்து
நானெந்தக் கவிதையை எழுதுவேன்?

இதுவரை
என்னைச் சுற்றிப் பறந்த
வண்ணத்துப் பூச்சிகளையும்
எனது காலைகளை
தனது காந்தர்வக் குரலால் நிரப்பிய
கருங்குயிலையும் தொலைத்து விட்டு
நானெந்த முகாரியைப் பாடுவேன்?

வெள்ளைத் தோல் மனிதர்களிடத்தில்
என் கிராமப் பாசத்தை
நானெப்படிக் கடன் கேட்பேன்?
ஆங்கிலக் குரல்களுக்குள்
என்னரும் தமிழைத் தேடித் தேடி
நானெத்தனை நாள் தவமிருப்பேன்?

வேப்பம்பூ வடகத்துக்கும்
பலாப்பழச் சுளைக்கும்
எத்தனை நாள் எச்சில் விழுங்குவேன்?
நிலவு விழும் இரவில்
தென்னங்கீற்றுக்கள் அசைய
முற்றத்து மணலில் எப்போது தூங்குவேன்?

அறுகம்புல் வரம்பில் அமர்ந்திருக்கும்
வெள்ளைப் பாற் கொக்குகளின் வரிசையை
எந்தப் பூங்காவில் தேடுவேன்?
அம்மாவின் மடியை
அப்பாவின் இருமலை
அக்காவின் காற்கொலுசு ஒலியை
அண்ணாவின் அதட்டலை
தம்பி தங்கையின் நேசத்தை
தனித்து விடப்பட்ட தேசத்தில்
எங்கே நான் தேடித் தேடி விம்முவேன்?

என்னால் முடியவேயில்லை.
எனது மண்ணை விட்டு
மனசைப் பெயர்த்துச் செல்வதற்கு.

---xxx----

தீபிகா
13.12.2013
2.08 Pm.

Oct 3, 2013

ஒரு காலம் இருந்தது.


ஒரு காலம் இருந்தது.


ஒரு காலம் இருந்தது மகனே!
ஒரு காலம் இருந்தது.

மனிதாபிமானத்தையும்
மனச்சாட்சியையும்
எம்மில் பெரும்பாண்மையினர்
நேசித்த ஒரு காலம் இருந்தது.

கடவுளுக்கு பணிந்த காலம்.
சத்தியத்தை மதித்த காலம்.
நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
பெண்களை போற்றிய காலம்.
நீதியை நிலைநாட்டிய காலம்.
நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.

நாடகக்கலை வளர்ந்த காலம்.
நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.
ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.

பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
கோயில்கள் சேவை செய்த காலம்.
மழை தவறாமல் பொழிந்த காலம்.
மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
தண்ணீர் விற்கப்படாத காலம்.
வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.

மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.

எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.

சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
வாகன நெரிசல் இல்லாத காலம்.
இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
ஊர்கூடி தேர் இழுத்த காலம்.

இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத
ஒரு காலமிருந்தது மகனே!
ஒரு காலமிருந்தது.

அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.

---xxx----

தீபிகா.
02.10.2013
05.00 Pm.

Sep 8, 2013

குடியிரவு



குடியிரவு


இரவைக் கிழித்துக் கொண்டொலிக்கும்
குடிகாரனின் தத்துவப் பாடலில்
கரைந்து கசிகிறது
ஒரு குடும்பத்தின் கண்ணீர்.

வெட்கமும்,அவமானமும் தின்ற
அவனது
வளர்ந்த பெண்பிள்ளைகளின் முகங்கள்
கண்ணீர் குடித்து வீங்கியிருக்கின்றன.

காலைச் சத்தியங்களை
உடைத்தெறிந்து கொண்டு
மீண்டும் மரமேறும்
குடிகாரனின் வேதாளம்
ஒரு மாலைத் தேனீரைப் போல
குடியைக் குடித்துக் கொண்டு ஆடுகிறது.

பெண்களின் தலை முடியிழுத்து
சண்டையிடப் போகும்
குடிகார வீரனுக்காக
காத்திருக்கிறது அவனது வீடு.

பிறப்புறுப்புக்களால் நிறையப் போகும்
அவனது வசைச் சொற்களை
ஒளிந்திருந்து கேட்கத் தயாராகிறது
ஊரின் செவிகள்.

வீதியோரமாய் வளர்ந்து நின்று
எல்லாவற்றையும் பார்த்து புன்னகைக்கிறார்.
குடிமக்களின் மேல் அக்கறையுள்ள
மாண்புமிகு தலைவர்.


---xxx---

தீபிகா

08.09.2013
07.38 Pm.