More than a Blog Aggregator

Dec 26, 2011

 நீராதேவி




நீராதேவி
யாருக்கும் சொந்தமில்லாதவள்.

நிறமில்லாமலிருக்கும் அவளிடம்
எந்த வாசனைகளுமில்லை.
சுவைகளும் இல்லை.

ஆனால்...
நிறங்களோடும்
வாசனைகளோடும்
சுவைகளோடும் வருகிற மனிதர்கள்
அவளை உறிஞ்சி இழுக்கிறார்கள்.

அவளோ பேதம் பார்க்காமல்
எல்லோருக்கும்
தன்னை பருகக் கொடுக்கிறாள்.
அவளை அள்ளுபவர்களும்
கிள்ளுபவர்களும் தான்
தங்களுக்குள் பேதம் பார்க்கிறார்கள்.

நீராதேவி பயணிக்கிறபோது
அவளை வழிமறித்து அணைக்கிறவர்கள்
தங்களுக்கென
அவளை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

அவளிடத்தில் தாகம் தணிப்பவர்கள்
அவள் யாருக்கென்ற போட்டியில்
தங்களுக்குள் உரசிக்கொண்டு
நெருப்பு மூட்டுகிறார்கள்.
இருபக்கமும் நின்று
மாறி மாறி கத்துகிறார்கள்.
பாதைகளை இழுத்து மூடிக்கொண்டு
பதாகைத் தடிகளால் அடிபடுகிறார்கள்.
இரத்தம் இறைக்கிறார்கள்.
பொங்கிக் குதிக்கிறார்கள்.

யாருக்கும்
உரித்துடையவள் ஆகமுடியா
நீராதேவி பொறுமையோடு இருக்கிறாள்.

எங்கள் எல்லோருக்கும்
நன்றாகவே தெரியும்.
அவள் பொங்கியெழுந்தால்
எப்படி இருக்குமென்று.

-----xxx------

தீபிகா.
22.12.2012
1.13 P.m


* 2004-12-26 - (சுனாமி நாள்)
* 2011-12-26 - ( 7ம் ஆண்டு நினைவு வலிநாள்)








Dec 22, 2011

மனசுக்குள் வளரும் ஆலமரம்




ஒற்றைக்கால் கொண்ட
பச்சைக் கம்பளக் கட்டிலாய்
விசாலித்திருக்கிற ஆலமரம்
பெருமைகள் நிறைந்துவழிய
தன் சாதனைச் சொற்களை
என் செவிகளுக்குள் திணித்தது.

தான்
வெயில் வாங்கி நிழல் கொடுப்பதாய்...
வேர்வைத்துளிகளை காய வைப்பதாய்...
மழைக்கு பெருங்குடை பிடிப்பதாய்...
குருவிக் குஞ்சுகளுக்கு பிரசவ விடுதியாயும்...
அணில்பிள்ளைகளுக்கு
விளையாட்டு மைதானமாயும்
இருப்பதாய் விலாசமடித்ததது.

வென்றதும் தோற்றதுமான
பல காதல்கள்
முதன்முதலில் தன் மேனியிலேயே
பதிவு பண்ணிக்கொண்டதாக
தழும்புகள் காட்டியது.

சிறுவர்கள் ஊஞ்சலாட
விழுதுகள் கொடுப்பதாயும்..
பெருசுகளிருந்து புகையிழுத்து விட
வேரடிகளை கொடுப்பதாயும்...
ஆச்சியொருத்தி கச்சான் விற்க
குளி்ர்மையான இடம் கொடுப்பதாயும்
சுய விளம்பரம்செய்தது.

தன் சாதனைகளை
சலசலத்துக் கொண்டிருந்த
ஆலமரத்தின் நிழலுக்கு கீழே
பறவை விழுத்திய எச்சத்துக்குள்ளிருந்து
முளைவிட்டு கருகிக் கொண்டிருந்த விதை
குற்றம் சாட்டியது.

ஆலமரம்
தனக்கு கீழிருக்கும் எதையும்
வளரவிடாது தடுப்பதாய்.


தீபிகா
02.12.2011
1.58 Pm.

Dec 20, 2011

எனது பிள்ளையின் காணி



போகவும் வரவும்
நான் பார்த்துக்கொண்டு போகிற
எனது பிள்ளையின் காணியை
இவர்கள் உழுது வைத்திருக்கிறார்கள்.
எனது பிள்ளையும்
அவனது நன்பர்களுமாய் சேர்ந்து
நட்டு வைத்த விதைகளை
முளைவிடும் முன்னமே
இவர்கள் கிளறியெறிந்து விட்டார்கள்.

பூக்களெதுவும் பூக்காதபடி
எனது பிள்ளையின் காணி எரியூட்டப்பட்டிருக்கிறது.
வெளிச்சங்களெதையும் எரியவிட முடியாதபடி
அங்கு பச்சை இருட்டுக்கள் காவலிருக்கின்றன.

எந்த உறுதிகளையும்
கைகளில் வைத்திருக்காதவர்கள்
எனது பிள்ளையின் காணியை பார்க்கவிடாமல்
என்னை தடுக்கிறார்கள்.

அங்கே
எனது பிள்ளையும் அவனது நன்பர்களும்
பசியுடன் படுத்திருக்கிறார்கள்.

அவர்களுக்காய்
குடிப்பதற்கு நீர் கொண்டு போகவும்
சாப்பிடுவதற்கு பலகாரம் கொண்டு போகவும்
இம்முறையும் முடியாமல் போயிற்று
இந்த முதுமை விழுந்த தாயாலே.

எனது பிள்ளைகளுக்கான நேரத்தில்
ஆலயங்களெதிலும்
தீபம் காட்டி மணியடித்து
அர்ச்சனை செய்விக்கமுடியாதபடி
நான் வாழும் நிலத்தையும்
இவர்கள்
ஏறி மிதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

-------xxx----------



தீபிகா
29.11.2011
2.31 P.m