More than a Blog Aggregator

Oct 3, 2013

ஒரு காலம் இருந்தது.


ஒரு காலம் இருந்தது.


ஒரு காலம் இருந்தது மகனே!
ஒரு காலம் இருந்தது.

மனிதாபிமானத்தையும்
மனச்சாட்சியையும்
எம்மில் பெரும்பாண்மையினர்
நேசித்த ஒரு காலம் இருந்தது.

கடவுளுக்கு பணிந்த காலம்.
சத்தியத்தை மதித்த காலம்.
நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
பெண்களை போற்றிய காலம்.
நீதியை நிலைநாட்டிய காலம்.
நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.

நாடகக்கலை வளர்ந்த காலம்.
நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.
ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.

பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
கோயில்கள் சேவை செய்த காலம்.
மழை தவறாமல் பொழிந்த காலம்.
மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
தண்ணீர் விற்கப்படாத காலம்.
வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.

மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.

எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.

சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
வாகன நெரிசல் இல்லாத காலம்.
இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
ஊர்கூடி தேர் இழுத்த காலம்.

இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத
ஒரு காலமிருந்தது மகனே!
ஒரு காலமிருந்தது.

அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.

---xxx----

தீபிகா.
02.10.2013
05.00 Pm.

Sep 8, 2013

குடியிரவு



குடியிரவு


இரவைக் கிழித்துக் கொண்டொலிக்கும்
குடிகாரனின் தத்துவப் பாடலில்
கரைந்து கசிகிறது
ஒரு குடும்பத்தின் கண்ணீர்.

வெட்கமும்,அவமானமும் தின்ற
அவனது
வளர்ந்த பெண்பிள்ளைகளின் முகங்கள்
கண்ணீர் குடித்து வீங்கியிருக்கின்றன.

காலைச் சத்தியங்களை
உடைத்தெறிந்து கொண்டு
மீண்டும் மரமேறும்
குடிகாரனின் வேதாளம்
ஒரு மாலைத் தேனீரைப் போல
குடியைக் குடித்துக் கொண்டு ஆடுகிறது.

பெண்களின் தலை முடியிழுத்து
சண்டையிடப் போகும்
குடிகார வீரனுக்காக
காத்திருக்கிறது அவனது வீடு.

பிறப்புறுப்புக்களால் நிறையப் போகும்
அவனது வசைச் சொற்களை
ஒளிந்திருந்து கேட்கத் தயாராகிறது
ஊரின் செவிகள்.

வீதியோரமாய் வளர்ந்து நின்று
எல்லாவற்றையும் பார்த்து புன்னகைக்கிறார்.
குடிமக்களின் மேல் அக்கறையுள்ள
மாண்புமிகு தலைவர்.


---xxx---

தீபிகா

08.09.2013
07.38 Pm.

Aug 14, 2013

மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்


மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்


உங்களுக்குத் தெரியுமா?

நாங்களொரு பருக்கை சோற்றுக்காக
உமிக் கும்பிகளை
இரகசியமாய் இரவுகளில் கிளறியவர்கள்.

யானை மிதித்த கால்தடத்திற்குள்
வற்றாது மிச்சமிருந்த தண்ணீரில்
தாகம் தீர்த்துக் கொண்டு தப்பி வந்தவர்கள்.

கடவுள்கள் உறுப்பிழந்து
அனாதையாகி செத்துக் கிடந்ததை
நம்பமுடியாத கண்களுக்குள் ஏந்தியவர்கள்.

வீடுகளை பார்த்துக் கொண்டு
பதுங்குகுழிக்குள் படுத்துறங்கியவர்கள்.
மின்விளக்குகளை அணைத்துவிட்டு
மெழுகுதிரி வெளிச்சங்களில் படித்தவர்கள்.

விமானங்களை கண்டால்
விழுந்தடித்துக் கொண்டு பதுங்கியவர்கள்
பட்டாசுகள் வெடித்தாலும்
காதுகளைப் பொத்திக்கொண்டு படுத்தவர்கள்.

நிலவெறிக்கும் இரவுகளை
ரசிக்க முடியாமல் அடைந்திருந்தவர்கள்.
நாய்கள் குரைத்தால்
நடுநடுங்கி வியர்த்து கொட்டியவர்கள்.

நாங்கள்
உறுப்பிழந்த மனிதர்களையும்
உறவிழந்த மனிதர்களையும்
சாதாரணமாய்
மிகச் சாதாரணமாய்
சுமந்து கொண்டிருக்கிறவர்கள்.

விதைத்த பயிரை
அறுவடைக்கு முன்னே
தொலைத்து வந்திருக்கிறவர்கள்.
சிதைத்த கனவுகளை
இதயங்களுக்குள்
சேகரித்து கொண்டு வந்திருக்கிறவர்கள்.

எங்கள் கதை நீளமானது.
எங்கள் கதை துயரமானது.
எங்கள் கதை கண்ணீர் சிந்துவது.
எங்கள் கதை குருதி வழிவது.

நாங்கள் எப்போதும்
மரணங்களோடு வாழ்ந்தவர்கள்.
நாங்கள் இப்போதும்
அகதிகளாகி அலைகிறவர்கள்.

குறித்துக் கொள்ளுங்கள்

நாங்கள்
நம்பிக்கைகளை கைவிடாதவர்கள்.

---xxx----

தீபிகா
11-07-2013
2.15 Pm.