More than a Blog Aggregator

Jan 30, 2015

வண்ணத்துப்பூச்சியும் மகனும்



வண்ணத்துப்பூச்சியும் மகனும்



அப்போது
நான் தோட்ட வெளியெங்கும்
துரத்தித் திரிந்து பிடித்த
அதே நிற வண்ணத்துப் பூச்சியை
இப்போது
மகன் துரத்துகின்றான்.


என்னைப் போல்
அவனுக்கு
வெளியில்லை.
வேர்வையில்லை.
காற்று இல்லை.

இறுதியில்
அவன் பிடிக்கப் போவதுமில்லை.
இந்தத்
தொலைக் காட்சித் திரையில்.

---xxx----

தீபிகா
2.33 Pm.
27.01.2015

Oct 15, 2014

இரண்டு ஆடுகள்

இரண்டு ஆடுகள்


எங்களிடம்
ஒரு நூல் நிலையம் இருந்தது.
அதை இவர்கள் எரித்தார்கள்.

எங்களிடம்
ஒரு தேவாலயம் இருந்தது.
அதை இவர்கள் தரை மட்டமாக்கினார்கள்.

எங்களிடம்
எங்கள் நிலம் இருந்தது.
அதை இவர்கள் ஆக்கிரமித்தார்கள்.

எங்களிடம்
ஒரு புகையிரதம் இருந்தது.
அதை இவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

எங்களிடம்
எங்கள் வளங்கள் இருந்தன.
அதை இவர்கள் அபகரித்தார்கள்.

எங்களிடம்
ஒரு பாடசாலை இருந்தது.
அதை இவர்கள் குண்டுவீசி அழித்தார்கள்.

எங்களிடம்
ஒரு மிருகக்காட்சிச் சாலை இருந்தது.
அதை இவர்கள் நிர்மூலமாக்கினார்கள்.

இப்போ
மீண்டும் எல்லாவற்றையும்
பெரும் விளம்பரங்களோடு
திரும்பக் கொண்டு வருகிறார்கள்.

எங்களிடம்
எங்கள் பிள்ளைகள் இருந்தன.
அவர்களை இவர்கள் இன்னும்
தரவே இல்லை.

எங்கள் பிள்ளைகளுக்கு பதிலாய்
இவர்கள் தருவதாக சொல்கிறார்கள்
இரண்டு ஆடுகள்.

---xxx----

தீபிகா
12.52 Pm.
13.10.2014

May 23, 2014

சும்மா இருந்த அம்மா

               

                 சும்மா இருந்த அம்மா

தொங்கிக் கொண்டிருக்கும்
குசினி ஒட்டடையில் ...

உப்புப் பொருமியிருக்கும்
சுடுதண்ணீர்க் கேத்தலில்...

கறுத்துக் களைத்திருக்கும்
ஊதாங்குழல் வாசலில் ...

ஈரம் கசிந்திருக்கும்
உப்பு மண்பானையில் ...

தலை கருகியிருக்கும்
விறகுக் கட்டை மிச்சத்தில் ...

தொங்கிக் கொண்டிருக்கும்
தோசைக் கல் கரையில் ...

எண்ணெய் தோய்ந்திருக்கும்
பொட்டலச் சீலையில் ...

வெளுத்து நெளிந்திருக்கும்
உலக்கைப் பூணில் ...

குழி விழுந்திருக்கும்
அம்மிக் கல்லில் ...

பெயர் எழுதி ஒட்டியிருக்கும்
சரக்குத் தூள்ப் போத்தலில் ...

நாரொன்று கழன்றிருக்கும்
இடியப்பத் தட்டில் ...

எங்கும் மிச்சமிருக்கிறது.

வீட்டில் சும்மா இருந்ததாக
எல்லோரும் சொல்லிக் கொண்ட
அம்மாவின் பெரும் உழைப்பு.

---xxx----

தீபிகா
08.32 Pm.
10.03.2014