More than a Blog Aggregator

May 18, 2013

முள்ளிவாய்க்கால்(ப்) பள்ளிக்கூடம்


முள்ளிவாய்க்கால்(ப்) பள்ளிக்கூடம்




காற்றே!
எம் துயரின் பாடலை உரத்துப் பாடு.
வானமே!
எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள்.
கடலே!
எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல்.
நெருப்பே!
எம் நெஞ்சத்து தீயையும் சேர்த்து எரி.
நிலமே!
எம் சோகங்களின் பாரங்களையும் தாங்கிக் கொள்.


காலமே!
நீ கைவிட்ட சனங்களது காயங்கள்
இன்னும் ஆறாமல் கிடக்கிறது பார்.
விதியே!
நீ விரித்த வலையில் விழுத்திய புறாக்கள்
இப்போதும் துடித்துக் கிடக்கிறது காண்.

வானத்தின் சாட்சியாய், வரலாற்றின் சாட்சியாய்,
வாரிக் கொடுத்த வள்ளல்கள் சாட்சியாய்,
வாரிவிட்ட கள்ளர்கள் சாட்சியாய்,
நம்பிக் கழுத்தறுத்த கயவர்கள் சாட்சியாய்,
நடித்துக் கெடுத்த நடிகர்கள் சாட்சியாய்,
குள்ளநரிக் கூட்டத்து குடிமகன்கள் சாட்சியாய்,
கண்ணை மூடிப் பால் குடித்த
கள்ளப் பூனைகளின் சாட்சியாய்
நம்மை நாமிழந்து, நம் சொந்தங்களை இழந்து
வாழ்ந்த மண்ணிழந்து, வரலாறு இழந்து
காலப் புத்தகத்தின் கணக்கினிலே இன்று
நான்கு ஆண்டு ஆயிற்று.

நேற்றுப் போல் இருக்கிறது
நெஞ்சில் நெருப்பெரிகிறது.
தேற்றுவார் இன்றி மனம்
தேம்பித் தேம்பி அழகின்றது.
நாற்றுப் போல் இருந்த நம்மிளங் குழந்தைகளை
கூற்றுவர் கொண்டுபோன குரூரக் காட்சி விரிகிறது.

சேற்றினிலே குற்றுயிராய் கிடந்த முகங்கள்
சேனைகளின் குண்டினிலே சிதைந்த அங்கங்கள்
வீற்றிருந்த கடவுள்களின் விழுந்தழிந்த சொரூபங்கள்
விதைந்து மண்ணில் புதைந்த விடுதலையின் கரங்கள்
சிதைந்து கிடந்த கிராமத்து இடங்கள்
எல்லாம் சுமந்து கிடக்கிறது எம் எண்ணங்கள்.

மறக்க முடியுமா? மறக்க முடியுமா?
மனதெங்கும் வழியும் காயத்தின் குருதியை
காலநதி வந்து கழுவ முடியுமா?
சுமந்த சிலுவைகள், சுரந்த கண்ணீர்கள்,
இறந்த உறவுகள், இழந்த சிறகுகள்,
குழந்தை குட்டிகள், குமர் குஞ்சுகள்,
குன்று மணிகளாய் சிதறிக் கிடந்ததை
கண்டு வந்த கண்கள் மறக்குமா?
காயத் தழும்புகள் ஆறிப் போகுமா?

புத்தனின் பிள்ளைகள் புரிந்த போர்நடனத்தில்
செம்மண் புளுதியில் செத்தநம் உறவுகள்
மீள முடியுமா? உயிர் நீள முடியுமா?
யுத்தம் முடிந்தது. சித்தம் மகிழந்தது.
புத்தம் உமக்கு மறுவாழ்வு தந்தது.
புத்தம்புது வாழ்வு இனி மலர்ந்தது
என்று சொல்லிடும் ஏமாற்று நரிகளே!
”ஓமோம் சாமி”போடும் ஓநாய்க் கூட்டமே!
நாமெம் நிலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை
நந்திக்கடல் மடி நீந்திய நாட்களை
இரக்கம் இன்றிநீர் கொன்ற உயிர்களை
இழக்கச் செய்த உடல் உறுப்பினை
இனிமேல் கொண்டு வந்திட முடியுமா?
இழந்தநம் வாழ்வை தந்திட முடியுமா?

யுத்தம் நடத்திய செத்த வீட்டினில்
செத்துக் கொண்டு நாம் இருக்கையில்
சத்தம் இன்றி பார்த்துக் கொண்டிருந்தவர்
சதங்களை கொஞ்சம் கிள்ளி எறிகிறார்.
சரியாய் போயிடும் இனிமேல் என்கிறார்.
பாவம் செய்த கைகளை மெல்லப்
பணத்தினில் கழுவி கறையை நீக்கிறார்.
அள்ளிக் கொடுத்த வன்னித் தமிழனுக்கு
கிள்ளிக் கொடுத்து கிடுகும் கொடுக்கிறார்.

யுத்தம் குடித்து சிந்திய ரத்தம்
வெள்ளை மண்மீது ஊறிக் கிடந்ததை...
பிள்ளைத் தாச்சியின் வயிறு கிழிந்து
பிறக்காக் குழந்தையின் கால் வெளிவந்ததை...
முலைப்பால் கேட்டு அழுத குழந்தைக்கு
மழைப்பால் பிடித்து அருந்தக் கொடுத்ததை...
கலைத்தாய் வாழ்ந்த கல்விக் கூடமும்
சிலையாய் இருந்த கடவுள் இல்லமும்
சிதறி நொருங்கி சிதைந்து கிடந்ததை...
தண்ணீர் கேட்டு தவித்த நாவுகள்
தாகத்தோடு குளநீர் குடித்ததை...
கண்ணீர் வழிந்த கன்னத் தசைகளில்
கையால் தொட்டு உப்புச் சுவைத்ததை...
மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?
இறக்கும் வரைக்கும் இறக்கி வைக்க
முடியாச் சோகம் இருக்கும் வரைக்கும்
உறக்கம் கூட சரியாய் வருமா?
உயிரே உன்வலி எழுத முடியுமா?

வானம் பார்த்து வாடிக் கிடந்தவர்
காயத்தோடு கைகூப்பித் தொழுததை...
காப்பாற்றென்று கதறி அழுததை...
கஞ்சிக்கரிசி கிடைக்கா வறுமையில்
கண்டதையெல்லாம் திண்டுயிர் வாழந்ததை....
காசிருந்தும் பொருளேதும் இல்லா
காலச் சோகத்தில் அலைந்து திரிந்ததை...
உமிக் கும்பிக்குள் உலைக்கு நெல் புடைத்ததை...
ஊசி மருந்தின்றி உயிர்கள் மறைந்ததை...
காயப்பட்டவர் கிடந்து முனகிய கொட்டிலின் கட்டிலில்
கொத்துக்குண்டு விழுந்து வெடித்ததை...
நேசித்த உறவல்லாம் ஒவ்வொன்றாய் சாக
யாசித்து யாசித்து வான்பார்த்து அழுததை...
பேசித்தீர்க்க முடியாச் சுமைகளில்
பேதையாய் எங்கும் அலைந்து திரிந்ததை...
சண்டை வந்து சமருக்கு இழுத்த
அண்டை வீட்டு அருமந்த பிள்ளை
அடுத்த நாளே அமைதியாய்ப் படுத்து
அடுப்படிக் கரையால் விழிமூடி வந்ததை....
அண்டை நாட்டு உறவுகள் கூட
ஆயிரந் தடைவைகள் கத்திக் குளறியும்
வந்தெமைக் காத்திடா வரலாற்றுத் துயரை....
கைகள் உயர்த்தி கண்ணீர் சுமந்து
விதியின் சதியில் சரண் அடைந்தவர்கள்
இதுநாள் வரைக்கும் இருக்கிறார் என்றோ
தெரியா வலியில் தேம்பும் கதைகளை...
யுத்தம் முடித்தபின் புத்தனை இருத்தி
சட்டம் தன்னை தாங்கள் எடுத்து
நித்தம் அடிமையாய் எமை நடத்தும்
நீதியற்ற படைகள் பிடித்த
பாதிப்பேர் கூட மீளா உண்மையை...
நான்காண்டினில் நாம் மறப்போமா?
நாளையும் கூட நினைவிழப்போமா?

முள்ளிவாய்க்கால் என்பது
ஈழத்தமிழரைப் பொறுத்த வரைக்கும் 
வெறும் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது.
அது பள்ளிக்கூடம்
வரலாற்றுப் பள்ளிக்கூடம்.

வண்ணத் தமிழ்க் கவிஞா வைரமுத்துவே!
நீ எழுதிய
கள்ளிக் காட்டு இதிகாசம் தாண்டி
ஆயிரம் கள்ளிக் காட்டு இதிகாசங்கள்
முள்ளிவாய்க்கால் மண்ணில்
இப்போதும் முனகிக் கொண்டே இருக்கும்.
ஒருமுறை சென்று பார்த்து வா.
எங்கள் கனத்த துயரத்தின் வரலாறு
அந்தச் சிவப்பு மண்ணில்
சிலவேளை உனக்காகவும் காத்திருக்கக் கூடும்.

---xxx----xxx------ 

தீபிகா.
18-05-2013
11.36 A.m
Theepajeevan@gmail.com





Aug 3, 2012

"அப்பா இல்லாத நண்பர்கள்"


அப்பா இல்லாத நண்பர்கள்




அப்பா இருந்த போது
நான் எத்தனை சந்தோசமாயிருந்தேன்.


என்னை கிளுகிளுப்பூட்டி சிரிக்க வைக்கும்
அவரின்
மீசை குத்தும் முத்தங்களில்
இன்னும் சிலிர்க்கிறது உடம்பு.

நான் கைவாரி விடுகிற
அப்பாவின் வளர்ந்து சுருண்ட
கறுப்பு ரோமங்களின் அடர்த்திக்குள்
மீண்டுவர விருப்பின்றி
சிக்குண்டு கிடக்கிறது ஞாபகம்.

இப்போது
அம்மா அணிந்துகொள்கிற
அவரின் சட்டைகளில்
இன்னும் போகாமலே இருக்கிறது.
என் அப்பாவின் வாசம்.

அம்மாவினுடைய வறண்ட விழிகளிலும்
வெறுமையான நெற்றியிலும்
தினம் தினம்
அப்பா இல்லாத வலியை
மௌனமாக கடந்து செல்கிறேன்.

அம்மாவை எப்படி சிரிக்கச் செய்வது?
என்கிற யோசனையிலேயே
அழுது தீர்க்கின்றன என் விழிகள்.

நானினி
அப்பா இல்லாத ஒரு குழந்தையாய்
நீண்டதூரம் வலிகளுடன்
மிச்சமிருக்கும் வாழ்க்கையின் பாதையில்
அம்மாவையும் சுமந்து கொண்டு
பயணிக்க வேண்டியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானிலும்
ஈராக்கிலும்
சிரியாவிலும்
எல்லா நாடுகளிலும் இருக்கும்
அப்பா இல்லாத பிள்ளைகளின்
முகங்களில் எழுதியிருக்கிற
துயரக் கதைகளின் வரிகளை
மொழியின் திரைகளை விலக்கிக் கொண்டு
என்னால் இப்போது
நன்றாக வாசித்துணர முடிகிறது.

நாங்கள்
"அப்பா இல்லாத நண்பர்கள்."


---xxx----

(காற்றுவெளி -ஆவணி 2012  இதழில் வெளியானது)
 



தீபிகா
13.03.2012
10.59 A.m

Jun 16, 2012

அப்பா

அப்பா




ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது. 
ஆனால்
ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

                                                        -Wilhelm Busch-



அப்பா...

ஒரு மனிதன்,பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும்,திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான்.ஒரு குழந்தையின் நடத்தை,பழக்க வழக்கம்,பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே. 

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சிலுவைகள் கனதியானவை. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.

ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையினதும்,அங்கலாய்ப்பினதும் தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது.தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்தினதும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ..அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.

விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை சந்தித்திருப்பார்கள்?

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?
அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?
எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..
வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...
நரம்பு தெரியும் கைகளில் ...
நரை விழுந்த மீசைகளில் ...
அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?
ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?




மனைவி,பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலிசுமந்து வலிசுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம்,துணிச்சல்,விடாமுயற்சி,நம்பிக்கை,உழைப்பு.....இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார்.பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள்,வழிகாட்டல்கள்,அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதை”

“ஒண்டுக்கும் யோசிக்காதை”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதை”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.

அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.


அப்பாக்கள் என்பவர்கள்


பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

பிள்ளைகளின் நெம்புகோல்கள்

பிள்ளைகளின் அச்சாணிகள்

பிள்ளைகளின் சூரியன்கள்

பிள்ளைகளின் திசைகாட்டிகள்

பிள்ளைகளின் ஆசிரியர்கள்

பிள்ளைகளின் நம்பிக்கைகள்.

.... ..... ..... ..... ..... ..... .... .... ....



(சர்வதேச தந்தையர் தினத்தையொட்டி எழுதிய உரைநடை)



----xxx----xxx----





தீபிகா

11-06-2012

9.18 A.m