More than a Blog Aggregator

Apr 11, 2012


நானொரு உதைபந்தாட்ட வீரன்



நீண்ட நாட்களுக்கு பிறகு
விடுதலையாகியிருக்கிற எங்கள் மைதானத்தில்
மிச்சமிருக்கும் இளைஞர்கள்
பந்தை மாறி மாறி துரத்துகிறார்கள்.



அவர்களை நோக்கி எறிகிற
என் உற்சாகச் சொற்களை
பொறுக்கியெடுக்க முடியாமல்
இளைஞர்களின் கவனங்கள்
பந்தைச் சுற்றி ஓடித் திரிகின்றன.

எவரும் பறித்தெடுக்க முடியாதபடி
நான்
கால்களால் முத்தமிட்டுக்கொண்டே
பந்தை நீண்டதூரம் கூட்டிச்செல்வேனென்பதும் ,
மையத்திலிருந்து கொண்டே
மூன்று முறை இலக்கடித்திருக்கிறேனென்பதும் ,
எங்கள் கிராமத்துக்கே
நன்கு ஞாபகமிருக்கிறது.

இப்போதும்
வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற
வெற்றிக் கேடயங்களை
நான் வாங்கி உயர்திய போது ,
இந்த இளைஞர்களது
கைகளிலிருந்தும் தான்
உற்சாக ஒலியெழுந்து அடங்கியது.

நான் சேர்த்து வைத்திருக்கிற
பரிசளிப்பு புகைப்படங்களின் மூலையில்
பாதி வெட்டுண்ட
இவர்களின் முகங்களும் சிரித்தபடியிருக்கின்றன.

இருந்தாலும்
என்னை சேர்த்து விளையாட முடியாதென
இவர்கள் சொல்லி விட்டார்கள்.
இனிமேல்.

அதனாலென்ன... ...

தினமும், வந்தமர்ந்து
கைதட்டி விசிலடித்து
இவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டுதானிருக்கும்
என் விளையாட்டு மனசு .

என்னிடம் ஒரு சோடி
பொய்க்காலும்…
ஊன்று கோலும்…
இருக்கும் வரை.



---- xxx ----


தீபிகா.
25.02.2012
08.04 P.m

8 comments:

கீதமஞ்சரி said...

காலிழந்தாலும் சோர்வுற்று முடங்கியிராமல் இன்று விளையாடுபவர்களை உற்சாகப்படுத்துவதில் இருக்கும் ஆனந்தம் நெஞ்சம் நிறைக்கிறது. உதைபந்து விளையாட்டை வாழ்க்கையெனவும் கொள்ளத்தலைப்படுகிறது மனம். அழகிய கவிதை. பாராட்டுகள் தீபிகா.

ஹேமா said...

இதற்கும் சோர்வுறா ஒரு மனம் வேண்டும் தீபிகா.கை கால் இருந்துன் இதுதான் இன்றைய நம் வாழ்வும் !

நம்பிக்கைபாண்டியன் said...

நம்பிக்கைதரும் மனதை சொல்லும் நல்லகவிதை!

Yaathoramani.blogspot.com said...

மிகச் சிறந்த படைப்பு
நல்ல தலைவனிடமும் வெற்றி வீரனிடமும் மட்டுமே
விரவிக் கிடக்கும் தலைசிறந்த தலைமைக் குணமிது
இதை அருமையான படைப்பாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

தினமும், வந்தமர்ந்து
கைதட்டி விசிலடித்து
இவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டுதானிருக்கும்
என் விளையாட்டு மனசு .

ஊக்கமும் உற்சாகமும் இரு கண்களாக
அருமையான ஆக்கம்...

ராஜி said...

தினமும், வந்தமர்ந்து
கைதட்டி விசிலடித்து
இவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டுதானிருக்கும்
என் விளையாட்டு மனசு
>>>
உற்சாகப்படுத்துதல்தானே ஒரு விளையாட்டு வீரனுக்கு உற்சாக மருந்து. அழகான, வித்தியாசமான கவிதை பகிர்வுக்கு நன்றி

Pena said...

கால்பந்தும் கவிதையுமாக என் கல்லூரிக்காலமும் யௌவனமும் [1965-1976]ஈழத்தில் களிப்புடன் கழிந்தது.அந்த பொற்காலங்களை ஞாபகப்படுத்தியது இந்தப் பதிவு.அற்புதம்.

தீபிகா(Theepika) said...

கருத்துக்களை பகிர்ந்த என் அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Post a Comment