More than a Blog Aggregator

May 12, 2012

“அம்மா என்றால் சும்மா இல்லேடா”
(உரைநடை)
                                 அன்பு,
ஆதரவு,
அர்ப்பணிப்பு,
பொறுமை,
தியாகம்,
விட்டுக்கொடுப்பு,
கரிசனை,
காதல்,

ஆகிய அத்தனை பரிசுத்தமான உண்மை உணர்வுகளையும்
காலநேரம் பாராது அள்ளிக் கொடுக்கின்ற அட்சயசுரபி,
"அன்னை" என்கின்ற
ஒப்புவமையற்ற 

ஒரேயொரு உறவான தாய்மை மாத்திரமே.

நாம்,
மனித விழிகளுக்குள் புலப்படாத 

எம்மிலும் ஆற்றல் படைத்த
பிரபஞ்சத்தின் மாபெரும் மகாசக்தியை
கடவுள் என்று வணங்குகின்றோம்.
அந்த மகா சக்தி எமக்கெல்லாம் அளித்திருக்கிற
மாபெரும் சக்தி வடிவானவள் தாய்.

நாம் அகக்கண்ணால் மட்டுமே தரிசிக்கிற ஆண்டவன்
உயிர்கொடுத்து, உருவளித்து ஒவ்வொருவருக்கும் உறவென்றாக்கி
நம் பார்வைகளுக்கு
தரிசிக்க கொடுத்திருக்கிற உத்தமியே அம்மா.

கிட்ட இருக்கிற போது , நம் கைகளில் இருக்கிற போது,
அறிந்து கொள்ளத் தவறுகிற அல்லது 

அலட்சியமாய் இருந்துவிடுகிற
அம்மா என்கிற அழகு தேவதையினுடைய
அன்பின் ஆழத்தையும், ஈரத்தையும்

பறிகொடுத்து விட்டபிறகு தான்
மனம் பதைபதைக்க நினைத்து நினைத்து உருகுகிறோம். 

இருக்கும்போது கொடுக்கத் தவறிய ஈரமுள்ள அன்பை 
இழந்த பிற்பாடு ஈரக்கண்ணீராய் 
சொரிந்து தள்ளுகின்றோம்.

அன்னை என்கிற மகரஜோதி
அருகிருந்து ஆண்டாண்டு காலமாய் ஒளி தருகிற போது
அதன் வெளிச்சத்தின் வேர்களை மதிக்கத் தவறுகிற,
மரியாதை செய்யத் தவறுகிற நம் பேதை மனசுகள்
அணைந்த பிறகு அங்கலாய்க்கிறது.
பிரிவுக் காற்று அள்ளிக் கொண்டு 

பிரியாவிடை சென்ற பிறகு பேதலிக்கிறது.

எனவே,
உறவு விருட்சத்தின் நதிமூலமாகி வெளித்தெரியாமல்
தன் அத்தனை கிளைகளையும் தாங்கி நிற்கிற
அம்மா என்கிற ஆணிவேருக்கு 

ஈரமிகு அன்பை ஊற்றுவோம்.
இருக்கிற போது இதயத்துக்கு மலர் தூவுவோம்.
விழித்திருக்கிற போது விழுதுகள் 

ஊஞ்சலாட்டுகிற காட்சியை பரிசாய் கொடுப்போம்.

ஒரு தாயின் இதயம் பிள்ளைகளுக்காய் 
எத்தனை முறை துடித்திருக்கும்? 
எத்தனை நாள் பசிகிடந்திருக்கும் அவள் வயிறு?
எத்தனை மணி நேரம் காத்திருந்திருக்கும் அவள் விழிகள்?
எத்தனை தூரங்களை வலியோடு கடந்து சென்றிருக்கும் 

அவள் பாதங்கள்? 
எத்தனை விருப்பங்களை விட்டுக்கொடுத்திருக்கும் 
அவள் மனசு?
எத்தனை காயங்களை..
எத்தனை சொற்களை...
எத்தனை வலிகளை....
எத்தனை பிரச்சனைகளை...
எத்தனை எத்தனை சோதனைகளை
தினமும் எதிர்கொண்டிருக்கும் அவள் வாழ்க்கை.

ஒரு மனிதன் வளர்கிற போது 
புரிந்து கொள்ள முடியாதிருக்கிற 
அம்மா என்கிற தன்னலமற்ற தியாகத்தின் உச்சத்தை,
அவன் வளர்க்கிற போது, 

தன் குழந்தைகளை வளர்க்கிற போது
நிச்சயமாக உணர்ந்து கொள்வான்.

காதலியின் பார்வையைக் காட்டிலும் 
அம்மாவின் பார்வையில் இருக்கிற அன்பின் ஈரத்தை 
நாம் மறுக்க முடியாது.
ஒரு தாயின் புன்னகையில் எல்லா காயங்களும் 

ஆறிவிடுமெனின் அது பொய்யே இல்லை.

அம்மாவின் தாய் மடியில் படுத்து தூங்குகிற 
அலாதியான சுகம், உலகின் எந்த சொகுசு 
பஞ்சு மெத்தைகளிலும் கிடைத்துவிடாது என்பது 
அனுபவித்த மனசுகளுக்கு நன்றாகவே தெரியும்.

தன் தாயின் கையால் உருட்டித் தருகிற உணவின் ருசி 
பிள்ளைக்கு எந்த உணவகத்திலும் கிட்டாத 
திகட்டும் உணவில்லையா?
அந்த உருளையில் தாயின் உயிர் வாசத்தை 

நாங்கள் நுகரமுடியுமில்லையா?
என்றும் மறக்க முடியாத அந்த நினைவின் வாசத்தை 

நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு பிள்ளையும் 
ஏங்கி ஏங்கி கரைவது என்பது
என்றும் தொடரும் உறவுக்கதை இல்லையா?


"அம்மா” என்று அழைக்கிற போது ஏற்படுகிற ஆத்மசுகம் 
வேறு எந்த உறவின் பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காதது.
தாய் என்கிற மூலத்தை தழுவி தாய்மொழியும், 

தாய்நிலமும் தங்களை தரமுயர்த்தி நிற்கின்றன. 
உலகின் எந்த கோடியில் ஒரு மனிதன் வாழ்ந்தாலும் அவன் தன்
தாயையும்,
தாய்மொழியையும்,
தாய்நிலத்தையும்
மறக்க முடியாது. மறந்திருக்கவும் கூடாது.

தினம் குறித்து கொண்டாடப்பட வேண்டிய நாளல்ல அன்னையர் தினம். 
அது தினந்தினமும் கொண்டாடப்பட வேண்டிய 
தாய்த் திருநாள்.

ஏனைய எல்லா தினங்களையும் போல 
வெறும் காகித மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும்
இந்த நாளை அர்த்தமுள்ளதாக்கி விட முடியாது. 

அம்மா என்கிற பாசமிகு உயிரின் ஆழந்தொட 
எந்த மொழியின் வார்த்தைகளாலும் முடியாது.

பத்து மாதம் தாங்கிய கருவறைகளின் மனசுகளை 
காயமின்றி மயிலிறகு வார்த்தைகளால் வருடுவோம்.
உதிரப் பூக்களை தாங்கிய தியாகக் கரங்களை
இறுகப் பற்றிக் கொள்வோம்.

வயிற்றிலும், இடுப்பிலுமாய் 
எம் பாரம் சுமந்த உடல்களின் பழுத்தாங்கி நடந்து
இப்போ வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களை 

பிடித்து விடுவோம்.
தோல்விகளிலும், விரக்திகளிலும் 

துவண்டு வந்த பொழுதுகளில்
தம் ஒராயிரம் முத்தங்களால் ஆறுதல் கொடுத்து
எம்மை நிமி்ர்ந்தெழ வைத்த அம்மாக்களின் வற்றாத 

பாச முத்தங்களுக்கு பதில் முத்தங்கள் பரிமாறுவோம்.

நாம் தலை சாய்த்த முதல் தோள் 
நாம் முகம் புதைத்தழுத முதல் மடி
எம் கண்ணீர் துடைத்த முதல் கைவிரல்
எம்மை முத்தமிட்ட முதல் இதழ்
நாம் பார்த்துப் புன்னகைத்த முதல் முகம்
எல்லாம்.....எல்லாம்.....
அம்மா என்கிற ஒற்றை ஜீவனுக்கே சொந்தமானது.

முதன்முதலில் கிடைத்த அந்த முழுசுகங்களின் 
சுகந்தம்,
நிறைவு,
திருப்தி,
மகிழ்ச்சி
இவையெதுவும் ஒரு மனிதனுக்கு அதற்கு பிறகு 

அதே சுகங்களுடன் அன்னையை தவிர 
வேறு எவராலும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.

தெய்வத் திருமகளான தாய், தன் குழந்தைகளுக்கு 
அள்ளிக் கொடுக்கிற அமுதசுரபிகளல்லவா அவை. 

பலநேரங்களில் நாம் வெளிப்படுத்திய விவரமறியாத எங்கள் 
கோபங்களை,
புறக்கணிப்புக்களை,
சுடுசொற்களை,
அலட்சியங்களை,
அவமானப்படுத்தல்களை எல்லாம்
நெஞ்சு நிறைந்த பாசத்தோடும், 

இமயமளவு பொறுமையோடும் தாங்கிக் கொண்டு
திரும்பத் திரும்ப எங்களை எப்போதும்
தாங்கத் தயாராயிருக்கிற தாய்மையின் மாண்பை
வாழ்த்துவதற்கும், வணங்குவதற்கும்,
நினைந்து நினைந்து மனமுருகி 

எம் மனச்சாட்சிகளின் ஆழத்திடம் 
மன்னிப்பு கோருவதற்கும்
ஒற்றை நாள் போதுமானதாகவே இருக்காது.

தன்னலமற்ற அம்மாக்களின் தியாகப் பெருவாழ்வுக்கு 
என்றும் நன்றிக்கடன் செலுத்திக் கொண்டிருப்போம்.
இருக்கும்வரை அவர்களின் இதயங்களை 

மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வோம்.
புனிதமான தாய்மாரின் மனசுகள்

புண்படும்படியாக நடவாதிருப்போம்.

வைத்திருப்பவர்கள் 
தங்கள் தோள்களில் தாங்கிக் கொண்டும்
இழந்துவிட்டவர்கள்
தங்கள் இதயங்களில் தாங்கி்க் கொண்டும்
அவர்களை சுமந்து சென்று கொண்டேயிருப்போம்.

ஏனெனில் 
அம்மாக்களின் இருப்பென்பது 
எங்கள் உயிருக்கான வீரியம்.
எம் பார்வைகளுக்கான அகல்விளக்கு.
எம் பாதச்சுவடுகளுக்கான திசைகாட்டி. 


               (அம்மா...அம்மா..எந்தன் ஆருயிரே..)...xxx....xxx.....
முற்றும்.தீபிகா.
02-05-2012
11.16 P.m
(அன்னையர் தினத்துக்காக எழுதிய உரைநடை)  

14 comments:

விச்சு said...

அன்னையர் தின வாழ்த்துக்கள். அழகான வரிகளில் அம்மாவின் தரிசனம்.

karthika said...

இந்த கவிதையை என் அம்மாவுக்காகவும் சமர்ப்பிக்கிறேன்

ஹேமா said...

உங்கள் அம்மாவில் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று அளவிட வைக்கிறது கவிதை.அன்பான அம்மாக்கள் தின வாழ்த்துகள்
தீபிகா !

இராஜராஜேஸ்வரி said...

அம்மா” என்று அழைக்கிற போது ஏற்படுகிற ஆத்மசுகம்
வேறு எந்த உறவின் பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காதது.

இனிய அன்னையர் தின வாழ்த்துகள் !

தீபிகா(Theepika) said...

விச்சு,karthika,ஹேமா,இராஜராஜேஸ்வரி மற்றும் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி said...

அன்னையின் அருமை புரியாதவர்களிடம் கொடுத்து ஒரே ஒருமுறை படிக்கச்செய்யவேண்டும். கண்ணீர் கசியும் விழிகளோடு, கட்டாயம் நாடுவர் புறக்கணித்தத் தாயை. தாய்மை சுமக்கும் வரிகளில் நெஞ்சம் நெகிழ்கிறேன். தாயன்பு கொண்ட உள்ளங்களை அன்றாடம் போற்றி வாழ்த்தி பெருமை செய்வோம். மனந்தொட்டப் படைப்புக்குப் பாராட்டுகள் தீபிகா.

Yaathoramani.blogspot.com said...

இத்தனைஅழகாக தெளிவாக விரிவாக
அம்மா என்கிற மந்திரச் சொல் குறித்து
எழுதுதல் கடினமே
மிக மிக ஆழமாகச் சிந்தித்து
அருமையான பதிவைக் கொடுத்தமைக்கு
மனமார்ந்த நன்றி.வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

பாடலும் பகிர்வும் அருமை.

Muruganandan M.K. said...

அன்னை பற்றி மனதை நிறைக்கும் பதிவு.
நன்றாக இருக்கிறது.

யுவராணி தமிழரசன் said...

தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள எனது வலைப்பூவிற்கு தங்களை அழைக்கிறேன்!
http://dewdropsofdreams.blogspot.in

வை.கோபாலகிருஷ்ணன் said...

அம்மா” என்று அழைக்கிற போது ஏற்படுகிற ஆத்மசுகம்
வேறு எந்த உறவின் பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காதது.

மிகவும் அழகான படைப்பு. வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பகிர்வு.
வலைச்சரம் மூலம் தான் உங்கள் தளத்திற்கு வந்தேன்.
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே
இது ஒரு கலவை
- சென்று பார்க்கவும். நன்றி !

SANJEEV said...

nice

Post a Comment