More than a Blog Aggregator

Jun 16, 2012

அப்பா

அப்பா




ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது. 
ஆனால்
ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

                                                        -Wilhelm Busch-



அப்பா...

ஒரு மனிதன்,பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும்,திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான்.ஒரு குழந்தையின் நடத்தை,பழக்க வழக்கம்,பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே. 

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சிலுவைகள் கனதியானவை. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.

ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையினதும்,அங்கலாய்ப்பினதும் தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது.தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்தினதும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ..அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.

விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை சந்தித்திருப்பார்கள்?

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?
அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?
எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..
வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...
நரம்பு தெரியும் கைகளில் ...
நரை விழுந்த மீசைகளில் ...
அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?
ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?




மனைவி,பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலிசுமந்து வலிசுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம்,துணிச்சல்,விடாமுயற்சி,நம்பிக்கை,உழைப்பு.....இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார்.பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள்,வழிகாட்டல்கள்,அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதை”

“ஒண்டுக்கும் யோசிக்காதை”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதை”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.

அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.


அப்பாக்கள் என்பவர்கள்


பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

பிள்ளைகளின் நெம்புகோல்கள்

பிள்ளைகளின் அச்சாணிகள்

பிள்ளைகளின் சூரியன்கள்

பிள்ளைகளின் திசைகாட்டிகள்

பிள்ளைகளின் ஆசிரியர்கள்

பிள்ளைகளின் நம்பிக்கைகள்.

.... ..... ..... ..... ..... ..... .... .... ....



(சர்வதேச தந்தையர் தினத்தையொட்டி எழுதிய உரைநடை)



----xxx----xxx----





தீபிகா

11-06-2012

9.18 A.m



14 comments:

Yaathoramani.blogspot.com said...

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.//

தந்தையர் தின தங்கள் சிறப்புப் பதிவு
மனம் தொட்டது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடரவாழ்த்துக்கள்

விச்சு said...

அப்பப்பா.........பா. தந்தையர் தின வாழ்த்துக்கள்.

ஆமினா said...

நம் விரும்பிய பொருளை வாங்கிதர இன்னும் அதிக நேரம் விய்ர்வை சிந்தும் தந்தை- மனம் இப்பொது கனக்கவே செய்கிறது!

தாய் தந்தையை என்றும் நினைவில் கொள்வொம். நல்ல நடை!

வாழ்த்துகள்

யுவராணி தமிழரசன் said...

தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள எனது வலைப்பூவிற்கு தங்களை அழைக்கிறேன்!
http://dewdropsofdreams.blogspot.in/2012/06/blog-post.html#comment-form

priyamudanprabu said...

GOOD POST...

en appa patri
http://priyamudan-prabu.blogspot.com/2009/03/blog-post_22.html

SELECTED ME said...

குழந்தையின் நடத்தை,பழக்க வழக்கம்,பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே. // உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பகிர்வு.

உங்களின் இந்தப் பதிவும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே
இது ஒரு கலவை
- சென்று பார்க்கவும். நன்றி !

நேரம் கிடைச்சா என் தளம் வாங்க... நன்றி.
திண்டுக்கல் தனபாலன்

Unknown said...

தீபிகா என் மனம் குளிர வைத்தாய், உன் வார்த்தைகள் ஈரமானவை.

mohan said...

"அழகான பாச மழை அற்புதம்"

Anonymous said...

Selva Kumar
Relay fathers are very great because they give steps to sons

கவியாழி said...

ஒரு குழந்தையின் நடத்தை,பழக்க வழக்கம்,பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே. //நீங்கள் சொல்வது உண்மையே

Sundaravelpandian said...

கண்கள் குளமாகின...

yathavan64@gmail.com said...




அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!

இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"எல்லோருக்கும் பிடித்த ஹீரோ"

சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!

வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

வலைச் சரம்

கவி மழை புவி புகும்
இல்லம் வலைச் சரம்!
கதை நல் விதை விதைக்கும்
விளை நிலம் வலைச்சரம்!
கட்டுரைத் தேன் தென்றல் தழுவிடும்
மேனி வலைச் சரம்
செந்தமிழ் இலக்கியம் பைந்தமிழ் இலக்கணம்
பிறக்கும் கருவறை வல்லோர்
நிறைந்த வலைச்சரம் வாழி!

புதுவை வேலு

UmayalGayathri said...

http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_6.html
தங்களை வசைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் சகோ வந்து பாருங்கள்

Post a Comment