More than a Blog Aggregator

Mar 12, 2012

  உண்மை அறியும் பொய்கள்



சமாதானம் தருவிக்கப்பட்டதாய்
சொல்லப்படுகிற எனது நிலத்தில்
வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற
விளம்பர மரங்களின் நிழலில்
நாய்களுடன் சேர்ந்து
வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும்
படுத்துக் கிடக்கின்றன.


திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு 
திரிகிற சனங்களின் முகங்களில்
படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள்
மிச்சமிருக்கும் வாழ்க்கையை
எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன.


சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும் 
மிருகக்காட்சிச் சாலை விலங்குகளை
பார்க்கும் ஆவல் நிறைந்த
அதே கண்கள்
குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கி
கும்மாளமிட்டபடி ஊரெங்கும்
மிடுக்குடன் அலைந்து திரும்புகின்றன.

மொட்டையடிக்கப்பட்டிருக்கும் நந்தவனங்களில்
இறக்கைகள் பிடுங்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சிகள்
இயலாமைகளோடு மெல்ல மெல்ல
ஊர்ந்து திரிகின்றன.


இனிமேல் தேன் சேகரிக்க 
அனுமதிக்கப்படாத அவைகள்
வயிறு நிறைப்பதற்காக
கைவிடப்பட்ட வெளிகளில்
அங்கும் இங்கும் அலைகின்றன.

நட்சத்திரங்களற்ற வானத்தில்
குழந்தைகள் தேடிக்கொண்டிருக்கும்
அவர்களின் தந்தைமார் பற்றி
எந்தப் பதிலையும் கொடுக்காதவர்கள்
நீச்சல் தடாகங்களையும் , பூங்காக்களையும்
அவர்களுக்கு பரிசளிக்கிற காட்சியை
படமெடுத்துக் கொண்டு போகிறார்கள்.

பகலில் சமாதானம் விற்கப்படும்
எங்கள் நகரத் தெருக்களில்
இரவில் ,
நாய்கள் அமளியாய் குரைக்கையில்
சாளரங்களை சாத்திக்கொண்டு
எல்லா இதயங்களும்
எப்போதும் போலவே படபடக்கின்றன.

துப்பாக்கிகள் கோடு கிழித்திருக்கிற
வெளித்தெரியாத வட்டங்களுக்குள்
குடியிருக்கிற எங்கள் சனங்கள்
இப்போ
தாம் எந்தப் பயங்களுமற்று
மகிழ்வுடன் குடி வாழ்ந்து கொண்டிருப்பதாய்
வெளியே சொல்ல கேள்விப்படுகிறார்கள்.


--- xxx ---



தீபிகா
23.02.2012
11.13 A.m














Feb 28, 2012

போர்க்களத்துக் குதிரைகள்



குண்டுபட்டு விழுந்த வீரர்களின்
போர்க்களக் குதிரைகள்
சுமப்பதற்கு யாருமற்று
அங்குமிங்கும் அமைதியாய் அலைகின்றன.


எல்லோருக்காகவும் ஓடித்திரிந்த
அவற்றின் கால்கள்
நடக்கமுடியாத கனதியோடு
புல்வெளியற்ற சாம்பல் மேடுகளுக்குள்
ஆழப் புதைகின்றன.

குதிரைகளால் பேசமுடியாதிருக்கிற
வலிமிகுந்த வார்த்தைகளுக்கு
யாராலும் களிம்பு தடவ முடியாதிருக்கிறது.

கண்களினோரங்களில் கண்ணீர் வழிந்திருக்கிற
அவற்றின் வயிறுகள்
தண்ணீருக்காக எல்லோர் முகங்களையும்
மேய்கின்றன.

தண்ணீர் வைக்க மறுக்கிறவர்களுக்கும்
தண்ணீர் வைக்க அச்சப்படுகிறவர்களுக்குமிடையே
வீரர்களை தொலைத்த குதிரைகள்
நுரைதள்ளிய வாயுடன் விழிகள் திறந்தபடி
மெல்ல மெல்ல மூச்சடங்குகின்றன.



---xxx----



தீபிகா
26.01.2012
9.55 a.m




Feb 20, 2012

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்




அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழுந்து
துடிதுடித்துக் கொண்டிருந்த
பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த
என் பதினாறு வயது மகனை
பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு
கூட்டிப் போயின.
பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த
பயங்கர முகங்கள்.


இன்னும் 
வீடு திரும்பவேயில்லை
எனது மகன்.


எப்படியும் திரும்பி வந்துவிடுவானென 
நினைக்கிற ஒவ்வொரு தடவையும்
உடனே தவறாமல் 

சொல்லிக் கொண்டேயிருக்கிறது
சுவரிலிருந்தபடி
அந்த வாலறுந்த பல்லி.




---xxx----




தீபிகா. 
10.59 P.m 
22-01-2012.