May 12, 2012

“அம்மா என்றால் சும்மா இல்லேடா”

“அம்மா என்றால் சும்மா இல்லேடா”
(உரைநடை)
                                 



அன்பு,
ஆதரவு,
அர்ப்பணிப்பு,
பொறுமை,
தியாகம்,
விட்டுக்கொடுப்பு,
கரிசனை,
காதல்,

ஆகிய அத்தனை பரிசுத்தமான உண்மை உணர்வுகளையும்
காலநேரம் பாராது அள்ளிக் கொடுக்கின்ற அட்சயசுரபி,
"அன்னை" என்கின்ற
ஒப்புவமையற்ற 

ஒரேயொரு உறவான தாய்மை மாத்திரமே.

நாம்,
மனித விழிகளுக்குள் புலப்படாத 

எம்மிலும் ஆற்றல் படைத்த
பிரபஞ்சத்தின் மாபெரும் மகாசக்தியை
கடவுள் என்று வணங்குகின்றோம்.
அந்த மகா சக்தி எமக்கெல்லாம் அளித்திருக்கிற
மாபெரும் சக்தி வடிவானவள் தாய்.

நாம் அகக்கண்ணால் மட்டுமே தரிசிக்கிற ஆண்டவன்
உயிர்கொடுத்து, உருவளித்து ஒவ்வொருவருக்கும் உறவென்றாக்கி
நம் பார்வைகளுக்கு
தரிசிக்க கொடுத்திருக்கிற உத்தமியே அம்மா.

கிட்ட இருக்கிற போது , நம் கைகளில் இருக்கிற போது,
அறிந்து கொள்ளத் தவறுகிற அல்லது 

அலட்சியமாய் இருந்துவிடுகிற
அம்மா என்கிற அழகு தேவதையினுடைய
அன்பின் ஆழத்தையும், ஈரத்தையும்

பறிகொடுத்து விட்டபிறகு தான்
மனம் பதைபதைக்க நினைத்து நினைத்து உருகுகிறோம். 

இருக்கும்போது கொடுக்கத் தவறிய ஈரமுள்ள அன்பை 
இழந்த பிற்பாடு ஈரக்கண்ணீராய் 
சொரிந்து தள்ளுகின்றோம்.

அன்னை என்கிற மகரஜோதி
அருகிருந்து ஆண்டாண்டு காலமாய் ஒளி தருகிற போது
அதன் வெளிச்சத்தின் வேர்களை மதிக்கத் தவறுகிற,
மரியாதை செய்யத் தவறுகிற நம் பேதை மனசுகள்
அணைந்த பிறகு அங்கலாய்க்கிறது.
பிரிவுக் காற்று அள்ளிக் கொண்டு 

பிரியாவிடை சென்ற பிறகு பேதலிக்கிறது.

எனவே,
உறவு விருட்சத்தின் நதிமூலமாகி வெளித்தெரியாமல்
தன் அத்தனை கிளைகளையும் தாங்கி நிற்கிற
அம்மா என்கிற ஆணிவேருக்கு 

ஈரமிகு அன்பை ஊற்றுவோம்.
இருக்கிற போது இதயத்துக்கு மலர் தூவுவோம்.
விழித்திருக்கிற போது விழுதுகள் 

ஊஞ்சலாட்டுகிற காட்சியை பரிசாய் கொடுப்போம்.

ஒரு தாயின் இதயம் பிள்ளைகளுக்காய் 
எத்தனை முறை துடித்திருக்கும்? 
எத்தனை நாள் பசிகிடந்திருக்கும் அவள் வயிறு?
எத்தனை மணி நேரம் காத்திருந்திருக்கும் அவள் விழிகள்?
எத்தனை தூரங்களை வலியோடு கடந்து சென்றிருக்கும் 

அவள் பாதங்கள்? 
எத்தனை விருப்பங்களை விட்டுக்கொடுத்திருக்கும் 
அவள் மனசு?
எத்தனை காயங்களை..
எத்தனை சொற்களை...
எத்தனை வலிகளை....
எத்தனை பிரச்சனைகளை...
எத்தனை எத்தனை சோதனைகளை
தினமும் எதிர்கொண்டிருக்கும் அவள் வாழ்க்கை.

ஒரு மனிதன் வளர்கிற போது 
புரிந்து கொள்ள முடியாதிருக்கிற 
அம்மா என்கிற தன்னலமற்ற தியாகத்தின் உச்சத்தை,
அவன் வளர்க்கிற போது, 

தன் குழந்தைகளை வளர்க்கிற போது
நிச்சயமாக உணர்ந்து கொள்வான்.

காதலியின் பார்வையைக் காட்டிலும் 
அம்மாவின் பார்வையில் இருக்கிற அன்பின் ஈரத்தை 
நாம் மறுக்க முடியாது.
ஒரு தாயின் புன்னகையில் எல்லா காயங்களும் 

ஆறிவிடுமெனின் அது பொய்யே இல்லை.

அம்மாவின் தாய் மடியில் படுத்து தூங்குகிற 
அலாதியான சுகம், உலகின் எந்த சொகுசு 
பஞ்சு மெத்தைகளிலும் கிடைத்துவிடாது என்பது 
அனுபவித்த மனசுகளுக்கு நன்றாகவே தெரியும்.

தன் தாயின் கையால் உருட்டித் தருகிற உணவின் ருசி 
பிள்ளைக்கு எந்த உணவகத்திலும் கிட்டாத 
திகட்டும் உணவில்லையா?
அந்த உருளையில் தாயின் உயிர் வாசத்தை 

நாங்கள் நுகரமுடியுமில்லையா?
என்றும் மறக்க முடியாத அந்த நினைவின் வாசத்தை 

நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு பிள்ளையும் 
ஏங்கி ஏங்கி கரைவது என்பது
என்றும் தொடரும் உறவுக்கதை இல்லையா?


"அம்மா” என்று அழைக்கிற போது ஏற்படுகிற ஆத்மசுகம் 
வேறு எந்த உறவின் பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காதது.
தாய் என்கிற மூலத்தை தழுவி தாய்மொழியும், 

தாய்நிலமும் தங்களை தரமுயர்த்தி நிற்கின்றன. 
உலகின் எந்த கோடியில் ஒரு மனிதன் வாழ்ந்தாலும் அவன் தன்
தாயையும்,
தாய்மொழியையும்,
தாய்நிலத்தையும்
மறக்க முடியாது. மறந்திருக்கவும் கூடாது.

தினம் குறித்து கொண்டாடப்பட வேண்டிய நாளல்ல அன்னையர் தினம். 
அது தினந்தினமும் கொண்டாடப்பட வேண்டிய 
தாய்த் திருநாள்.

ஏனைய எல்லா தினங்களையும் போல 
வெறும் காகித மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும்
இந்த நாளை அர்த்தமுள்ளதாக்கி விட முடியாது. 

அம்மா என்கிற பாசமிகு உயிரின் ஆழந்தொட 
எந்த மொழியின் வார்த்தைகளாலும் முடியாது.

பத்து மாதம் தாங்கிய கருவறைகளின் மனசுகளை 
காயமின்றி மயிலிறகு வார்த்தைகளால் வருடுவோம்.
உதிரப் பூக்களை தாங்கிய தியாகக் கரங்களை
இறுகப் பற்றிக் கொள்வோம்.

வயிற்றிலும், இடுப்பிலுமாய் 
எம் பாரம் சுமந்த உடல்களின் பழுத்தாங்கி நடந்து
இப்போ வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களை 

பிடித்து விடுவோம்.
தோல்விகளிலும், விரக்திகளிலும் 

துவண்டு வந்த பொழுதுகளில்
தம் ஒராயிரம் முத்தங்களால் ஆறுதல் கொடுத்து
எம்மை நிமி்ர்ந்தெழ வைத்த அம்மாக்களின் வற்றாத 

பாச முத்தங்களுக்கு பதில் முத்தங்கள் பரிமாறுவோம்.

நாம் தலை சாய்த்த முதல் தோள் 
நாம் முகம் புதைத்தழுத முதல் மடி
எம் கண்ணீர் துடைத்த முதல் கைவிரல்
எம்மை முத்தமிட்ட முதல் இதழ்
நாம் பார்த்துப் புன்னகைத்த முதல் முகம்
எல்லாம்.....எல்லாம்.....
அம்மா என்கிற ஒற்றை ஜீவனுக்கே சொந்தமானது.

முதன்முதலில் கிடைத்த அந்த முழுசுகங்களின் 
சுகந்தம்,
நிறைவு,
திருப்தி,
மகிழ்ச்சி
இவையெதுவும் ஒரு மனிதனுக்கு அதற்கு பிறகு 

அதே சுகங்களுடன் அன்னையை தவிர 
வேறு எவராலும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.

தெய்வத் திருமகளான தாய், தன் குழந்தைகளுக்கு 
அள்ளிக் கொடுக்கிற அமுதசுரபிகளல்லவா அவை. 

பலநேரங்களில் நாம் வெளிப்படுத்திய விவரமறியாத எங்கள் 
கோபங்களை,
புறக்கணிப்புக்களை,
சுடுசொற்களை,
அலட்சியங்களை,
அவமானப்படுத்தல்களை எல்லாம்
நெஞ்சு நிறைந்த பாசத்தோடும், 

இமயமளவு பொறுமையோடும் தாங்கிக் கொண்டு
திரும்பத் திரும்ப எங்களை எப்போதும்
தாங்கத் தயாராயிருக்கிற தாய்மையின் மாண்பை
வாழ்த்துவதற்கும், வணங்குவதற்கும்,
நினைந்து நினைந்து மனமுருகி 

எம் மனச்சாட்சிகளின் ஆழத்திடம் 
மன்னிப்பு கோருவதற்கும்
ஒற்றை நாள் போதுமானதாகவே இருக்காது.

தன்னலமற்ற அம்மாக்களின் தியாகப் பெருவாழ்வுக்கு 
என்றும் நன்றிக்கடன் செலுத்திக் கொண்டிருப்போம்.
இருக்கும்வரை அவர்களின் இதயங்களை 

மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வோம்.
புனிதமான தாய்மாரின் மனசுகள்

புண்படும்படியாக நடவாதிருப்போம்.

வைத்திருப்பவர்கள் 
தங்கள் தோள்களில் தாங்கிக் கொண்டும்
இழந்துவிட்டவர்கள்
தங்கள் இதயங்களில் தாங்கி்க் கொண்டும்
அவர்களை சுமந்து சென்று கொண்டேயிருப்போம்.

ஏனெனில் 
அம்மாக்களின் இருப்பென்பது 
எங்கள் உயிருக்கான வீரியம்.
எம் பார்வைகளுக்கான அகல்விளக்கு.
எம் பாதச்சுவடுகளுக்கான திசைகாட்டி. 






               (அம்மா...அம்மா..எந்தன் ஆருயிரே..)



...xxx....xxx.....




முற்றும்.



தீபிகா.
02-05-2012
11.16 P.m
(அன்னையர் தினத்துக்காக எழுதிய உரைநடை)







  

Apr 11, 2012


நானொரு உதைபந்தாட்ட வீரன்



நீண்ட நாட்களுக்கு பிறகு
விடுதலையாகியிருக்கிற எங்கள் மைதானத்தில்
மிச்சமிருக்கும் இளைஞர்கள்
பந்தை மாறி மாறி துரத்துகிறார்கள்.



அவர்களை நோக்கி எறிகிற
என் உற்சாகச் சொற்களை
பொறுக்கியெடுக்க முடியாமல்
இளைஞர்களின் கவனங்கள்
பந்தைச் சுற்றி ஓடித் திரிகின்றன.

எவரும் பறித்தெடுக்க முடியாதபடி
நான்
கால்களால் முத்தமிட்டுக்கொண்டே
பந்தை நீண்டதூரம் கூட்டிச்செல்வேனென்பதும் ,
மையத்திலிருந்து கொண்டே
மூன்று முறை இலக்கடித்திருக்கிறேனென்பதும் ,
எங்கள் கிராமத்துக்கே
நன்கு ஞாபகமிருக்கிறது.

இப்போதும்
வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற
வெற்றிக் கேடயங்களை
நான் வாங்கி உயர்திய போது ,
இந்த இளைஞர்களது
கைகளிலிருந்தும் தான்
உற்சாக ஒலியெழுந்து அடங்கியது.

நான் சேர்த்து வைத்திருக்கிற
பரிசளிப்பு புகைப்படங்களின் மூலையில்
பாதி வெட்டுண்ட
இவர்களின் முகங்களும் சிரித்தபடியிருக்கின்றன.

இருந்தாலும்
என்னை சேர்த்து விளையாட முடியாதென
இவர்கள் சொல்லி விட்டார்கள்.
இனிமேல்.

அதனாலென்ன... ...

தினமும், வந்தமர்ந்து
கைதட்டி விசிலடித்து
இவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டுதானிருக்கும்
என் விளையாட்டு மனசு .

என்னிடம் ஒரு சோடி
பொய்க்காலும்…
ஊன்று கோலும்…
இருக்கும் வரை.



---- xxx ----


தீபிகா.
25.02.2012
08.04 P.m

Mar 20, 2012


கண்களை மூடும் காட்சிகள்



தங்கள்
பிள்ளைகள் கொல்லப்படுகிற காட்சியை
பார்க்கிற தாய்மார்களின் கண்கள்
பெற்ற வயிறுகளை
கைகளால் அடித்தபடி வழிகின்றன.



சிதைக்கப்பட்டிருக்கிற குழந்தைகளின் 
காயங்களிலிருந்து,
இரத்தம் சிந்தச் சிந்த விரியும்
அவர்களின் கடைசி நேர ஓவியங்கள்
தாய்மார்களின் துக்கம் நிறைந்த
மூச்சுக் காற்றையும் அடைக்கின்றன.

பிள்ளைகளின் நிர்வாண மரணங்களை
தாய்மார்கள் பார்க்கவேண்டிய
கனத்த துயரத்தின் விதியை
காலமெம் தேசமெங்கும் எழுதியிருக்கிறது.

தாய்மாரின்
வறண்டு போன தொண்டைகளிலிருந்து
உருகிவிழும் வார்த்தைகளும்
கண்கள் கட்டப்பட்டிருக்கும்
நீதி தேவதையின் காதுகளுக்கு எட்டாமல்
நலிந்து போய் சாகின்றன.

கடவுள்கள் புன்னகைத்துக்கொண்டிருக்கிற 
கோயில்களின் வாசல்களில்
தாய்மார்கள் கண்ணீரோடு இருக்கிறார்கள்.
எல்லா பிரார்த்தனைகளும்
கைவிடப்பட்டு விட்ட மனிதர்களாய்.

இனிமேல்
தொட்டும் பார்க்க முடியாதபடி
குப்புறக் கிடக்கிற பிள்ளைகளின் சடலங்கள்
கைகள் கட்டப்பட்டபடி கிடந்து
தாய்மார்களின் கைகளை மாரடிக்கச் செய்கின்றன.

எந்தப் பிள்ளைகளைப் பற்றியும் 
எந்தத் தாய்மார்கள் பற்றியும்
கவலை இல்லாத வியாபாரிகள்
தங்கள் கள்ளச் சந்தைகளில்
பிள்ளைகளின்
நிர்வாண உடல்களை காட்டிக் காட்டி
வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிள்ளைகள் சுடப்படுவதற்கு முன்பு
இவர்கள் திருகிக் கொன்ற
நீதி தேவதையை கூட்டி வருவதாக
பொய் சொல்லிச் சொல்லி
வியாபாரிகள் சனங்களை
இப்போதும் ஏமாற்றுகிறார்கள்.

திரும்பிவர முடியாத பிள்ளைகளின் 
காயப்பட்ட தேகங்களை 
திரும்ப திரும்ப குவித்துக் காட்டி
பதறிக் கொண்டிருக்கிற தாய்மார்களின்
வலி நிறைந்த கண்களையும்
காட்சிகள்
விரைவில் மூடிவிடப் பார்க்கின்றன.



---xxx----




தீபிகா
13.03.2012
9.36 P.m