More than a Blog Aggregator

Oct 1, 2011

ஊர் பார்த்துவந்த வார்த்தைகள்


ஊர் பார்த்துவந்த வார்த்தைகள்



சேர்த்து சேர்த்து வைத்த
மகரந்தத் துளிகளை
அள்ளிக்கொண்டு போகின்றன
தெற்கிலிருந்து வரும் கரடிகள்.

புற்றுகளிலிருந்து வெளிச்செல்ல
அனுமதிக்கப்பட்ட எறும்புகள்
சிதைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
விழுந்த வதைகளை
பொறுக்கிச் சென்று
புதிய கூடு கட்டியிருக்கின்றன.

தம் ராணியை
தொலைத்த தேனீக்கள்
விழிகளில் பயம் வழிய
வேதனைகளை சுமந்தபடி
கொஞ்சம் கொஞ்சமாய்
வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

நந்தவனங்கள் காடாகியிருக்கும்
நரக நகரங்களில்
பச்சைப் பாம்புகள்
அங்குமிங்கும் முறுக்குடன் நெளிகின்றன.

பற்றைகள் வளர்ந்திருக்கும்
உயிர்விதை நிலங்களை
கிளறி எறிந்துவிட்டிருக்கிறார்கள்
வக்கிரம் தீர்க்கும்
ரத்தவாச மனிதர்கள்.

ஊன்றுகோல்களை அருகில் வைத்துக்கொண்டு
இருந்தபடியே வரவேற்கும்
இளைஞர்களும்
தாடிகளுக்குள் முகம் புதைத்திருக்கும்
தந்தைமார்களும்
இன்னும் எழுதப்படாத
நிறைய உண்மைக்கதைகளை
வலியோடு சொல்கிறார்கள்.

நொருங்கிப் போயிருக்கும்
கல்வீட்டு முற்றங்களிலமர்ந்து
மண்வீடு கட்டி
விளையாடிக்கொண்டிருக்கும்
போர்க்கால குழந்தைகளிடம்
அவர்களின் அப்பா பற்றி
விசாரிக்காமலேயே வந்து விட்டது
பதில்களை தாங்கமுடியா மனசு.

வேலிகளில்லா வீடுகளுக்கு
காவலிருக்கும் ஓணான்கள் பற்றி
எவரும்
பெருமிதப்படவேயில்லை.

உருமறைப்பு உடைகளும்
அவற்றோடு ஒட்டியிருக்கும்
குருவிச்சை இலைகளும்
எவ்வளவுதான்
வாய் அகல புன்னகைத்தாலும்
பூதங்களாகவே தெரிவதாக
கண்களில் திகில் பரவ
சொல்கிறார்கள்
குழந்தைகளும்.
அவர்களின் தாய்மார்களும்.

தமக்கு
விதிக்கப்பட்டு விட்ட
சபிக்கப்பட்ட நாட்களுக்கு நடுவே
தம் குழந்தைகளை
கூட்டிச் செல்வது பற்றியே
எல்லோரும்
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.


தீபிகா.


07-09-2011
9.48am.