More than a Blog Aggregator

Oct 15, 2014

இரண்டு ஆடுகள்

இரண்டு ஆடுகள்


எங்களிடம்
ஒரு நூல் நிலையம் இருந்தது.
அதை இவர்கள் எரித்தார்கள்.

எங்களிடம்
ஒரு தேவாலயம் இருந்தது.
அதை இவர்கள் தரை மட்டமாக்கினார்கள்.

எங்களிடம்
எங்கள் நிலம் இருந்தது.
அதை இவர்கள் ஆக்கிரமித்தார்கள்.

எங்களிடம்
ஒரு புகையிரதம் இருந்தது.
அதை இவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

எங்களிடம்
எங்கள் வளங்கள் இருந்தன.
அதை இவர்கள் அபகரித்தார்கள்.

எங்களிடம்
ஒரு பாடசாலை இருந்தது.
அதை இவர்கள் குண்டுவீசி அழித்தார்கள்.

எங்களிடம்
ஒரு மிருகக்காட்சிச் சாலை இருந்தது.
அதை இவர்கள் நிர்மூலமாக்கினார்கள்.

இப்போ
மீண்டும் எல்லாவற்றையும்
பெரும் விளம்பரங்களோடு
திரும்பக் கொண்டு வருகிறார்கள்.

எங்களிடம்
எங்கள் பிள்ளைகள் இருந்தன.
அவர்களை இவர்கள் இன்னும்
தரவே இல்லை.

எங்கள் பிள்ளைகளுக்கு பதிலாய்
இவர்கள் தருவதாக சொல்கிறார்கள்
இரண்டு ஆடுகள்.

---xxx----

தீபிகா
12.52 Pm.
13.10.2014

May 23, 2014

சும்மா இருந்த அம்மா

               

                 சும்மா இருந்த அம்மா

தொங்கிக் கொண்டிருக்கும்
குசினி ஒட்டடையில் ...

உப்புப் பொருமியிருக்கும்
சுடுதண்ணீர்க் கேத்தலில்...

கறுத்துக் களைத்திருக்கும்
ஊதாங்குழல் வாசலில் ...

ஈரம் கசிந்திருக்கும்
உப்பு மண்பானையில் ...

தலை கருகியிருக்கும்
விறகுக் கட்டை மிச்சத்தில் ...

தொங்கிக் கொண்டிருக்கும்
தோசைக் கல் கரையில் ...

எண்ணெய் தோய்ந்திருக்கும்
பொட்டலச் சீலையில் ...

வெளுத்து நெளிந்திருக்கும்
உலக்கைப் பூணில் ...

குழி விழுந்திருக்கும்
அம்மிக் கல்லில் ...

பெயர் எழுதி ஒட்டியிருக்கும்
சரக்குத் தூள்ப் போத்தலில் ...

நாரொன்று கழன்றிருக்கும்
இடியப்பத் தட்டில் ...

எங்கும் மிச்சமிருக்கிறது.

வீட்டில் சும்மா இருந்ததாக
எல்லோரும் சொல்லிக் கொண்ட
அம்மாவின் பெரும் உழைப்பு.

---xxx----

தீபிகா
08.32 Pm.
10.03.2014

Mar 9, 2014

மதிப்பிற்குரிய ஆண்களுக்கு



மதிப்பிற்குரிய ஆண்களுக்கு



நான் ஒரு பெண்ணென்பதால் ...

நீங்களெனக்கு

உதவி செய்யாதீர்கள்.
அன்பு காட்டாதீர்கள்.
விட்டுக் கொடுக்காதீர்கள்.
அனுதாபம் காட்டாதீர்கள்.
ஆதரவாய் இருக்காதீர்கள்.
கண்ணீர் துடைக்காதீர்கள்.
கடன் தராதீர்கள்.
பயணங்களில் துணைக்கு வராதீர்கள்.
பேரூந்துகளில் இடம் தராதீர்கள்.
துன்பங்களில் பங்கெடுக்காதீர்கள்.
விழுகிற போதும் கை கொடுக்காதீர்கள்.
எழுகிற போதும் கை தட்டாதீர்கள்.
முகப்புத்தகத்தில் நட்பாகாதீர்கள்.
என் எழுத்துக்களுக்கு விருப்பக் குறியிடாதீர்கள்.
தனிச்செய்திப் பெட்டிக்குள் புகழாதீர்கள்.

ஏனெனில்

நான் ஒரு பெண்ணென்பதால் ...

நீங்களென்னை சீரழித்தும் விடுவீர்கள்.

---xxx---

தீபிகா
07.11 Am.
08.03.2014




Mar 8, 2014

பிரிய முடியாப் பிரிய மண்


பிரிய முடியாப் பிரிய மண்



நதிக்கரைப் பாதைகளை துறந்துவிட்டு
கட்டடக் காடுகளுக்குள்
நான் எதைத் தேடிப் போகிறேன்?

எந்த நறுமண வாசங்களாலும்
கொண்டு வந்து தரமுடியா
எனது மண் வாசத்தை
நானெப்படி விட்டுச் செல்ல முடியும்?

ஒரு வேப்பமரத்தைக் காண முடியா
வலியின் பெருநெருப்பில்
மூச்சுமுட்டிச் சாகிற விதிக்காகத் தானா
விமானமேறப் போகிறது எனதுயிர்?

இயற்கை வரைந்த மென்பச்சை ஓவியங்களை
இங்கே வாட விட்டுவிட்டு
செயற்கைப் புல்வெளிகளில் அமர்ந்து
நானெந்தக் கவிதையை எழுதுவேன்?

இதுவரை
என்னைச் சுற்றிப் பறந்த
வண்ணத்துப் பூச்சிகளையும்
எனது காலைகளை
தனது காந்தர்வக் குரலால் நிரப்பிய
கருங்குயிலையும் தொலைத்து விட்டு
நானெந்த முகாரியைப் பாடுவேன்?

வெள்ளைத் தோல் மனிதர்களிடத்தில்
என் கிராமப் பாசத்தை
நானெப்படிக் கடன் கேட்பேன்?
ஆங்கிலக் குரல்களுக்குள்
என்னரும் தமிழைத் தேடித் தேடி
நானெத்தனை நாள் தவமிருப்பேன்?

வேப்பம்பூ வடகத்துக்கும்
பலாப்பழச் சுளைக்கும்
எத்தனை நாள் எச்சில் விழுங்குவேன்?
நிலவு விழும் இரவில்
தென்னங்கீற்றுக்கள் அசைய
முற்றத்து மணலில் எப்போது தூங்குவேன்?

அறுகம்புல் வரம்பில் அமர்ந்திருக்கும்
வெள்ளைப் பாற் கொக்குகளின் வரிசையை
எந்தப் பூங்காவில் தேடுவேன்?
அம்மாவின் மடியை
அப்பாவின் இருமலை
அக்காவின் காற்கொலுசு ஒலியை
அண்ணாவின் அதட்டலை
தம்பி தங்கையின் நேசத்தை
தனித்து விடப்பட்ட தேசத்தில்
எங்கே நான் தேடித் தேடி விம்முவேன்?

என்னால் முடியவேயில்லை.
எனது மண்ணை விட்டு
மனசைப் பெயர்த்துச் செல்வதற்கு.

---xxx----

தீபிகா
13.12.2013
2.08 Pm.