More than a Blog Aggregator

Feb 28, 2012

போர்க்களத்துக் குதிரைகள்



குண்டுபட்டு விழுந்த வீரர்களின்
போர்க்களக் குதிரைகள்
சுமப்பதற்கு யாருமற்று
அங்குமிங்கும் அமைதியாய் அலைகின்றன.


எல்லோருக்காகவும் ஓடித்திரிந்த
அவற்றின் கால்கள்
நடக்கமுடியாத கனதியோடு
புல்வெளியற்ற சாம்பல் மேடுகளுக்குள்
ஆழப் புதைகின்றன.

குதிரைகளால் பேசமுடியாதிருக்கிற
வலிமிகுந்த வார்த்தைகளுக்கு
யாராலும் களிம்பு தடவ முடியாதிருக்கிறது.

கண்களினோரங்களில் கண்ணீர் வழிந்திருக்கிற
அவற்றின் வயிறுகள்
தண்ணீருக்காக எல்லோர் முகங்களையும்
மேய்கின்றன.

தண்ணீர் வைக்க மறுக்கிறவர்களுக்கும்
தண்ணீர் வைக்க அச்சப்படுகிறவர்களுக்குமிடையே
வீரர்களை தொலைத்த குதிரைகள்
நுரைதள்ளிய வாயுடன் விழிகள் திறந்தபடி
மெல்ல மெல்ல மூச்சடங்குகின்றன.



---xxx----



தீபிகா
26.01.2012
9.55 a.m




Feb 20, 2012

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்




அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழுந்து
துடிதுடித்துக் கொண்டிருந்த
பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த
என் பதினாறு வயது மகனை
பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு
கூட்டிப் போயின.
பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த
பயங்கர முகங்கள்.


இன்னும் 
வீடு திரும்பவேயில்லை
எனது மகன்.


எப்படியும் திரும்பி வந்துவிடுவானென 
நினைக்கிற ஒவ்வொரு தடவையும்
உடனே தவறாமல் 

சொல்லிக் கொண்டேயிருக்கிறது
சுவரிலிருந்தபடி
அந்த வாலறுந்த பல்லி.




---xxx----




தீபிகா. 
10.59 P.m 
22-01-2012.














Feb 6, 2012

திரும்ப வரும் முகங்கள்



திரும்பவும் திரும்பவும்
விழிகளை காயப்படுத்திக்கொண்டு
நினைவுகளுக்குள் வந்து விழுகின்றன.
மனிதர்களின் முகங்கள்.


காலம் காட்சிப்படுத்தும்
அம் மனிதர்கள் பற்றிய
விசித்திர துயரோவியங்களை
நீங்கள் அவதானித்திருக்கிறீர்களா?

ஒரு பல் வைத்தியரின்
அழகற்றுத் துருத்திக்கொண்டிருக்கும்
முன் வெண் பற்களை...
இயற்கை நிரந்தர சவரம் செய்துவைத்திருக்கும்
ஒரு சிகையலங்கரிப்பாளனின்
ஒளி மிளிரும் தலையை...

கொப்பிகள் வாங்கும் சில்லறைகளுக்காக
புத்தகத் தாள்களில்
கச்சான் பை ஒட்டிவிற்கும் சிறுவனை...

இரண்டு இயற்கைகால் கொண்ட மனிதன்
ஒரு செயற்கைகால் கொண்டவனிடம்
பிச்சை கேட்கிற காட்சியை...

"நாய்கள் கவனம்" என்று
வெளியே எழுதி வைத்திருக்கிற
வீட்டிற்குள்ளே கேட்கும்
மனிதர்களின் கோபம் தெறிக்கும்
பெருங் குரைப்பை...

தானியங்கிப் பணப்பரிமாற்ற எந்திரத்துக்கு
காவலிருக்கும் இரவுக் காவலாளி
கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிற
மளிகைக் கடன் கொப்பியை...

மாணவர்களின் குறிப்பேட்டில்
தமிழாசிரியர் போட்டிருக்கிற
ஆங்கில கையொப்பத்தை...

"செருப்பு தைக்கணுமா" 
என்று கத்திக் கொண்டு வருகிற
முதியவரின் வெடிப்பு விழுந்த
வெற்றுக் கால் பாதங்களை...

வைரம் பதித்த நெக்லஸை
தன் கழுத்தில் பிடித்து
வாடிக்கையாளருக்கு அழகு காட்டும்
நகைக்கடை விற்பனைப் பெண்ணின்
கழுத்தில் தொங்குகிற
வெள்ளை முத்துமாலையை...

புற்றுநோய் வந்து
படுத்த படுக்கையாயிருக்கிற
ஒரு வைத்திய நிபுணரை...

குழந்தைக்கு ”றொக்ஸி” என்றும்
நாய்க்குட்டிக்கு ”றெக்ஸி” என்றும்
பெயர் வைக்கிற தமிழ் சனங்களை...


நீங்களும் 
காலக் கண்காட்சியில் இலவசமாய் வாங்கி
மனப் பையில் போட்டு வைத்திருக்கிறீர்களா?
எப்போதேனும் சில கணங்களில்.


-----xxx----


தீபிகா.
25-12-2011
9.54 P.m