More than a Blog Aggregator

Feb 21, 2011

 விமல் வீரவன்சவின் சின்னமகளுக்கு..




என் அப்பாவை  ஒளி(ழி)த்த குற்றத்துக்காக
அவர்களை நோக்கி வருகிற
தூக்குக்கயிற்றின் வளையங்களுக்குள்
நாக்குத் தொங்கச் சாகப்போகிற
தீர்ப்புக்களிடமிருந்து
தன் சகாக்களை காப்பாற்றிக்கொள்வதற்காக
தலைமாட்டில் பிஸ்கற் பைக்கற்றோடு
உன் அப்பா
நேற்று உண்ணாவிரதமிருந்தார்.


கூடவே...நீயுமுன்
அப்பாவுக்காக சாப்பிடாமல்
அடம்பிடித்துக் கிடந்தாயாம்.


தோழியே!
மனதை தேற்றிக்கொள்.
ஒன்றிரென்டு நாள் பட்டினி கிடந்தாவது
உயிரோடிருக்கிற உன் அப்பாவை
வீடு கொண்டுவந்து சேர்க்க
உன்னால் முடிந்திருக்கிறது.


இங்கே...காணாமல் போகடிக்கப்பட்ட
என் அப்பாவைதேடிக்கொண்டேயல்லவா
நான் தினமும் உணவுக்கு வழியற்று
பட்டினியிருக்கிறேன்.


நேற்று
நானும்..தம்பியுமாய் சேர்ந்து
கருகிக்கிடக்கும் எம் வீட்டின் சாம்பலுக்குள்
கடைசிவரை தேடியும் கிடைக்கவேயில்லை.
உன்வயதே இருக்கும் எங்கள் அப்பாவின்
ஒரேயொரு புகைப்படமாவது.


அம்மாவின் பொட்டில்லாத நெற்றியையும்
சிரிப்பில்லாத உதட்டையும்
பார்க்க பார்க்க அழுகை வருகிறது.


உன் அப்பாவுக்கு
தவழ்ந்துவந்து யூஸ் கொடுக்கிற
உனது ஜனாதிபதி
எங்களுக்கு குளிப்பதற்கே நீரளந்து தருகிற
ஒரே நாட்டுக்குள் தான்
நானும் நீயும் இருக்கிறோம் தோழி.


சித்தார்த்தனின் மாளிகைக்குள்ளிருந்து
உனது கண்களால்
நான் திருவோடு ஏந்துகிற காட்சியை
நீ கண்டுகொள்ள முடியாது தான்.
எனினும்அப்பா இல்லாத வீட்டின்
வலிகளிலொரு துளியையேனும்
நீ அனுபவித்திருப்பதால் கேட்கிறேன்.
எனது ஏக்கம் உனக்கு புரிகிறதா?


சாரத்தை ஊஞ்சலாக்கிக் கொண்டு
நான் ஒளித்திருக்கிற என் அப்பாவின் மடியும்..
குலுங்கிக் குலுங்கி சிரிக்க
வானம் தூக்கியெறிந்து பிடிக்கும்
அப்பாவின் கரங்களும்..
உனக்கு கிடைத்தது போல
எனக்கும்
ஒருநாள் திரும்பக் கிடைத்துவிடாதா?




பாடசாலைகளுக்கு
சிறுவர்களை கைப்பிடித்து வரும்
உரோமமுள்ள கரங்களில்... ...
திருவிழாக்களில்
குழந்தைகளை தூக்கிவைத்திருக்கும்
புடைத்த தோள்மூட்டுக்களில்... ...
முன்னால் சிறு மொட்டை விழுந்திருக்கும்
தகப்பன்மாரின் தலைகளில்... ....
என் அப்பா வைத்திருந்த
அதே கறுப்புநிற மோட்டார்சைக்கிளில்
வீதியில் போய்வருவோர் முகங்களில்... ...
கிடைத்துவிடுமென்ற எதிர்பார்ப்புடன்
கண்கள் களைத்துப் போகும்வரை
நானின்னும் தேடிக்கொண்டே தானிருக்கிறேன்.


இப்போ
என் முதலெழுத்தோடு மட்டுமே மிஞ்சியிருக்கிற
என் அப்பாவை.


*** முற்றும் ***

தீபிகா
18.07.2010
09.27 pm
நட்சத்திரங்களற்ற வானம்





மேகங்களிடம்
நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு
பொட்டில்லா காதலி முகமாய்
வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது. 


பக்கத்துப் பிறைச்சந்திரனும்
மேகங்களோடு கூட்டுச் சேர்ந்து
நட்சத்திரங்களை சுருட்டியெடுத்த போதும் கூட
இலைகளோடு போட்டியிட்டுக் கொண்டு
தன் இருக்கைகளை சரிபார்த்தபடியிருந்த

உதய சூரியன்
இப்போ வானம்பாடிகளைத் தூதனுப்ப கேட்கிறது.


இடியும் மின்னலும்
ஒரு கடற்கரை மீதான வானத்தோடு
தம்முரசல்களை முடித்துக் கொண்டபோது
பட்டம் விட்ட காற்சட்டைச் சிறுவர்கள்
கீழே கருகிக் கிடந்தார்கள்.

புறாக்களும் குருவிகளுமாக பறந்த

வானத்திலிருந்து வல்லூறுகள்
எதனையும் விட்டுவைக்கவில்லை.


வானங்களை உடைத்துக் கொண்டு
எங்கும் இரத்தமழை பெய்தபோது
தாவரங்கள் தண்ணீரின்றி மாண்டன.
தேவதைகள் காட்சிதரா வானத்தைப் பார்த்தபடி
எல்லோரும் கைகூப்பிச் செத்தனர்.


மனிதச் சுனாமிகள் மச்சம் விழுங்கையில்
காதுகளுக்குள் சங்கீதங்களை கொழுவிக்கொண்டு
கறுப்பு முக்காடுகளை போர்த்தியபடி
பச்சை மாமிசங்களின் தோலுரிகிற காட்சிகளை
பார்த்துக் கொண்டிருந்த
குள்ள மனிதர்கள்
மஞ்சள் கண்களுடையவர்கள்
சுருள் தலைமுடியுடையோர்
சப்பட்டை மூக்குக்காரர்
வெள்ளைத் தோலார்.


எல்லோரும்.... இப்போ…
ஓட்டைகளோடிருக்கும் வானத்தின் துளைகளில்

பூக்கன்றுகளை நட்டுத் தருவதாகவும்..
அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு
பொம்மை தருவதாகவும்..
கணவனில்லாத சகோதரிகளுக்கு
வானவில் நிறத்தில் சேலை தருவதாகவும்..
கத்திக்கொண்டு ஓடி வருகிறார்கள்.

நட்சத்திரங்களி்ன் மீட்சி பற்றி
கேட்கிற வாய்களுக்குள்
வந்தவர்கள்
இனிப்புக்களை அள்ளி திணிக்கிறார்கள்.
வாய்த்தவர்களோ துப்பாக்கிகளை திணிக்கிறார்கள்.

இப்போ
அசிங்கமாய் தெரிகிற நட்சத்திரங்களற்ற சூரியன்
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு
சரிந்துகிடந்து எழுதிக்கொண்டேயிருக்கிறது

கடிதங்களும்-கவிதைகளும்.

வாழைக்குருத்துக்குள் விழுந்த விடிவெள்ளி
மீண்டும் வைரமாகுமென
பாட்டி சொல்லிக்கொண்டிருக்கிறாள்
வந்தவர்களின் காதுகளுக்குமாக சேர்த்து.

இருட்டாகவே இருக்கிறது பகலும்.
நட்சத்திரங்களற்ற வானத்தில்.

 *** முற்றும் ***

27.07.2010

12.13 am


     கறுப்பு நிலாக்கள்.






நானொரு கறைபடாத நிலவு.
இன்று
அமாவாசையாகி நிற்கின்றேன்.
என் ஒற்றைச் சூரியனை
போர்ப் பாம்புகள் அழகான வானத்திலிருந்து
இழுத்துப் போய்
வெளிச்சமில்லாத சிறைப்புற்றுகளுக்குள் போட்டு
சிதை மூட்டியிருக்கிறதென் மனசில்.

கையில் விடிவெள்ளிக் குஞ்சுகளோடு
வழிதெரியாமல் நான் நடந்துகொண்டிருக்கும்
இந்த சமூகத்துக்குள் தான்
இன்னமும்
சரியாய் திறக்கப்படாமலிருக்கும்
எனது பூட்டுக்களின் சாவிகள்
பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

பொட்டில்லா நெற்றி
வண்ணமில்லா சேலை
நகையில்லா கழுத்து
சிரிப்பில்லா முகம் என
சமூகம் செதுக்கிவைத்திருக்கும்
அத்தனை ஒப்பனைகளையும்
இப்போ
நானுமணிந்து கொண்டுதான்
வீதிகளில் இறங்குகின்றேன்.

இல்லையேல் ... ...

என்னையொரு விபச்சாரியாக்கிக் கூட
அழகு பார்க்க துணியும்
பல குருட்டுக் கண்ணாடிகளும்
வைக்கப்பட்டிருக்கும் வழியே தான்
நான் போய்க் கொண்டிருக்கிறேன்.

யுத்தம்
என் தாயின் தலையை விழுங்கிக்கொண்டு
முண்டத்தை துப்பியது.
என் தங்கையின்
காற்சிறகை உடைத்துக்கொண்டு
ஊன்றுகோலை பரிசளித்தது.
அக்காவை அவசர அவசரமாய்
பற்றைகளுக்குள் இழுத்துக்கொண்டு போயிற்று.
என்னை
பிச்சைக்காரியாக்கி அலைக்கிறது.

என் அழிவின்
பார்வையாளர்களாக இருந்தவர்கள்
பங்காளிகளாக இருந்தவர்கள்
நடுவர்களாக இருந்தவர்கள்
எல்லோரும் இப்போ கொட்டிக் கொடுக்கிற
கோடிகளிலிருந்து
ஒரு கொட்டிலை போடுவதற்கான
கொஞ்சப் பிச்சையையேனும்
இன்னும் தராமலிருக்கிற
"போர்க்குற்ற நாடு” தரவேண்டுமென
எதிர்பார்க்க என்ன இருக்கிறது?

எனது
விழிகளுக்குள் தேங்கிக் கிடக்கும்
சூரியனின் விம்பத்தை
மடிக்குள் உதடுவெடித்துக் கிடக்கும்
விடிவெள்ளிகளின் விழிகளில்
பார்த்துக்கொண்டிருக்கிற
நிம்மதி வாழ்வையேனும்
பறிக்காமலிருக்கிற
பாக்கியம் மட்டுமேனும் தந்தால்
போதும்.




தீபிகா.
01-07-2010