Mar 20, 2012


கண்களை மூடும் காட்சிகள்தங்கள்
பிள்ளைகள் கொல்லப்படுகிற காட்சியை
பார்க்கிற தாய்மார்களின் கண்கள்
பெற்ற வயிறுகளை
கைகளால் அடித்தபடி வழிகின்றன.சிதைக்கப்பட்டிருக்கிற குழந்தைகளின் 
காயங்களிலிருந்து,
இரத்தம் சிந்தச் சிந்த விரியும்
அவர்களின் கடைசி நேர ஓவியங்கள்
தாய்மார்களின் துக்கம் நிறைந்த
மூச்சுக் காற்றையும் அடைக்கின்றன.

பிள்ளைகளின் நிர்வாண மரணங்களை
தாய்மார்கள் பார்க்கவேண்டிய
கனத்த துயரத்தின் விதியை
காலமெம் தேசமெங்கும் எழுதியிருக்கிறது.

தாய்மாரின்
வறண்டு போன தொண்டைகளிலிருந்து
உருகிவிழும் வார்த்தைகளும்
கண்கள் கட்டப்பட்டிருக்கும்
நீதி தேவதையின் காதுகளுக்கு எட்டாமல்
நலிந்து போய் சாகின்றன.

கடவுள்கள் புன்னகைத்துக்கொண்டிருக்கிற 
கோயில்களின் வாசல்களில்
தாய்மார்கள் கண்ணீரோடு இருக்கிறார்கள்.
எல்லா பிரார்த்தனைகளும்
கைவிடப்பட்டு விட்ட மனிதர்களாய்.

இனிமேல்
தொட்டும் பார்க்க முடியாதபடி
குப்புறக் கிடக்கிற பிள்ளைகளின் சடலங்கள்
கைகள் கட்டப்பட்டபடி கிடந்து
தாய்மார்களின் கைகளை மாரடிக்கச் செய்கின்றன.

எந்தப் பிள்ளைகளைப் பற்றியும் 
எந்தத் தாய்மார்கள் பற்றியும்
கவலை இல்லாத வியாபாரிகள்
தங்கள் கள்ளச் சந்தைகளில்
பிள்ளைகளின்
நிர்வாண உடல்களை காட்டிக் காட்டி
வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிள்ளைகள் சுடப்படுவதற்கு முன்பு
இவர்கள் திருகிக் கொன்ற
நீதி தேவதையை கூட்டி வருவதாக
பொய் சொல்லிச் சொல்லி
வியாபாரிகள் சனங்களை
இப்போதும் ஏமாற்றுகிறார்கள்.

திரும்பிவர முடியாத பிள்ளைகளின் 
காயப்பட்ட தேகங்களை 
திரும்ப திரும்ப குவித்துக் காட்டி
பதறிக் கொண்டிருக்கிற தாய்மார்களின்
வலி நிறைந்த கண்களையும்
காட்சிகள்
விரைவில் மூடிவிடப் பார்க்கின்றன.---xxx----
தீபிகா
13.03.2012
9.36 P.m

Mar 12, 2012

  உண்மை அறியும் பொய்கள்சமாதானம் தருவிக்கப்பட்டதாய்
சொல்லப்படுகிற எனது நிலத்தில்
வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற
விளம்பர மரங்களின் நிழலில்
நாய்களுடன் சேர்ந்து
வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும்
படுத்துக் கிடக்கின்றன.


திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு 
திரிகிற சனங்களின் முகங்களில்
படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள்
மிச்சமிருக்கும் வாழ்க்கையை
எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன.


சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும் 
மிருகக்காட்சிச் சாலை விலங்குகளை
பார்க்கும் ஆவல் நிறைந்த
அதே கண்கள்
குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கி
கும்மாளமிட்டபடி ஊரெங்கும்
மிடுக்குடன் அலைந்து திரும்புகின்றன.

மொட்டையடிக்கப்பட்டிருக்கும் நந்தவனங்களில்
இறக்கைகள் பிடுங்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சிகள்
இயலாமைகளோடு மெல்ல மெல்ல
ஊர்ந்து திரிகின்றன.


இனிமேல் தேன் சேகரிக்க 
அனுமதிக்கப்படாத அவைகள்
வயிறு நிறைப்பதற்காக
கைவிடப்பட்ட வெளிகளில்
அங்கும் இங்கும் அலைகின்றன.

நட்சத்திரங்களற்ற வானத்தில்
குழந்தைகள் தேடிக்கொண்டிருக்கும்
அவர்களின் தந்தைமார் பற்றி
எந்தப் பதிலையும் கொடுக்காதவர்கள்
நீச்சல் தடாகங்களையும் , பூங்காக்களையும்
அவர்களுக்கு பரிசளிக்கிற காட்சியை
படமெடுத்துக் கொண்டு போகிறார்கள்.

பகலில் சமாதானம் விற்கப்படும்
எங்கள் நகரத் தெருக்களில்
இரவில் ,
நாய்கள் அமளியாய் குரைக்கையில்
சாளரங்களை சாத்திக்கொண்டு
எல்லா இதயங்களும்
எப்போதும் போலவே படபடக்கின்றன.

துப்பாக்கிகள் கோடு கிழித்திருக்கிற
வெளித்தெரியாத வட்டங்களுக்குள்
குடியிருக்கிற எங்கள் சனங்கள்
இப்போ
தாம் எந்தப் பயங்களுமற்று
மகிழ்வுடன் குடி வாழ்ந்து கொண்டிருப்பதாய்
வெளியே சொல்ல கேள்விப்படுகிறார்கள்.


--- xxx ---தீபிகா
23.02.2012
11.13 A.m