More than a Blog Aggregator

Jan 25, 2012

நெருப்பெடுத்துக் கொடுத்த கைகள்




குடிசைகளை கொழுத்துவதற்கு
நெருப்பெடுத்துக் கொடுத்த கைகள்
சாம்பல்களை தட்டிவிட்டு
கட்டடங்களுக்கான அடிக்கல்
நாட்ட வருகின்றன.



நாடகமாட வரிகிற நரிகள்
கொலைவெறிப்பாட்டுக்கு நடனமாடி
எம்மை மகிழ்விக்கலாமென சொல்லிக்கொண்டு,
உங்களையும் கூட்டி வந்துவிடக்கூடும்.
தயவு செய்து யாருமெம் நிலத்துக்கு
அப்படி வந்து
மீளமீள மொழியையும் காயப்படுத்தாதீர்கள்.
முடிந்தால்...
எம் மண்ணிலாடிய கொலைவெறிஞர்களுக்கு
ஒரு தீர்ப்புக் கொண்டு வாருங்கள்.

அழித்தலின் போது
காத்தல் பற்றி சிந்திக்காதிருந்த
எல்லா சிந்தனையாளர்களும்
இப்போ
அனுதாபக் கைக்குட்டைகளை மடித்துக்கொண்டு
அருள வருகிறார்கள்.
நாங்கள் எதிர்பார்த்திருக்காத
அவர்கள் தரும்
கைக்குட்டையின் பரப்பளவை விட
எம் கண்ணீரின் கனவளவு
அதிகமதிகம்.

அடிக்கடி ஓடிவந்து
கைகுலுக்கி...கட்டிப்பிடித்து...
முடிந்தால், அதிகபட்சம்
அரச அம்புகள் துளைத்த
சுவர்களின் ஒட்டைகளை
பூசிமெழுகி, புதுவண்ணமடித்து
புதிய கட்டடத்தை திறந்துவைத்ததாக
புகைப்படம் எடுத்துப் போகிற
விளம்பரப்பட நடிகர்களை விடுங்கள்.

உலகத்துக்கு தெரியாவிடினும்
எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அவர்களால்
எங்களுக்கு எதுவுமே ஆகப்போவதில்லையென்று.

கொத்துக் குண்டுகளை போடச் சொன்னவர்கள்
கொண்டுவந்து தருகிற பூங்கொத்துக்களில் கூட
முட்கள் இருக்கலாமென்ற பயத்தில்
வாங்கத் தயங்குகின்றன நம் விரல்கள்.
எங்களை கிள்ளுகிறவர்கள் தான்
நம் தொட்டிலையும் ஆட்டுகிறார்கள் என்பது
நம் குழந்தைகளுக்கும் கூட புரிகிறது.

நமது பறவைகள்
சிறகுகளோடிருந்த போது
தூங்கிக்கிடந்த விஞ்ஞானியொருத்தர்
இப்போ
மயிர்களும் பிடுங்கப்பட்ட பிறகு
வந்து தூவுகிறார்.
கனவுகள் காண்பது பற்றிய
பிரசங்கச் சொற்களை.

துடிக்கத் துடிக்க எம் மரக்கிளைகளில்
துளைகளை போட்டுவிட்டு
இனிமேல்
எல்லாம் மறந்து வாருங்கள்.
புல்லாங்குழல் இசைக்கச் சொல்லித்தருவதாக
சொல்கிறார்கள்.
எப்படி ஏற்றுக்கொள்வது?

நாம் வளர்த்த விருட்சங்களை
எரிகுண்டுகள் விழுங்கி பசியாறிய போது
தண்ணீரடித்து அணைக்க வராதவர்கள்
இப்போ
பட்டமரங்களில் கட்டுமரங்கள்
கட்டித் தருவதாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

எல்லாமுணர்ந்து
ஏதுமற்றிருக்கிறது எம் எரிமனம்.

நான்கு திசைகளிலும்
சிங்கங்களை காவலிருத்திவிட்டு
அதற்கு கீழிருந்து ஆட்சிசெய்பவர்களுக்கு
நாமெப்போதும்
நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

ஏனெனில்...அவர்கள்...
சிங்களம் சிவப்பாக்கிய செம்மண்ணில்
நாம் துடிதுடித்துக் கொண்டிருந்த போது
பார்த்துக்கொண்டிருந்தாலும்
அதே காலத்தில் எங்களின் மொழியை
செம்மொழியாக்கி தந்தவர்களல்லவா.

---xxx----


தீபிகா.
3.15 a.m

21-01-2012.






Jan 21, 2012

சத்தங்களுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும்
மகன்




வெளிச்சங்கள் அணைக்கப்பட்ட வீடுகளுக்குள்
பயம் விழித்துக்கொண்டிருந்த ஓரிரவில்
வெள்ளை எருமைகளில் இருட்டில் வந்திறங்கிய
சப்பாத்துக்கள் அணிந்த
இரத்த தாகம் மிக்க மிருகங்கள்
துப்பாக்கிகளை நெற்றியில் பிடித்தபடி
எனது மகனையும்
ஒரு நாள் இழுத்துக்கொண்டு போயின.


நாய்களின் கதறல்களையும்...
ஆட்காட்டிக் குருவிகளின் அலறல்களையும்...
எருமைகள் கிழித்துக்கொண்டு போய்மறைந்த
கொஞ்ச நிமிடங்களில்
எதிரொலித்தபடி துரத்திக்கொண்டு வந்து
மனசில் குத்தி நின்றன.
தூரத்தே கேட்ட இரண்டு துப்பாக்கிச் சத்தங்கள்.

தவறுதலாக அழுத்தப்பட்ட விசைவில்லாகவோ
தங்களுக்குள் சுடுபட்ட மிருகங்களுடையதாகவோ
அல்லது
இருபது நாட்களுக்கு முன் காணாமல் போன
பள்ளிச் சீருடை மாணவன் மீது
கைகூப்பிய இறுதிக் கணங்களில்
நெற்றிப்பொட்டில் துளைக்கப்பட்டதாகவோ
இல்லை
கசக்கியெறியப்பட்ட ஒரு இளம்பெண்ணின்
மிச்சமிருக்கிற உயிரடக்கப் பிரயோகிக்கப்பட்டதாகவோ

இல்லாது போனால்...
மகனின் மணக்கோலம் பற்றிய
எனது கற்பனைகள் மீது
விழுந்த நெருப்பின் துளியாகவோ

எதுவாகவும் இருக்கக்கூடும்.
அந்த நடுச்சாமத்தின் அகாலஒலி.

பொலிஸார் தடியடி நடத்திக் கலைக்கிற
காணாமற் போனோர் ஊர்வலங்களுக்குள்
நான் தூக்கிப் பிடித்திருக்கிற
எனது மகனின் முகமும்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கக் கூடும்.



அறியப்படாத
ஆயிரம் துப்பாக்கிச் சத்தங்களுக்கான
காரணங்களுக்குள்.

----xxx----


தீபிகா.
03-12-2011
06.43 A.m

* குறிப்பு - இலங்கையில், அந்நாட்டின் சிங்கள இராணுவத்தினராலும், அரச புலனாய்வுப்படைகளாலும், மற்றும் ஆயுதக்குழுக்களாலும் நடுஇரவுகளில் வெள்ளை வாகனங்களில் வந்து கடத்திச் செல்லப்பட்டு பின் காணாமல் போனவர்களின் தொகை ஆயிரக்கணக்கானவை. இதுவரை அவர்கள் பற்றிய எந்த தகவலையும் சிங்கள அரசுகள் வெளிப்படுத்தவில்லை.

* அனைத்துலக காணாமற்போனோர் தினம் - ஆவணி 30.