தீபிகா கவிதைகள்
கனவுகளுக்காய் வழியும் கண்ணீர்த்துளிகள்.
Sep 7, 2011
"பூதங்களும் எனது குழந்தைகளும்”
என் குழந்தைகள்
என்னை வெருட்டுகின்றன.
பூதம்வரும் பூச்சாண்டி வருமென
சொல்லிச் சோறுண்ண வைக்கும்
எனது குழந்தைகள்
இப்போ என்னை பயப்படுத்துகின்றன.
”பூதத்திடம்” பிடித்துக் கொடுத்துவிடுவதாய்.
எமக்கு காவலிருந்த வீரர்களை
களவு கொடுத்துவிட்ட பிறகு
கரி பூசிய கள்வர்கள்
மீண்டும் மீண்டும் களவுக்கு வருகிறார்கள்.
வெவ்வேறு உடையணிந்து கொண்டு.
மார்புகளுக்குள்
இரத்தம் குடிக்க அலையும்
காம நுளம்புகளால்
பிள்ளைகளுக்குப் பாலூட்ட முடியாமல்
படபடக்கிறது மனசு.
புள்ளடிப் போட்டியில் தோற்றுவிட்ட
வெள்ளடியன் சேவல்கள்
எம் வேலி புகுந்து
பேடுகளின் செட்டைகளை
நகங்களால் விறாண்டத் துடிக்கின்றன.
வீரிட்டு அலறுகையிலும் ...
விரட்டிச் செல்கையிலும் ...
களி பூசிய பழிமுகங்கள்
பச்சைப் பாம்புகளின் புற்றுகளுக்குள்
ஓடி மறைகின்றன.
தெய்வங்கள் கண்மூடியிருக்கும்
எம் நிலங்களில்
இப்போ காவலுக்கிருப்போர்
கள்வர்களை ஒளித்துவைத்துவிட்டு வந்து
பிடித்துக் கொடுத்தவர்களை
வெளுத்துப் போடுகிறார்கள்.
விளக்குகளை அணைத்துப்போட்டு
விழித்திருக்கும் நம் கண்களில்
பூதங்களின் பயங்கரக் கனவுகள்
மேகங்களாய் மிதந்து செல்கின்றன.
நாம்
நிம்மதியற்ற நினைவுகளோடு
அச்சம் தெளித்த சால்வைகளை
கட்டிக்கொண்ட பக்தர்களாய்
வாழவேண்டுமென விரும்பும்
நரகாசுரர்கள்
சூரசங்காரங்கள் நின்றுவிட்டதால்
திமிரோடு எங்கும் அலைகிறார்கள்.
முகங்களை மாற்றிக் கொண்டு.
பூதங்கள் அழிக்கப்பட்ட மனசுகளோடு
நிலவு விழும் முற்றத்தில்
நானும்... என் குழந்தைகளும்
மீண்டும்
படுத்துத் தூங்குவதற்காய்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
முற்றும்
தீபிகா
01.09.2011.
7.25 pm
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment