More than a Blog Aggregator

Dec 1, 2011

"விதைமண்ணிலிருந்து பேசும் ஆன்மாக்கள்”


நீங்கள்
தனித்தனியே விதைத்து வைத்த
எம் வித்துடல்களை கிளறியெறிந்து
மீண்டுமெம் ஆன்மாக்களை
மண்கும்பியாக்கி ஒன்று சேர்த்துவைத்திருக்கிறார்கள்
நம்மை வெறுப்பவர்கள்.

எமது மூச்சுக்களில் நிறைந்திருக்கும்
நமது கனவுகள்
மண்களினடியால் ஆழமாய் கீழிறங்குகின்றன.

நீங்கள்
எமக்காய் அன்று கொழுத்திவைத்த
சந்தனப்புகை வாசங்களும்
தூவிவி்ட்ட பூக்களின் நறுமணங்களும்
இன்னும்
நிறைந்திருக்கின்றன நம் மண்ணில்.

எம்மையும்
எமது விருப்பங்களையும் சேர்த்து
நெஞ்சில் சுமக்கும் சொந்தங்களே!
கட்டியெழுப்புங்கள்.
எமது கல்லறைகளை அல்ல.
நமது கனவுகளை.
விளக்கேற்றுங்கள்.
எமது விதைகுழிகளில் அல்ல.
எமது பெயரால் உமது மனதுகளில்.
ஆண்டுக்கொரு மரம் நடுங்கள்
உங்கள் வீட்டின் ஏதொவொரு ஓரத்தில்.
அதிலசையும் ஈரக்காற்றோடு
நாமும் உயிர்தொடுவோம்.

கார்த்திகை மாதத் திருநாளில்
எமை நினைத்துருகி
கண்மழை பொழியுமெம்
மண்மடி உறவுகளே!
எங்கள் யாவருக்குமாய்
நாமெம் இளமைகளை தொலைத்தோம்.
உறவு துறந்த பிரிவு சுமந்தோம்.
வலி தாங்கித் தாங்கி வாழ்ந்தோம்.
தேகமதில் வீரவடுப் பட்டோம்.
பின்னொரு நாளில்
நிறைவேறாத இலட்சியங்களோடு
எதிர்பாராத தருணங்களில்
ஒன்றன் பின் ஒன்றாய்
விதைகளாகிப் புதைந்தோம்.

எம் பிரிவின்
வலி சொல்லிச் சொல்லியழும்
ஈரமிகு நெஞ்சுகளே!
எமை தெரியாமலேயே
எமக்காய் கைகூப்பித் தொழும்
வீரமிகு பிஞ்சுகளே!
வாழுங்கள்.
எங்களுக்காய் வாழுங்கள்.
எமது கனவுகளுக்காய் போரிடுங்கள்.
நாம் கேட்கும் நீதிச் சுதந்திரம் பற்றி
தொடர்ந்து சொல்லுங்கள்.
எமக்கு இளைக்கப்பட்ட அநீதிகளை
மறுக்கப்படும் உரிமைகளை
சத்தமாக உரத்துக் கூறுங்கள்.

எமை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு
எங்களில் ஒருவராய்
நீங்கள் இருக்கிறீர்கள் எனும்
நம்பிக்கை கொடுங்கள்.
காலச்சறுக்கலில் சிறைப்பட்டுப் போன
எம் தோழர்களை
அங்கிருந்து வெளியே மீட்டெடுங்கள்.
மீண்டுவந்த காயப்பட்ட மனசுகளுக்கு
கருணை காட்டுங்கள்.
கை தூக்கி உயர்த்தி விடுங்கள்.

உறுப்பிழந்த உறவுகளுக்கு
ஊன்றுகோல்களாகி உதவுங்கள்.
இருள்சுமக்கும் நிலவுகளுக்கு
வாழ வழி காட்டுங்கள்.
யாரும் கேட்காமலேயே
ஒளிதரும் மின்மினியாய்
தேடிப்போய் வெளிச்சம் கொடுங்கள்.
ஆதரவற்றுப் போன தனிமரங்களுக்கு
நிழல் கொடுத்து அரவணையுங்கள்.

ஒற்றுமையாய் இருங்கள்.
எங்களின் பெயரால் ஒற்றுமையாயிருங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாய்...
உங்கள் குழந்தைகளுக்கு
எம் தேசவரலாறு சொல்லிக்கொடுங்கள்.
எங்கெங்கு வாழ்ந்தாலும்
எம் தமிழ்மொழியை
கற்பித்துக் கொடுங்கள்.
நம்
தமிழை ...
தாய் நிலத்தை ...
பண்பாட்டை ...
எப்போதும் நேசிக்க கற்றுக் கொடுங்கள்.


நாமென்றும்
உங்களோடே இருப்போம்.
எங்கள் எல்லா சந்ததிகளோடும்.


------ xx -------

தீபிகா.
25.11.2011.
12.05am



2 comments:

nilamukilan said...

கனக்கவைக்கும் கவிதை அருமை.

தீபிகா(Theepika) said...

நன்றி. நிலாமுகிலன்

Post a Comment