More than a Blog Aggregator

Feb 6, 2012

திரும்ப வரும் முகங்கள்



திரும்பவும் திரும்பவும்
விழிகளை காயப்படுத்திக்கொண்டு
நினைவுகளுக்குள் வந்து விழுகின்றன.
மனிதர்களின் முகங்கள்.


காலம் காட்சிப்படுத்தும்
அம் மனிதர்கள் பற்றிய
விசித்திர துயரோவியங்களை
நீங்கள் அவதானித்திருக்கிறீர்களா?

ஒரு பல் வைத்தியரின்
அழகற்றுத் துருத்திக்கொண்டிருக்கும்
முன் வெண் பற்களை...
இயற்கை நிரந்தர சவரம் செய்துவைத்திருக்கும்
ஒரு சிகையலங்கரிப்பாளனின்
ஒளி மிளிரும் தலையை...

கொப்பிகள் வாங்கும் சில்லறைகளுக்காக
புத்தகத் தாள்களில்
கச்சான் பை ஒட்டிவிற்கும் சிறுவனை...

இரண்டு இயற்கைகால் கொண்ட மனிதன்
ஒரு செயற்கைகால் கொண்டவனிடம்
பிச்சை கேட்கிற காட்சியை...

"நாய்கள் கவனம்" என்று
வெளியே எழுதி வைத்திருக்கிற
வீட்டிற்குள்ளே கேட்கும்
மனிதர்களின் கோபம் தெறிக்கும்
பெருங் குரைப்பை...

தானியங்கிப் பணப்பரிமாற்ற எந்திரத்துக்கு
காவலிருக்கும் இரவுக் காவலாளி
கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிற
மளிகைக் கடன் கொப்பியை...

மாணவர்களின் குறிப்பேட்டில்
தமிழாசிரியர் போட்டிருக்கிற
ஆங்கில கையொப்பத்தை...

"செருப்பு தைக்கணுமா" 
என்று கத்திக் கொண்டு வருகிற
முதியவரின் வெடிப்பு விழுந்த
வெற்றுக் கால் பாதங்களை...

வைரம் பதித்த நெக்லஸை
தன் கழுத்தில் பிடித்து
வாடிக்கையாளருக்கு அழகு காட்டும்
நகைக்கடை விற்பனைப் பெண்ணின்
கழுத்தில் தொங்குகிற
வெள்ளை முத்துமாலையை...

புற்றுநோய் வந்து
படுத்த படுக்கையாயிருக்கிற
ஒரு வைத்திய நிபுணரை...

குழந்தைக்கு ”றொக்ஸி” என்றும்
நாய்க்குட்டிக்கு ”றெக்ஸி” என்றும்
பெயர் வைக்கிற தமிழ் சனங்களை...


நீங்களும் 
காலக் கண்காட்சியில் இலவசமாய் வாங்கி
மனப் பையில் போட்டு வைத்திருக்கிறீர்களா?
எப்போதேனும் சில கணங்களில்.


-----xxx----


தீபிகா.
25-12-2011
9.54 P.m








8 comments:

மாலதி said...

உண்மையில் மிகவும் சிறப்பான ஆக்கம் உளமார பாராட்டுகிறேன் எதிருமறை எண்ணம் இருந்தாலும் இது உண்மைதானே இதுதானே நடக்கிறது சிறப்பு பாராட்டுகள் .மாலதி thrumudh @gmail .com

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

தங்கள் வலைத்தளம் அருமை..தீபிகா ...பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

யுவராணி தமிழரசன் said...

அருமையான பதிவுகள்! மிகவும் எதார்த்தம்!

மகேந்திரன் said...

முரண்பாட்டு மூட்டைகளை
அழகாய் தொகுத்திருக்கிறீர்கள் சகோதரி..
கவிதை மனதில் பதிந்தது..
வாழ்த்துக்கள்.

திவ்யா @ தேன்மொழி said...

அழகான வரிகள்.. நிரம்பிக் கிடக்கின்றது மனப்பை..! வந்தார்க்கு செயற்கை சாயமிட்டுவிட்டு, தன் முகத்திற்கு கடலைமாவு போட்டு முகம் கழுவும் அழகுக்கலை நிபுணர்கள், மனதை லேசாக்கிவிட்டு எண்ணமெங்கும் அவனது நினைவுகளை சுமத்திப் போகும் காதல், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தோழி..!:)

ஹேமா said...

அடி கொடுக்காத குறைதான் தீபிகா.அத்தனையும் ஆதங்க வார்த்தைகள்.
திருந்துவார்களா...திருத்தமுடியுமா.முகங்களைக் கிழித்துப்போடும் கவிதை.வாழ்த்துகள் !

நம்பிக்கைபாண்டியன் said...

நிஜங்களின் பிரதிபலிப்பு கவிதைகளில், நன்றாக இருக்கிறது!

ஆதங்கம்
///இரண்டு இயற்கைகால் கொண்ட மனிதன்
ஒரு செயற்கைகால் கொண்டவனிடம்
பிச்சை கேட்கிற காட்சியை...///

அறிவுரை
///வீட்டிற்குள்ளே கேட்கும்
மனிதர்களின் கோபம் தெறிக்கும்
பெருங் குரைப்பை.///

பரிதாபம்
///"செருப்பு தைக்கணுமா"
என்று கத்திக் கொண்டு வருகிற
முதியவரின் வெடிப்பு விழுந்த
வெற்றுக் கால் பாதங்களை...///

தீபிகா(Theepika) said...

அன்புச் சகோதரர்கள் நம்பிக்கைபாண்டியன்,ஹேமா,
திவ்யா@தேன்மொழி,மகேந்திரன்,யுவராணி தமிழரசன்,
தென்காசித் தமிழ்ப்பைங்கிளி,மாலதி அனைவருக்கும் நன்றிகள்.

Post a Comment