உண்மை அறியும் பொய்கள்
சமாதானம் தருவிக்கப்பட்டதாய்
சொல்லப்படுகிற எனது நிலத்தில்
வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற
விளம்பர மரங்களின் நிழலில்
நாய்களுடன் சேர்ந்து
வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும்
படுத்துக் கிடக்கின்றன.
திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு
திரிகிற சனங்களின் முகங்களில்
படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள்
மிச்சமிருக்கும் வாழ்க்கையை
எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன.
சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும்
மிருகக்காட்சிச் சாலை விலங்குகளை
பார்க்கும் ஆவல் நிறைந்த
அதே கண்கள்
குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கி
கும்மாளமிட்டபடி ஊரெங்கும்
மிடுக்குடன் அலைந்து திரும்புகின்றன.
மொட்டையடிக்கப்பட்டிருக்கும் நந்தவனங்களில்
இறக்கைகள் பிடுங்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சிகள்
இயலாமைகளோடு மெல்ல மெல்ல
ஊர்ந்து திரிகின்றன.
இனிமேல் தேன் சேகரிக்க
அனுமதிக்கப்படாத அவைகள்
வயிறு நிறைப்பதற்காக
கைவிடப்பட்ட வெளிகளில்
அங்கும் இங்கும் அலைகின்றன.
நட்சத்திரங்களற்ற வானத்தில்
குழந்தைகள் தேடிக்கொண்டிருக்கும்
அவர்களின் தந்தைமார் பற்றி
எந்தப் பதிலையும் கொடுக்காதவர்கள்
நீச்சல் தடாகங்களையும் , பூங்காக்களையும்
அவர்களுக்கு பரிசளிக்கிற காட்சியை
படமெடுத்துக் கொண்டு போகிறார்கள்.
பகலில் சமாதானம் விற்கப்படும்
எங்கள் நகரத் தெருக்களில்
இரவில் ,
நாய்கள் அமளியாய் குரைக்கையில்
சாளரங்களை சாத்திக்கொண்டு
எல்லா இதயங்களும்
எப்போதும் போலவே படபடக்கின்றன.
துப்பாக்கிகள் கோடு கிழித்திருக்கிற
வெளித்தெரியாத வட்டங்களுக்குள்
குடியிருக்கிற எங்கள் சனங்கள்
இப்போ
தாம் எந்தப் பயங்களுமற்று
மகிழ்வுடன் குடி வாழ்ந்து கொண்டிருப்பதாய்
வெளியே சொல்ல கேள்விப்படுகிறார்கள்.
--- xxx ---
தீபிகா
23.02.2012
11.13 A.m
10 comments:
அந்த விசுவாசமிக்க நாய்கள் சொல்லும் ஆயிரம் அறிக்கைகளும்
புகைப்படச் சான்றிதழ்களும் இந்த ஒரு கவிதை பொறியில்
எரிந்து நிச்சயம் சாம்பலாகிப் போகும்
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
சகோதரர் ரமணி அவர்களே,
தங்களின் உடன்வருகைக்கும்
தவறாத பின்னூட்டத்திற்கும்
புரிந்துகொள்ளலுக்கும்
என்றென்றும் நன்றிகள்.
மனம் கனக்கச்செய்யும் உண்மையானா பதிவு....http://www.rishvan.com
///திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு
திரிகிற சனங்களின் முகங்களில்
படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள்
மிச்சமிருக்கும் வாழ்க்கையை
எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன.///
வலி மிகுந்த வரிகள்!
எப்போதும் தீ வளர்த்துக்கொண்டேயிருப்போம் தீபிகா !
மனதை உருக்கும் கவிதை
//மொட்டையடிக்கப்பட்டிருக்கும் நந்தவனங்களில்
இறக்கைகள் பிடுங்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சிகள்
இயலாமைகளோடு மெல்ல மெல்ல
ஊர்ந்து திரிகின்றன//ஒட்டுமொத்தத் துயரத்தையும் இந்த வரிகள் சுமந்து அழுகிறது தீபிகா. துயரங்கள் தின்ன தேசத்தின் கதைகள் இப்படித்தான் சபிக்கப்பட்டிருக்கிறது.
வலி மிகுந்த வரிகள்! மனதை உருக்கும் கவிதை
பின்னூட்டதிற்கு நன்றிகள்
பாண்டியன்,சுரேஸ்,ஹேமா,புதிய தென்றல்.
வலிகளையும்-கண்ணீரையும் புரிந்துகொள்கிற மனதுக்கும்.தேசத்து உறவுகளுக்காய் ஏங்கும் உங்கள் உணர்வுகளுக்கும் தலை வணங்குகிறேன் சகோதரி சாந்தி அவர்களே.இறக்கி வைக்க முடியாத பாரங்களை காலம் எங்கள் எழுத்துக்கள் மீது திணித்து விட்டிருக்கிறது சகோதரி.
Post a Comment