More than a Blog Aggregator

Aug 3, 2012

"அப்பா இல்லாத நண்பர்கள்"


அப்பா இல்லாத நண்பர்கள்




அப்பா இருந்த போது
நான் எத்தனை சந்தோசமாயிருந்தேன்.


என்னை கிளுகிளுப்பூட்டி சிரிக்க வைக்கும்
அவரின்
மீசை குத்தும் முத்தங்களில்
இன்னும் சிலிர்க்கிறது உடம்பு.

நான் கைவாரி விடுகிற
அப்பாவின் வளர்ந்து சுருண்ட
கறுப்பு ரோமங்களின் அடர்த்திக்குள்
மீண்டுவர விருப்பின்றி
சிக்குண்டு கிடக்கிறது ஞாபகம்.

இப்போது
அம்மா அணிந்துகொள்கிற
அவரின் சட்டைகளில்
இன்னும் போகாமலே இருக்கிறது.
என் அப்பாவின் வாசம்.

அம்மாவினுடைய வறண்ட விழிகளிலும்
வெறுமையான நெற்றியிலும்
தினம் தினம்
அப்பா இல்லாத வலியை
மௌனமாக கடந்து செல்கிறேன்.

அம்மாவை எப்படி சிரிக்கச் செய்வது?
என்கிற யோசனையிலேயே
அழுது தீர்க்கின்றன என் விழிகள்.

நானினி
அப்பா இல்லாத ஒரு குழந்தையாய்
நீண்டதூரம் வலிகளுடன்
மிச்சமிருக்கும் வாழ்க்கையின் பாதையில்
அம்மாவையும் சுமந்து கொண்டு
பயணிக்க வேண்டியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானிலும்
ஈராக்கிலும்
சிரியாவிலும்
எல்லா நாடுகளிலும் இருக்கும்
அப்பா இல்லாத பிள்ளைகளின்
முகங்களில் எழுதியிருக்கிற
துயரக் கதைகளின் வரிகளை
மொழியின் திரைகளை விலக்கிக் கொண்டு
என்னால் இப்போது
நன்றாக வாசித்துணர முடிகிறது.

நாங்கள்
"அப்பா இல்லாத நண்பர்கள்."


---xxx----

(காற்றுவெளி -ஆவணி 2012  இதழில் வெளியானது)
 



தீபிகா
13.03.2012
10.59 A.m

11 comments:

sathishsangkavi.blogspot.com said...

இலங்கையையும் சேர்த்துக்கொள்ளலாம்...

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாவைப் பற்றி சிறப்பான கவிதை...
பாராட்டுக்கள்...

நன்றி…
தொடர வாழ்த்துக்கள்...

Anonymous said...

மனம் கனக்கிறது.

ஹேமா said...

வலிக்க வலிக்க எழுதிய கவிதை.எத்தனையோ குழந்தைகளை நினைக்கவைக்கிறது வரிகள் !

கோவை நேரம் said...

நன்றாக இருக்கிறது...

நம்பிக்கைபாண்டியன் said...

சிறந்த கவிதைகள், முதலாவது மிக அருமை!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by a blog administrator.
வை.கோபாலகிருஷ்ணன் said...

வலி மிகுந்த வலிமையுள்ள கவிதைக்கு என் பாராட்டுக்கள்.

Respected Madam,

I am very Happy to share an award with you in the following Link:

http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

This is just for your information, please.

If time permits you may please visit and offer your comments.

Yours,
VGK

மாலதி said...

அம்மாவை எப்படி சிரிக்கச் செய்வது?
என்கிற யோசனையிலேயே
அழுது தீர்க்கின்றன என் விழிகள்.//வலி மிகுந்த கவிதை ...

யசோதா.பத்மநாதன் said...

உலகப் பொதுமை இரத்தம், கண்ணீர், மகிழ்ச்சி, துன்பம், அம்மா, அப்பா, அன்பு.

இல்லையா தீபிகா? கவிதை சோகம் ததும்பும் அழகு!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

Post a Comment