More than a Blog Aggregator

May 30, 2013

எழுத்தாளர்களே! வேண்டாம்.



எழுத்தாளர்களே! வேண்டாம்.





எழுத்தாளர்களே!

வேண்டாம்.
உங்களின் ஏதாவொரு வரியில்
கட்டுண்டு போனவர்கள் நாங்கள்.
உங்களை நம் கற்பனைகளின்
உயரத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
கீழே விழுத்தி விட சம்மதமில்லை.

வேண்டாம்.
உங்களைப் பற்றி
நாம் எதுவுமே அறிய வேண்டாம்.
உங்களின் எழுத்துக்களில் அழகு கண்டு
காதல் கொண்டவர்கள் நாங்கள்.
அந்த தீராக் காதலில்
நாங்கள் தோற்றுப் போக விருப்பமில்லை.

வேண்டாம்.
வாழ்வின் பாரத்தை
வார்த்தைகளின் ஈரத்தால் நிரப்பிக் கொள்ள
புத்தகங்களை நேசிப்பவர்கள் நாங்கள்.
சமூகம் கிழித்த வாழ்வின் காயங்களுக்கு
களிம்பு தடவுவதற்காக வாசிப்பவர்கள் நாங்கள்.
மீண்டும்
புண்களால் வலியுற சம்மதமில்லை எங்களுக்கு.

வேண்டாம்.
தெரிந்த அரசியல் வாதிகளாலும்...
தெரிந்த வியாபாரிகளாலுமே..
நாங்கள் வெம்பிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் விம்மியழ முடியவில்லை மனசுக்கு.

வேண்டாம்.
உங்கள் எழுத்து முகங்களில்
மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம்.
அந்த மரியாதைக் கண்ணாடிகளில்
உங்கள் சுயமுகங்களின்
விம்பங்கள் விழுந்து கீறல் விழவேண்டாம்.

வேண்டாம்.
எழுத்துக்கும் உங்களுக்கும் இடையில்
எந்த இடைவெளிகளுமில்லா மனிதர்களாய்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என
நாம் ஏதோ நம்பிக்கொண்டிருக்கின்றோம்.
அந்த நம்பிக்கையை சாகடித்து விடாதீர்கள்.

வேண்டாம்.
ஆத்ம திருப்திக்காக புத்தகங்களை
கையிலெடுத்தவர்கள் நாங்கள்.
ஈரமுள்ள மனிதர்களை
எழுத்துக்களுக்குள் தேடி வந்தவர்கள் நாங்கள்.
எங்களை ஏமாற்றி விடாதீர்கள்.

வேண்டாம்.
உங்களின் முகங்களை
நாங்கள் ஒருபோதும் பார்க்கவே வேண்டாம்.
உங்களின் வாழ்க்கை பற்றி
நாங்கள் ஒருபோதும் அறியவே வேண்டாம்.
உங்களின் வியாபாரங்கள் பற்றி
நாங்கள் ஒருபோதும் தெரியவே வேண்டாம்.
உங்களின் செய்கைகைள் பற்றி
நாங்கள் ஒருபோதும் கேட்கவே வேண்டாம்.

 
----xxx-----


தீபிகா
29-05-2013
05.17 P.m

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஈரமுள்ள மனிதர்களை எழுத்துக்களுக்குள் தேடி வந்தவர்கள் நாங்கள். எங்களை ஏமாற்றி விடாதீர்கள்.

வேண்டாம். உங்களின் முகங்களை நாங்கள் ஒருபோதும் பார்க்கவே வேண்டாம்.//

அருமை. மிகவும் அருமை. நன்கு ரஸித்தேன். தங்களின் எதிர்பர்ப்புகளே உண்மை.

நான் என்னுள் நினைப்பதும் அதுவே.

பாராட்டுக்கள், பகிர்வுக்கு ந்ன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வேண்டவே வேண்டாம்...

Yaathoramani.blogspot.com said...

வேண்டாம்.
எழுத்துக்கும் உங்களுக்கும் இடையில்
எந்த இடைவெளிகளுமில்லா மனிதர்களாய்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என
நாம் ஏதோ நம்பிக்கொண்டிருக்கின்றோம்.
அந்த நம்பிக்கையை சாகடித்து விடாதீர்கள்.//பெரும்பாலான இரட்டை முகம் கொண்ட
எழுத்தாளர்களே அதிகம் தட்டுப்படுவதால்
ஏற்பட்ட ஆதங்கத்தில் தாங்கள் எழுதியுள்ள
அருமையான கவிதையில் எனக்கும் உடன்பாடுண்டு

எப்படித்தான் சிறப்பாக சாயம் பூசினாலும்
மழையில் நனைந்தால் வெள்ளை கோழியெனத்
தெரிந்துவிடும் என்பதைப்போல எழுத்து என்றேனும்
எப்படியும் உள் மனத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்
தொடர்ந்து ஏமாற்றுதல் கடினமே
மனம் கவர்ந்த பதிவு,வாழ்த்துக்கள்

Post a Comment