More than a Blog Aggregator

May 23, 2014

சும்மா இருந்த அம்மா

               

                 சும்மா இருந்த அம்மா

தொங்கிக் கொண்டிருக்கும்
குசினி ஒட்டடையில் ...

உப்புப் பொருமியிருக்கும்
சுடுதண்ணீர்க் கேத்தலில்...

கறுத்துக் களைத்திருக்கும்
ஊதாங்குழல் வாசலில் ...

ஈரம் கசிந்திருக்கும்
உப்பு மண்பானையில் ...

தலை கருகியிருக்கும்
விறகுக் கட்டை மிச்சத்தில் ...

தொங்கிக் கொண்டிருக்கும்
தோசைக் கல் கரையில் ...

எண்ணெய் தோய்ந்திருக்கும்
பொட்டலச் சீலையில் ...

வெளுத்து நெளிந்திருக்கும்
உலக்கைப் பூணில் ...

குழி விழுந்திருக்கும்
அம்மிக் கல்லில் ...

பெயர் எழுதி ஒட்டியிருக்கும்
சரக்குத் தூள்ப் போத்தலில் ...

நாரொன்று கழன்றிருக்கும்
இடியப்பத் தட்டில் ...

எங்கும் மிச்சமிருக்கிறது.

வீட்டில் சும்மா இருந்ததாக
எல்லோரும் சொல்லிக் கொண்ட
அம்மாவின் பெரும் உழைப்பு.

---xxx----

தீபிகா
08.32 Pm.
10.03.2014

2 comments:

விச்சு said...

வீட்டில் இருப்பதால் சும்மா என்று நினைத்துவிட முடியாது. அத்துனை வேலைகளையும் செய்வது அம்மாதானே.. அருமையான வரிகள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_18.html?showComment=1411012022369#c8444431922796668986

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment