கறுப்பு நிலாக்கள்.
நானொரு கறைபடாத நிலவு.
இன்று
அமாவாசையாகி நிற்கின்றேன்.
என் ஒற்றைச் சூரியனை
போர்ப் பாம்புகள் அழகான வானத்திலிருந்து
இழுத்துப் போய்
வெளிச்சமில்லாத சிறைப்புற்றுகளுக்குள் போட்டு
சிதை மூட்டியிருக்கிறதென் மனசில்.
கையில் விடிவெள்ளிக் குஞ்சுகளோடு
வழிதெரியாமல் நான் நடந்துகொண்டிருக்கும்
இந்த சமூகத்துக்குள் தான்
இன்னமும்
சரியாய் திறக்கப்படாமலிருக்கும்
எனது பூட்டுக்களின் சாவிகள்
பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
பொட்டில்லா நெற்றி
வண்ணமில்லா சேலை
நகையில்லா கழுத்து
சிரிப்பில்லா முகம் என
சமூகம் செதுக்கிவைத்திருக்கும்
அத்தனை ஒப்பனைகளையும்
இப்போ
நானுமணிந்து கொண்டுதான்
வீதிகளில் இறங்குகின்றேன்.
இல்லையேல் ... ...
என்னையொரு விபச்சாரியாக்கிக் கூட
அழகு பார்க்க துணியும்
பல குருட்டுக் கண்ணாடிகளும்
வைக்கப்பட்டிருக்கும் வழியே தான்
நான் போய்க் கொண்டிருக்கிறேன்.
யுத்தம்
என் தாயின் தலையை விழுங்கிக்கொண்டு
முண்டத்தை துப்பியது.
என் தங்கையின்
காற்சிறகை உடைத்துக்கொண்டு
ஊன்றுகோலை பரிசளித்தது.
அக்காவை அவசர அவசரமாய்
பற்றைகளுக்குள் இழுத்துக்கொண்டு போயிற்று.
என்னை
பிச்சைக்காரியாக்கி அலைக்கிறது.
என் அழிவின்
பார்வையாளர்களாக இருந்தவர்கள்
பங்காளிகளாக இருந்தவர்கள்
நடுவர்களாக இருந்தவர்கள்
எல்லோரும் இப்போ கொட்டிக் கொடுக்கிற
கோடிகளிலிருந்து
ஒரு கொட்டிலை போடுவதற்கான
கொஞ்சப் பிச்சையையேனும்
இன்னும் தராமலிருக்கிற
"போர்க்குற்ற நாடு” தரவேண்டுமென
எதிர்பார்க்க என்ன இருக்கிறது?
எனது
விழிகளுக்குள் தேங்கிக் கிடக்கும்
சூரியனின் விம்பத்தை
மடிக்குள் உதடுவெடித்துக் கிடக்கும்
விடிவெள்ளிகளின் விழிகளில்
பார்த்துக்கொண்டிருக்கிற
நிம்மதி வாழ்வையேனும்
பறிக்காமலிருக்கிற
பாக்கியம் மட்டுமேனும் தந்தால்
போதும்.
தீபிகா.
01-07-2010
1 comment:
வணக்கம்.கவிதை அருமை..ஆனால் ரசிக்க விடாமல் எழுத்தின் நிறம் கண்ணை கூசி நிற்கிறது.டெம்ப்ளேட் மாத்துங்களேன்.
Post a Comment