More than a Blog Aggregator

Nov 29, 2011

மழை நனைத்த மனசு


பொழிந்து  தள்ளுகிறமழையில்
வழிந்து விழுகின்றன
ஞாபகத்துளிகள்.

தூறல் துளிகளை
முகம் நிமிர்த்தி ஏந்தும் சுகம்.
துரத்திவரும் தூவானங்களிலிருந்து
விலகிநிற்கும் சந்தோசம்.
கூரையின் வழி ஓடி வருகிற
உடையாத வெள்ளித்துளிக் கம்பிகளை
கை நீட்டி குறுக்கறுக்கிற மகிழ்ச்சி.
முதல் விழுகிற மழைத்துளிகளில்
வறுபடுகிற மண்ணின் வாசம்.
தரையில் விழுந்து அடிபட்டுக்கொண்டு
உடைகிற நீர்க்குமிழிகளின் கோலங்கள்.

தூரத்தே துரத்திக்கொண்டு வருகிற
மழையின் சத்தம்.
ஓடுகிற மழையின் ஒருகோடி அழகு.
ஒழுகிற இடங்களை ஏந்திககொள்ளும் சட்டிகளில்
மழை பாடும் சங்கீதம்.
எம் கனவுக் கப்பல்களை காவிச்செல்லும்
அலையில்லா வெள்ளம்.
நெய்விளக்குகளுக்கு குடைபிடிக்க வைத்தபடி
எம்மோடு சேர்ந்தழும் கார்த்திகை மழை.

எல்லாம்
இப்போதும் ஈரமாகவே இருக்கிறது.
மழை நனைத்த என் மனசில்.


------xxx -------------

தீபிகா.
25.11.2011
8.13 Pm.
(அடைமழை பொழியும் முன்னிரவு)

3 comments:

Anonymous said...

மழைத் தோற்றம் கண்ணில் தெரிகிறது வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Muruganandan M.K. said...

"..தூரத்தே துரத்திக்கொண்டு வருகிற
மழையின் சத்தம்.
ஓடுகிற மழையின் ஒருகோடி அழகு..."
ஒவ்வொரு வரியும் அனுபவங்களைக் கிளறி மகிழ வைக்கிறது

தீபிகா(Theepika) said...

மழையில் நனைந்த சகோதரர்களுக்கு நன்றிகள்.

Post a Comment