More than a Blog Aggregator

Dec 20, 2011

எனது பிள்ளையின் காணி



போகவும் வரவும்
நான் பார்த்துக்கொண்டு போகிற
எனது பிள்ளையின் காணியை
இவர்கள் உழுது வைத்திருக்கிறார்கள்.
எனது பிள்ளையும்
அவனது நன்பர்களுமாய் சேர்ந்து
நட்டு வைத்த விதைகளை
முளைவிடும் முன்னமே
இவர்கள் கிளறியெறிந்து விட்டார்கள்.

பூக்களெதுவும் பூக்காதபடி
எனது பிள்ளையின் காணி எரியூட்டப்பட்டிருக்கிறது.
வெளிச்சங்களெதையும் எரியவிட முடியாதபடி
அங்கு பச்சை இருட்டுக்கள் காவலிருக்கின்றன.

எந்த உறுதிகளையும்
கைகளில் வைத்திருக்காதவர்கள்
எனது பிள்ளையின் காணியை பார்க்கவிடாமல்
என்னை தடுக்கிறார்கள்.

அங்கே
எனது பிள்ளையும் அவனது நன்பர்களும்
பசியுடன் படுத்திருக்கிறார்கள்.

அவர்களுக்காய்
குடிப்பதற்கு நீர் கொண்டு போகவும்
சாப்பிடுவதற்கு பலகாரம் கொண்டு போகவும்
இம்முறையும் முடியாமல் போயிற்று
இந்த முதுமை விழுந்த தாயாலே.

எனது பிள்ளைகளுக்கான நேரத்தில்
ஆலயங்களெதிலும்
தீபம் காட்டி மணியடித்து
அர்ச்சனை செய்விக்கமுடியாதபடி
நான் வாழும் நிலத்தையும்
இவர்கள்
ஏறி மிதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

-------xxx----------



தீபிகா
29.11.2011
2.31 P.m

2 comments:

சாந்தி நேசக்கரம் said...

விதைநிலங்கள் புதைநிலங்களான துயரம் ஆயிரமாயிரம் வருடங்கள் எம்மால் மறக்க முடியாத வடுவாகப் போய்விட்டது. ஆயிரமாயிரம் அம்மாக்களின் கண்ணீரின் கனம் ஒரு பூகம்பமாய் புயலாய் மாறாதுவிடினும் பொய்களைக் கிழித்து மெய்களை விதைக்கும். அதற்காகவேனும் காத்திருப்போம்.

நன்றி

சாந்தி

தீபிகா(Theepika) said...

உயிர்விதைகளின் கனவுகளோடு
மெய் விதைகளுக்காக காத்திருப்போம்.
நன்றி தங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொண்டமைக்கு.

தீபிகா.

Post a Comment