More than a Blog Aggregator

Mar 20, 2012


கண்களை மூடும் காட்சிகள்



தங்கள்
பிள்ளைகள் கொல்லப்படுகிற காட்சியை
பார்க்கிற தாய்மார்களின் கண்கள்
பெற்ற வயிறுகளை
கைகளால் அடித்தபடி வழிகின்றன.



சிதைக்கப்பட்டிருக்கிற குழந்தைகளின் 
காயங்களிலிருந்து,
இரத்தம் சிந்தச் சிந்த விரியும்
அவர்களின் கடைசி நேர ஓவியங்கள்
தாய்மார்களின் துக்கம் நிறைந்த
மூச்சுக் காற்றையும் அடைக்கின்றன.

பிள்ளைகளின் நிர்வாண மரணங்களை
தாய்மார்கள் பார்க்கவேண்டிய
கனத்த துயரத்தின் விதியை
காலமெம் தேசமெங்கும் எழுதியிருக்கிறது.

தாய்மாரின்
வறண்டு போன தொண்டைகளிலிருந்து
உருகிவிழும் வார்த்தைகளும்
கண்கள் கட்டப்பட்டிருக்கும்
நீதி தேவதையின் காதுகளுக்கு எட்டாமல்
நலிந்து போய் சாகின்றன.

கடவுள்கள் புன்னகைத்துக்கொண்டிருக்கிற 
கோயில்களின் வாசல்களில்
தாய்மார்கள் கண்ணீரோடு இருக்கிறார்கள்.
எல்லா பிரார்த்தனைகளும்
கைவிடப்பட்டு விட்ட மனிதர்களாய்.

இனிமேல்
தொட்டும் பார்க்க முடியாதபடி
குப்புறக் கிடக்கிற பிள்ளைகளின் சடலங்கள்
கைகள் கட்டப்பட்டபடி கிடந்து
தாய்மார்களின் கைகளை மாரடிக்கச் செய்கின்றன.

எந்தப் பிள்ளைகளைப் பற்றியும் 
எந்தத் தாய்மார்கள் பற்றியும்
கவலை இல்லாத வியாபாரிகள்
தங்கள் கள்ளச் சந்தைகளில்
பிள்ளைகளின்
நிர்வாண உடல்களை காட்டிக் காட்டி
வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிள்ளைகள் சுடப்படுவதற்கு முன்பு
இவர்கள் திருகிக் கொன்ற
நீதி தேவதையை கூட்டி வருவதாக
பொய் சொல்லிச் சொல்லி
வியாபாரிகள் சனங்களை
இப்போதும் ஏமாற்றுகிறார்கள்.

திரும்பிவர முடியாத பிள்ளைகளின் 
காயப்பட்ட தேகங்களை 
திரும்ப திரும்ப குவித்துக் காட்டி
பதறிக் கொண்டிருக்கிற தாய்மார்களின்
வலி நிறைந்த கண்களையும்
காட்சிகள்
விரைவில் மூடிவிடப் பார்க்கின்றன.



---xxx----




தீபிகா
13.03.2012
9.36 P.m













14 comments:

சாந்தி நேசக்கரம் said...

//எந்தப் பிள்ளைகளைப் பற்றியும்
எந்தத் தாய்மார்கள் பற்றியும்
கவலை இல்லாத வியாபாரிகள்
தங்கள் கள்ளச் சந்தைகளில்
பிள்ளைகளின்
நிர்வாண உடல்களை காட்டிக் காட்டி
வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.//
வியாபாரிகள் எப்போதுமே எக்காலமும் வியாபாரிகளாகவே வாழ்ந்துவிடுவார்கள். அப்பாவிகள் மட்டுமே எப்போதும் அவலப்படுவோராக வாழ்கிறார்கள்.

Marc said...

கண்ணீர்தரும் ஈழக்கவிதை

தீபிகா(Theepika) said...

சனங்களின் ரணங்கள் பற்றி யாரும் அதிகமாய் சிந்திக்காமலிருப்பது வேதனைக்குரியதே.தங்கள் பின்னூட்டதிற்கு நன்றிகள் சகோதரி சாந்தி.

தீபிகா(Theepika) said...

தனசேகரன்! தங்கள் புரிந்துணர்வுள்ள பின்னூட்டத்திற்கு நன்றி தோழா.

ஹேமா said...

ஈழப்போராட்டம் இப்ப கொஞ்சக்காலமாகவே சினிமா தொடக்கம் ஊடகங்கள், அரசியல் எல்லா இடங்களிலுமே வியாபாரமாய்த்தானே கிடக்க்கு.சில பாடல் வரிகளைக்கூடக் கவனியுங்கள் தீபிகா !

துவாரகன் said...

என்ன கருத்து எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் கருத்தெழுத முடியாத பல நண்பர்களோடு சேர்ந்து நானும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி தீபிகா.

தீபிகா(Theepika) said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஹேமா.
படங்களிலும் - பாடல்களிலும் ஈழவலி இன்னும் முழுமையாய் வெளிப்படுத்தப்படவில்லை என்பது உண்மைதான்.

தீபிகா(Theepika) said...

தங்கள் வாசிப்பிற்கு நன்றி துவாரகன். தங்களின் நிலையை புரிந்து கொள்கின்றேன்.

விச்சு said...

உயிர்களை மலினமாகப் பார்க்கின்ற உலகமிது. அதனை மறக்க நினைத்தாலும் ஊடகங்களும் அதனினை வைத்து வியாபாரம் செய்வோரும் மறக்கவிடமாட்டார்கள். அதைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

நம்பிக்கைபாண்டியன் said...

கவிதை உணர்த்தும் அந்த சூழ்நிலையின் வலிகளிலிருந்து
அவ்வள‌வு சுலபத்தில் மீள முடிவதில்லை!

கீதமஞ்சரி said...

மௌனமாய் மனதுக்குள் மருகுவதைத் தவிர வேறொன்றும் சொல்லவோ செய்யவோ வக்கற்றவளாயிருக்கிறேன் தீபிகா.

தீபிகா(Theepika) said...

நண்பர்கள் விச்சு,பாண்டியன், கீதா...புரிந்துணர்வுடன் கூடிய தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

சிந்தையின் சிதறல்கள் said...

கண்களில் வடிந்திடாத நீர்களால் மனம் தத்தளிக்கிறது சகோ காலம் அனைத்திற்கும் பதில்தரவல்லது

நந்தினி மருதம் said...

வலி. வலி.வலி.கவிதை எழுப்பிய வலியில் இருந்து மீள முடியவில்லை

Post a Comment