ஒரு அகதியின் பாடல்
ஒரு அகதியாய் இருத்தலிலெரியும்
என் ஆழ்மன நெருப்பைஉங்களுக்கு காட்ட முடியவில்லை என்னால்.
உடைந்து நொருங்கிப் போகிற
ஒரு பல்லி முட்டைக்காகவும்...
தவறி விழுகிற ஒரு அணிலின் கூட்டுக்காகவும்...
கதறியழுகிறதென் அகதிக் கண்கள்.
எந்தக் கோபுரங்களின் நிழல்களும்
எனக்கு வசதியாயேயில்லை.
எந்தப் பூங்காக்களின் அழகும்
என் மனதின் தாகத்தை தணிக்கவேயில்லை.
எனக்கொரு அழகிய காதலி இருந்தாள்.
நான் அவளைத் தொலைத்தேன்.
எனக்கொரு அன்பான அக்கா இருந்தாள்.
நான் அவளைப் பறிகொடுத்தேன்.
எனக்கொரு உயிரான அம்மா இருந்தாள்.
நான் அவளைப் பிரிந்து வந்தேன்.
எனக்கொரு பாடசாலை இருந்தது.
நான் அது தரைமட்டமாகக் கண்டேன்.
எனக்கொரு நிலம் இருந்தது.
நான் அதை இழந்து வந்தேன்.
எனக்கெதுவும் வேண்டாம்.
என் நிலத்தில்
என் சொந்தங்களோடு
எனக்கான வாழ்வு மட்டும் போதும்.
நான் அதைப் பெற்றே தீருவேன்.
இல்லையேல்
என் குழந்தைகள் அதைப் பெறுவார்கள்.
அதுமில்லையேல்
என் குழந்தைகளின் குழந்தைகள் பெறுவார்கள்.
நாங்கள் ஒருபோதும்
அகதிகளாகவேயிருக்க சம்மதிக்கவே மாட்டோம்.
எம் மண்ணின் மீது சத்தியமாக.
----- xxx ------
தீபிகா
20 - 06 - 2013
3.44 P.m
20 - 06 - 2013
3.44 P.m
( யூன் 20 - சர்வதேச அகதிகள் தினம்)
5 comments:
//தவறி விழுகிற ஒரு அணிலின் கூட்டுக்காகவும்...
கதறியழுகிறதென் அகதிக் கண்கள்.//
அருமையான அழகான பார்வைகளுடன் கூடிய ஆக்கம்.
படிக்க வருத்தமாகத்தான் உள்ளது.
இழந்தவற்றை நிச்சயம் ஒருநாள் பெறுவீர்கள்.
அதற்கு என் அன்பான நல்வாழ்த்துகள்.
///என் நிலத்தில்
என் சொந்தங்களோடு
எனக்கான வாழ்வு மட்டும் போதும்.///
மனதை உருக்குகிறது...
எம்முடன் எம் காலத்தில் எம் அகதி வாழ்வு அவலம் முடியட்டும். எம் அவல வாழ்வின் துயர நிழல் கூட எம் சந்ததியின் மீது படக் கூடாது அதற்காய் ஒன்றுபட்டு உழைப்போம்.
உங்களில் ஒருவனாகையால் உங்கள் தவிப்புத் தெரிகிறது உறவே
அன்புச் சகோதரன்
2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை
vethanai sako..
Post a Comment