பிரிவுக்கு தெரிந்தது
யாருமற்றஇரவில்
தனித்திருக்கும் நிலவின் கண்களைஒரு தூக்கம் துரத்தப்பட்ட விழிகளோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்னூர் தெரிந்தது.
எருமைகள் படுத்திருக்கும் வயல்களில்
முதுகுகளில் விருந்துண்டு கொண்டிருந்த
வெள்ளைக் கொக்குகள் தெரிந்தன.
அறுகம்புல் படங்கு விரித்திருந்த
ஒற்றையடிப் பாதை தெரிந்தது.
அதில் தடயமிழுத்துப் போய்க் கொண்டிருந்த
நாக்கிளிப்புளு தெரிந்தது.
காகத்தின் எச்சத்தடம் காய்ந்திருந்த
வீட்டின் மரப்படலை தெரிந்தது.
அரிசிமா வறுத்த அடுப்படிச் சாம்பலுக்குள்
சுருண்டு கிடந்த பூனையின் வால் தெரிந்தது.
கிணற்றடிப் பாசிப்பூக்கள் தெரிந்தன.
மாமரத்தில் குடியிருந்த அணிலின் வீடு தெரிந்தது.
கொடியில் தனிமையாய் தொங்கிய
உடுப்புக் கொழுவிகள் தெரிந்தன.
அணிலரித்து மிச்சம் விட்ட
பழுத்த கொய்யாப்பழப் பாதி தெரிந்தது.
ஒன்றிரெண்டு செவ்வந்திப் பூக்கள் தெரிந்தன.
இருமிக் கொண்டு படுத்திருந்த
அப்பாவின் பித்தை வெடித்த கால்கள் தெரிந்தன.
நிலவு விழுந்து பளபளத்த
அம்மாவின் சுருங்கிய முகத்தில்
ஒரு தெய்வத்தின் சாயல் தெரிந்தது.
பிறகெதுவும் தெரியவில்லை.
என் கண்ணீரைத் தாண்டி.
---xxx---
தீபிகா
07-07-2013
10.06Am
4 comments:
காட்சிகள் கண் முன் தெரிந்தன... முடிவில் கலங்க வைத்தன...
உண்மை அன்புக்கு தூரமெல்லாம் தெரியாது
அற்புதமான வரிகள்...
எத்தனை வருடங்கள் வெளிநாட்டில் வாழ்தாலும் கனவுகள் மட்டும் ஊரில்தான்.மனதை நெருடும் வரிகள் தீபிகா !
Post a Comment