More than a Blog Aggregator

Feb 14, 2016

சிராந்தி அழுகின்றாள்.


சிராந்தியும் 
இப்போது அழத் தொடங்கி விட்டாள்.

முதன்முறையாக 
இப்போது அவள்
தமிழ்த் தாய்மார்களின் கண்களையும் 
விதவைகளின் முகங்களையும் உற்றுப் பார்க்கிறாள்.

அவளின் முகத்தில் ஓங்கி அறைகிறான்
 காலம் பிந்திய சூரியன்

தனது 
உச்சந் தலை நோக்கி இறங்கும் 
போதிமரத்து ஒற்றை இலையொன்றை 
யுத்த விமானமாகக் கண்டு 
அலறியடிக்கின்றனஅவளின் கண்கள்.

அவளது கனவுகளில் 
கோயில் கோபுரங்கள் இடிந்து விழுந்து 
அவளை மூடுகின்றன. 
தனது முள்ளங்கிச் சாம்பாற்றில் 
தமிழுடல்கள் மிதப்பதாக கதறத் தொடங்குகின்றது 
அவளது ராஜகுரல். 
சமயலறைக் கித்துல் பாணியில் 
தமிழர்களின் ரத்தம் கலந்திருப்பதாக 
அவள் இப்போது சந்தேகப்படத் தொடங்குகிறாள்.

தனது இரண்டாவது மகனின் 
பெருங் கதறல் ஒலி 
தொலை பேசிகளுக்குள் கேட்பதாக 
அவள் தனது காதுகளைப் பொத்துகிறாள்.

யாரோ ஒரு றக்பீ விரன் 
தனது மகனின் ஆணுறுப்பைக் 
கட்டிவைத்து அறுக்கப் போவதாக
உளறுகின்றது அவள் நாவு.

தனது கணவனின் கைகளிரெண்டையும் 
அவரது சிவப்புச் சால்வாயாலேயே 
பின்பக்கமாகக் கட்டிவைத்து 
நிர்வாணமாக இருத்தி வைத்திருக்கிற காட்சி 
அடிக்கடி அவள் முன் தோன்றி மறைகிறது.

எல்லாத் புத்தர்களும் 
தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கதறிக் கொண்டு 
அவளின் கனவுக் கால்கள் 
வடக்கு நோக்கி ஓடத் தொடங்குகின்றன.

‘‘ சும்மா விடுவதில்லை பிள்ளைச் சாபங்கள் ‘‘ 
எனும் அசரீரியொன்று 
அவளை விடாது துரத்திச் செல்கின்றது.

---xxx---

தீபிகா 
12-02-2016 
10.37 Am.

No comments:

Post a Comment