மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்
நாங்களொரு பருக்கை சோற்றுக்காக
உமிக் கும்பிகளை
இரகசியமாய் இரவுகளில் கிளறியவர்கள்.
யானை மிதித்த கால்தடத்திற்குள்
வற்றாது மிச்சமிருந்த தண்ணீரில்
தாகம் தீர்த்துக் கொண்டு தப்பி வந்தவர்கள்.
கடவுள்கள் உறுப்பிழந்து
அனாதையாகி செத்துக் கிடந்ததை
நம்பமுடியாத கண்களுக்குள் ஏந்தியவர்கள்.
வீடுகளை பார்த்துக் கொண்டு
பதுங்குகுழிக்குள் படுத்துறங்கியவர்கள்.
மின்விளக்குகளை அணைத்துவிட்டு
மெழுகுதிரி வெளிச்சங்களில் படித்தவர்கள்.
விமானங்களை கண்டால்
விழுந்தடித்துக் கொண்டு பதுங்கியவர்கள்
பட்டாசுகள் வெடித்தாலும்
காதுகளைப் பொத்திக்கொண்டு படுத்தவர்கள்.
நிலவெறிக்கும் இரவுகளை
ரசிக்க முடியாமல் அடைந்திருந்தவர்கள்.
நாய்கள் குரைத்தால்
நடுநடுங்கி வியர்த்து கொட்டியவர்கள்.
நாங்கள்
உறுப்பிழந்த மனிதர்களையும்
உறவிழந்த மனிதர்களையும்
சாதாரணமாய்
மிகச் சாதாரணமாய்
சுமந்து கொண்டிருக்கிறவர்கள்.
விதைத்த பயிரை
அறுவடைக்கு முன்னே
தொலைத்து வந்திருக்கிறவர்கள்.
சிதைத்த கனவுகளை
இதயங்களுக்குள்
சேகரித்து கொண்டு வந்திருக்கிறவர்கள்.
எங்கள் கதை நீளமானது.
எங்கள் கதை துயரமானது.
எங்கள் கதை கண்ணீர் சிந்துவது.
எங்கள் கதை குருதி வழிவது.
நாங்கள் எப்போதும்
மரணங்களோடு வாழ்ந்தவர்கள்.
நாங்கள் இப்போதும்
அகதிகளாகி அலைகிறவர்கள்.
குறித்துக் கொள்ளுங்கள்
நாங்கள்
நம்பிக்கைகளை கைவிடாதவர்கள்.
---xxx----
தீபிகா
11-07-2013
2.15 Pm.
5 comments:
நெஞ்சில் கனமேற்றி விடுகிறது
ஒவ்வொரு சொற்களும்...
மனம் வலிக்கச் செய்யும் கவிதை சகோதரி...
Very emtional :(
"குறித்துக் கொள்ளுங்கள்
நாங்கள்
நம்பிக்கைகளை கைவிடாதவர்கள்."
வலிகளைத் தாண்டிய
நம்பிக்கை வரிகள்.
விடை இல்லை என்றாலும் விடியும் என்றே நம்புவோம். நலிந்திடாமல் காப்போம் நம்பிக்கை யையாவது.
கனிந்து வரும் நாளும் வெகு தூரம் இல்லை என்று.
பகிர்வுக்கு நன்றி....! வாழ்த்துக்கள்...!
இறுதி வரிகள் அருமை! உங்கள் தளம் வலைச்சரத்தில்http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_18.html அறிமுகம் ஆகியுள்ளது! வாழ்த்துக்கள்!
Post a Comment