More than a Blog Aggregator

Nov 15, 2025

ஆசுவாசம்

 ஆசுவாசம்


காலொடிந்த பொம்மைக்கு

மருந்து கட்டுகிற குழந்தை முன்

உயிரற்ற சிறுவர்களைக் கிடத்துகிறது

தொலைக்காட்சி.


திரையை மூடச் சொல்லி அழும்

குழந்தையின் உலகை

விழுங்குகிறது சாம்பல்.


இரத்தமும், கண்ணீரும் வழியாத

ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை

வாங்கவே முடியாதா அப்பா?

என்கிற குழந்தைக்கு

பதிலேயில்லை யாரிடமும். 


பசி நிரப்பும் அணில்களிடம்

முறைப்பாடு செய்கிறது குழந்தை.


உதிர்ந்த இலைகளின் வண்ணங்களை

ஒவ்வொன்றாய் பொறுக்குகிற

குட்டிக் கைகளுக்குள் விரிகிறது

கொஞ்சம் ஆசுவாசம்.


---- xxx --‐-


தீபிகா

02.11.2025

05.30 am


Tks - photo


#ஆசுவாசம்

#தீபிகா 

#theepika 

#கவிதை 

#ஈழம்

சொறிதேய்ப்பு

 சொறிதேய்ப்பு


ஒரு குக்குரன்

நியாயம் பிளந்ததும்,

ஓடி வருகின்றன ஒன்பதும்.


தங்களை அசைத்துக் காட்ட,

ஒரு மணிக்காற்றுக் கிடைத்த

சின்ன மகிழ்ச்சி நாவில்.


வெறுவெற்றிலை குதப்பும்

பொழுது களிப்பிகளுக்கு,

ஒரு நோவுமில்லா

சொறிதேய்ப்புக் களியிது.


கொஞ்சப் பூரணமுமற்ற

விரல் வீங்கிய வாந்திகளுக்கு

குடை பிடிக்கின்றன காளான்கள்.


பணத்திற்குத் தடுமாறும்

பெருந்தலைகள் நான்கு

அமுசடக்கிக் குனிகின்றன.


கேட்பாரற்ற வெளியில்

அழுகிறது ஓநாய்.


அதன்,

கண்களில் மிச்சமிருக்கிறது

களவாடிய ஆடுகள் மீதெழும்

மீச்சிறு குற்றவுணர்வு.


----- xxx -----


தீபிகா

02.11.2025

08.43 am.


Tks - photo


#சொறிதேய்ப்பு

#தீபிகா 

#theepika 

#கவிதை 

#ஈழம்

வலி

 ஒரு மகன்

என்னைப் போல.

ஒரு தாய்

என் அம்மாவைப் போல.

ஒரு தந்தை

என் அப்பாவைப் போல.

ஒரு வீடு

என் வீட்டைப் போல.

ஒரு பெரும் வலி

நிச்சயம் 

அது என்னுடையதேயல்ல.

நானதை,

உணர்ந்து பார்க்க முனைகிறேன்.

அது

தூரத்து நட்சத்திரமாகத் துடிக்கிறது.


- தீபிகா-

15.11.2025

10.50 am.

மகன்

 மகன்

எப்போதும்,

காலுக்குள் நடந்தவன்

கையைவிட்டுப் போனான்

ஒரு நாள்.


வீடு முழுவதும்

சாம்பல் பூத்த இரவில்

அவனின் தாய்மடி

துக்கத்தை அள்ளிப் பருகியது.


மகனில்லாத வீட்டின் சாப்பாட்டில்,

உப்புக் கரித்தது.

சிரிப்பை மறந்த பூக்கள்

முற்றத்தின் சரணங்களாகின.


அமைதியின் இருளில்,

மகனின் முகம் எதிரொலித்தது.

எல்லா வரிகளிலும்,

நம் பால்வெள்ளியைத் தேடினோம்.


ஒரு நாள்,

படலை திறந்து கொண்டு வந்தது,

எங்களின் சூரியன்.


காட்டின் வைரம் குடித்து

கறுத்திருந்தது அந்த முகம்.

சேவலடித்து விருந்து வைத்தோம்.

ஊட்டிவிட்டு அழுதன தாய்விரல்கள்.


எல்லாவற்றிற்கும்,

சிரித்துச் சமாளித்தவன்

ஒரு குதிரை போலவே

புறப்பட்டுப் போனான்.


தவறவிட்டதாக வீடு நினைத்த

அவனது சாரத்தை,

தலையணையாக்கினாள் தாய்.


வெடிகளேறிய வானத்தை,

நெடுந்தொலைவிலிருந்து 

எல்லோருமாகப் பிரார்த்தித்தோம்.


- தீபிகா-

15.11.2025

09.40 pm.


Tks - painting


#தீபிகா 

#மகன்

#ஈழம் 

#தமிழ் 

#கவிதை

#மாவீரர்

போராட்டம்

 போராட்டம்

என் தாய்நிலத்தில்,

மரங்கள் இலையுதிர்ந்ததில்லை.

மனிதர்கள் உதிர்ந்தார்கள்.

செடிகளோ,

பூக்களை வைத்திருக்கவில்லை.

கல்லறைகள் வாங்கி வைத்திருந்தன.

நாங்கள் 

நிலாவைப் பார்க்கவில்லை.

விமானங்களை 

பார்த்துக் கொண்டிருந்தோம்.

பள்ளிக்கூடங்களில் 

படிக்க வாய்க்கவில்லை.

பதுங்குகுழிகளுக்குள் படித்தோம்.


தேவாலயங்களில் பிணங்களாகின

எங்குள் குழந்தைகள்.

வைத்தியசாலைக்குள்,

சிகிச்சை கிடைக்கவில்லை.

துப்பாக்கிச் சன்னங்களே கிடைத்தன.

முட்கம்பிகள்

எங்களை இறுக்கிச் சுற்றின.

துப்பாக்கிகளால் 

நாங்கள் மேய்க்கப்பட்டோம்.

எறிகணைகள் 

எம் கனவுகளை துரத்திக் கொண்டிருந்தன.


தரைமட்டமான வீட்டில் 

பல்லிமுட்டைகளைப் போல சிதறினோம்.

கறுப்புத் தலையாட்டிகள்,

பட்டப்பகலில் எங்களை விழுங்கின.

கடவுள் சிலைகள் முண்டங்களாகின.

யேசுவின் சிலுவையோ

உடைந்து தொங்கியது.

தென்னந்தோப்புக்கள்,

தலைகளற்ற கரிக்கட்டைகளாக நின்றன.

பனைகளோ, காவலரண்களில் 

துண்டு துண்டாகக் கிடந்தன.


எல்லா இரவுகளிலும்,

துப்பாக்கிகள் ஆட்சி செய்தன.

பொய்களை ஒலிபரப்பின செய்திகள். 

வீதிகளெங்கும் செத்த காகங்கள். 

குடிசைகளெங்கும் இலையான்கள்.

உடைந்த மதகுகளுக்குள் 

குடியிருந்தன சனங்கள். 

மைதானங்களில்,

பயம் அப்பிக் கிடந்தது.

பந்துகள் விளையாடிய இளைஞர்கள்

கால்கள் துண்டாடப்பட்டு இருந்தார்கள்.


கிணறுகள்,

கொல்லப்பட்ட சடலங்களால் மூடப்பட்டன.

தபாற்பெட்டிகளில்,

துப்பாக்கிச் சன்னங்கள் பூத்திருந்தன.

மிச்சமிருந்தவர்களைக் கணக்கிட்டோம்.

தொலைந்தவர்களின் கதை,

தொலைந்ததாகவே போனது.


கூரையும், சுவர்களுமற்ற வீட்டில்

நம் புதிய குழந்தைகள் பிறந்தன.

ஒரு குருதிச் சித்திரம் போல,

கிராமத்தின் முகம் இருந்தது.

பிள்ளைபிடிகாரர்களுக்குப் 

பயந்து கிடந்தது பகல்.

இரவோ,

நாய்களிடம் மூச்சைக் கொடுத்துவிட்டு

துடித்துக் கொண்டிருந்தது.


பச்சை பயத்தின் குறியீடாக இருந்தது.

குரல் அடைக்கப்பட்டவர்கள்

பசியின் வரிசையில் நின்றார்கள்.

புரியாத மொழிகளால்,

கன்னங்களில் அறையப்பட்டோம்.

வயல்களெங்கும்

சப்பாத்துக்கள் உழுது திரிந்தன.

சூரியன்,

ஒரு சவம் போல வந்து போனது.

கேட்பாரற்ற பிறவிகளாயிருந்தோம்.

தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வு

தன்னைத்தானே,

மெதுமெதுவாகத் தூக்கிச் சுமந்தது.


இது,


மிக, 

மிக, 

மிக மிக அருகில்

நடந்த வரலாறு தான்.


நாங்கள் தான்,


வெகு,

வெகு,

வெகு வேகமாய்,

மறந்து போகிறோம்.


- தீபிகா-

24.10.2025

01.19 am.


Tks - photo - Aline Martello


#போராட்டம்

#ஈழம் 

#தீபிகா 

#கவிதை 

#மறதி

#குருதிச்சித்திரம்

" வைரவர் மடை"

 " வைரவர் மடை"


இந்திராகாந்தி இறந்ததற்குப் பிறகு வந்த

ஒரு பாரமான மாலைப்பொழுதில்

வைரவருக்கு 

வடைமாலை சாத்திக் கொண்டு தான்

நம் 

ஒரேயொரு அண்ணனை 

கடல் கடப்பதற்காய் கைவிட்டோம்.


புளியமிலைகளை பிடுங்கி மெல்கிற

கீரைப்பிடிச் சிறுமியின் வயதெனக்கு.

சேமக்கலம் தட்டுகிற

நீலக்காற்சட்டை வெறும்மேலன் தம்பி.


அப்பா கொழுத்திக் காட்டிய

கற்பூர ஆரத்தியின் 

வளைந்தாடிய சுடர் நடுவே,

அம்மா 

விம்மியழுததை நான் கண்டேன்.


செவ்வரத்தம்பூவும் மாலையுமாய்

எங்களின் சூலவைரவர் 

மௌனமாயிருந்தார்.


வீபூதிச் சிரட்டைக்குள் கைவிட்டு

அண்ணனின் 

நெத்தியப்பினார் அப்பா.


ஒருமுறை

எல்லோரும் அண்ணனைக் கட்டிப்பிடித்தார்கள்.


என்னை 

கடைசியாய் கொஞ்சியவனின்

மெலிந்தரும்பிய மீசையும், பருக்களும்

ஞாபகத்தில் உறைந்த மிச்சங்களாகி விட்டன.


கடைசி வரைக்கும்,

அண்ணாவின் ஒரு குரல் கூட

திரும்பி வரவேயில்லை.


வேம்பு போய்விட்டது.

கறையான் புற்று போய்விட்டது.. 

வைரவர்சூலம் போய்விட்டது.

இறுகியிறுகி அப்பா போய்விட்டார்.

தம்பி தம்பியென அனுங்கிக் கொண்டே

அம்மாவும் போய்விட்டாள்.


நான்

மிச்சமிருக்கிறேன்

என் வைரவருக்காக.


- தீபிகா-

23.10.2025

10.53 am.


Tks - photo

# நன்றி - வளர் சஞ்சிகை (13)


#தீபிகா 

#கவிதை 

#theepika 

#வளர்_13 

#ஈழம் #போர் #வைரவர் #மடை

ஆடுபிழை

 ஆடுபிழை


எதற்கிந்த மாலைகள்?

நானொரு, 

அப்பாவி வெள்ளாடு.

கடப்புக்குள் நின்று 

வாலாட்டிக் குதியங்குத்துகிற,

சோலியில்லாத சோனையாடு.


நீங்கள் பிழையாய் எண்ணுகிறீர்கள்.

திரும்பவும் சொல்கிறேன்.

எனது கழுத்து மணி 

வெறும் சத்தத்துக்கு தான்.


சும்மா கிடந்த என் நெற்றிக்கு

சூடம் காட்டுகிறீர்கள்.


சந்தியில் நின்றவற்றையெல்லாம்

பிடித்துப் பிடித்துச் சபையேற்றி விட்டு,

கடைசியில்,

ஆடுகள் ஓநாய்களானதென்று

அழுது புலம்புவதே உங்கள் வரலாறு.


நானொரு போதும்,

ஒரு துரும்பும் 

கிள்ளிப் போட்டதேயில்லை.

என்னை,

பப்பாசியிலிருந்து இறக்கி விடுங்கள்.


உங்களின் 

கண்ணுக்கெட்டாத வறுமையும்,

எனக்கு விளங்குகிறது.

அதற்காக,

என்னை வேள்வியில் தள்ளாதீர்கள்.


நான்,

" மே! மே! " என்று கத்துகிற

மெல்லிய வாடல் ஆடு.

வேறெதுவும்,

என் திருவாயால் சுட முடியாது.


------ xxx --------


- தீபிகா-

11.11.2025

12.22 pm.


Tks - photo - M.Rajeev gandhi


#ஆடுபிழை

#தீபிகா 

#கவிதை 

#theepika 

#ஈழம்

எம் பிள்ளைகளின் காற்று

 எம் பிள்ளைகளின் காற்று


நினைவிலூறுகிறது நெருப்பின் தணல்.


காடுகள் பாடும் கீதங்களில்,

பிரிவுத்தூளி அசைகிறது.


புல் மூடிய ஒற்றையடிப் பாதையில்

எவர் குரலையும் காணோம்.


மெளனத்தின் தவத்தில் இருக்கிறது

மரக்கட்டைப்பாலம்.


எந்தச் சிரிப்புக்களையும் கேட்கோம்!


சோகம் காய்ந்த இலைகளை

பரப்பி வைத்திருக்கிறது

தேக்கங்காடு.


யானை கடக்கும் 

நெடுவெயில் பாதையில்,

ஆடுகிற மாலைமயில் எங்கே?


குரங்குகள் தாவும் வீரை மரங்களில் 

கைபடாத பழங்கள் சிவந்திருக்கின்றன.


கூவிக்கூவித் தேடுகிறது குயில்.


ஒரு தலைகளுமற்று வாடியிருக்கிறது குளக்கரைப் பகல்.


கூடுதலாய் மொட்டுக் கட்டுகின்றன 

நித்திய கல்யாணிகள்.


கையசைத்துக் கொண்டு போன

நம் பிள்ளைகளின் காற்று

மெதுவாய் 

என் நெற்றி முட்டுகிறது.


- தீபிகா-

13.11.2025

07.33 pm.


நன்றி -  படம்


#தீபிகா

#ஈழம் 

#theepika 

#மாவீரர்

#எம்_பிள்ளைகளின்_காற்று

#வன்னி

#தமிழ்

இசைமுகம்

 இசைமுகம்


வறுமையின் இசைக்கு

ஒரு 

சோகத்தின் முகம் உண்டு.

மிதந்து மிதந்து

அது

எல்லோரது இதயங்களையும்

தொட்டுப் பார்க்கிறது.

சிலர்,

நின்று திரும்பிப் பார்க்கின்றனர்.

மிகச் சிலரை,

இசை இழுத்துக் கொண்டு வருகிறது.

பலர், 

அதை தாங்க முடியாமல்

விரைந்து கடக்கிறார்கள்.

யாசிக்கிற இசையின் கரங்கள்

காற்றின் முகத்தில்

அவமானத்தின் காயத்தை பரப்புகிறது.

எப்போதாவது சிலர்,

குறைந்த சில்லறைகளால்,

அந்த இசையை அங்கீகரிக்கிறார்கள்.

பசியுடன் அலையும் 

வறுமையின் சுருதியில்

எந்தச் சலனமுமையில்லை.

அது,

ஒரு உயர்ந்த கலையின் உச்சியில்,

அசைவற்ற தியானத்திலிருக்கிறது.


- தீபிகா-

15.11.2025

03.12 am.


Tks - artwork


#தீபிகா 

#இசைமுகம்

#theepika 

#ஈழம் 

#பசி #தியானம்