போராட்டம்
என் தாய்நிலத்தில்,
மரங்கள் இலையுதிர்ந்ததில்லை.
மனிதர்கள் உதிர்ந்தார்கள்.
செடிகளோ,
பூக்களை வைத்திருக்கவில்லை.
கல்லறைகள் வாங்கி வைத்திருந்தன.
நாங்கள்
நிலாவைப் பார்க்கவில்லை.
விமானங்களை
பார்த்துக் கொண்டிருந்தோம்.
பள்ளிக்கூடங்களில்
படிக்க வாய்க்கவில்லை.
பதுங்குகுழிகளுக்குள் படித்தோம்.
தேவாலயங்களில் பிணங்களாகின
எங்குள் குழந்தைகள்.
வைத்தியசாலைக்குள்,
சிகிச்சை கிடைக்கவில்லை.
துப்பாக்கிச் சன்னங்களே கிடைத்தன.
முட்கம்பிகள்
எங்களை இறுக்கிச் சுற்றின.
துப்பாக்கிகளால்
நாங்கள் மேய்க்கப்பட்டோம்.
எறிகணைகள்
எம் கனவுகளை துரத்திக் கொண்டிருந்தன.
தரைமட்டமான வீட்டில்
பல்லிமுட்டைகளைப் போல சிதறினோம்.
கறுப்புத் தலையாட்டிகள்,
பட்டப்பகலில் எங்களை விழுங்கின.
கடவுள் சிலைகள் முண்டங்களாகின.
யேசுவின் சிலுவையோ
உடைந்து தொங்கியது.
தென்னந்தோப்புக்கள்,
தலைகளற்ற கரிக்கட்டைகளாக நின்றன.
பனைகளோ, காவலரண்களில்
துண்டு துண்டாகக் கிடந்தன.
எல்லா இரவுகளிலும்,
துப்பாக்கிகள் ஆட்சி செய்தன.
பொய்களை ஒலிபரப்பின செய்திகள்.
வீதிகளெங்கும் செத்த காகங்கள்.
குடிசைகளெங்கும் இலையான்கள்.
உடைந்த மதகுகளுக்குள்
குடியிருந்தன சனங்கள்.
மைதானங்களில்,
பயம் அப்பிக் கிடந்தது.
பந்துகள் விளையாடிய இளைஞர்கள்
கால்கள் துண்டாடப்பட்டு இருந்தார்கள்.
கிணறுகள்,
கொல்லப்பட்ட சடலங்களால் மூடப்பட்டன.
தபாற்பெட்டிகளில்,
துப்பாக்கிச் சன்னங்கள் பூத்திருந்தன.
மிச்சமிருந்தவர்களைக் கணக்கிட்டோம்.
தொலைந்தவர்களின் கதை,
தொலைந்ததாகவே போனது.
கூரையும், சுவர்களுமற்ற வீட்டில்
நம் புதிய குழந்தைகள் பிறந்தன.
ஒரு குருதிச் சித்திரம் போல,
கிராமத்தின் முகம் இருந்தது.
பிள்ளைபிடிகாரர்களுக்குப்
பயந்து கிடந்தது பகல்.
இரவோ,
நாய்களிடம் மூச்சைக் கொடுத்துவிட்டு
துடித்துக் கொண்டிருந்தது.
பச்சை பயத்தின் குறியீடாக இருந்தது.
குரல் அடைக்கப்பட்டவர்கள்
பசியின் வரிசையில் நின்றார்கள்.
புரியாத மொழிகளால்,
கன்னங்களில் அறையப்பட்டோம்.
வயல்களெங்கும்
சப்பாத்துக்கள் உழுது திரிந்தன.
சூரியன்,
ஒரு சவம் போல வந்து போனது.
கேட்பாரற்ற பிறவிகளாயிருந்தோம்.
தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வு
தன்னைத்தானே,
மெதுமெதுவாகத் தூக்கிச் சுமந்தது.
இது,
மிக,
மிக,
மிக மிக அருகில்
நடந்த வரலாறு தான்.
நாங்கள் தான்,
வெகு,
வெகு,
வெகு வேகமாய்,
மறந்து போகிறோம்.
- தீபிகா-
24.10.2025
01.19 am.
Tks - photo - Aline Martello
#போராட்டம்
#ஈழம்
#தீபிகா
#கவிதை
#மறதி
#குருதிச்சித்திரம்

No comments:
Post a Comment