" வைரவர் மடை"
இந்திராகாந்தி இறந்ததற்குப் பிறகு வந்த
ஒரு பாரமான மாலைப்பொழுதில்
வைரவருக்கு
வடைமாலை சாத்திக் கொண்டு தான்
நம்
ஒரேயொரு அண்ணனை
கடல் கடப்பதற்காய் கைவிட்டோம்.
புளியமிலைகளை பிடுங்கி மெல்கிற
கீரைப்பிடிச் சிறுமியின் வயதெனக்கு.
சேமக்கலம் தட்டுகிற
நீலக்காற்சட்டை வெறும்மேலன் தம்பி.
அப்பா கொழுத்திக் காட்டிய
கற்பூர ஆரத்தியின்
வளைந்தாடிய சுடர் நடுவே,
அம்மா
விம்மியழுததை நான் கண்டேன்.
செவ்வரத்தம்பூவும் மாலையுமாய்
எங்களின் சூலவைரவர்
மௌனமாயிருந்தார்.
வீபூதிச் சிரட்டைக்குள் கைவிட்டு
அண்ணனின்
நெத்தியப்பினார் அப்பா.
ஒருமுறை
எல்லோரும் அண்ணனைக் கட்டிப்பிடித்தார்கள்.
என்னை
கடைசியாய் கொஞ்சியவனின்
மெலிந்தரும்பிய மீசையும், பருக்களும்
ஞாபகத்தில் உறைந்த மிச்சங்களாகி விட்டன.
கடைசி வரைக்கும்,
அண்ணாவின் ஒரு குரல் கூட
திரும்பி வரவேயில்லை.
வேம்பு போய்விட்டது.
கறையான் புற்று போய்விட்டது..
வைரவர்சூலம் போய்விட்டது.
இறுகியிறுகி அப்பா போய்விட்டார்.
தம்பி தம்பியென அனுங்கிக் கொண்டே
அம்மாவும் போய்விட்டாள்.
நான்
மிச்சமிருக்கிறேன்
என் வைரவருக்காக.
- தீபிகா-
23.10.2025
10.53 am.
Tks - photo
# நன்றி - வளர் சஞ்சிகை (13)
#தீபிகா
#கவிதை
#theepika
#வளர்_13
#ஈழம் #போர் #வைரவர் #மடை

No comments:
Post a Comment